Advertisement

கேவலமான 'டிவி' சீரியல்களை புறக்கணியுங்கள்!

Share

எஸ்.மேரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'டிவி' நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்க கத்திப் பேசுதல், சோக இசைகள் மற்றும் சாவு மேள தாள இசைகள் இவையெல்லாம், உங்கள் வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சத்தை சீர்குலைத்து விடும்.


இதனால், அபசகுனமான நிகழ்ச்சிகளின் காட்சிகள், 'டிவி'க்குள் நடந்தாலும், அதன் ஒளி - ஒலி அதிர்வுகளின் நிகழ்வுகள், நம் வீட்டிற்குள்ளேயே நடப்பதால், குடும்பத்தில் பல பிரச்னைகள் உருவாகும்; இது, அசைக்க முடியாத ஆன்மிக நம்பிக்கையாளர்களின் ஆய்வு. இதனால், பல நோய்கள் வரலாம். வீட்டில், பணம் தங்காமல் போகலாம்; வீண் செலவுகள் ஏற்படலாம்; தொழில் நஷ்டம் ஏற்படலாம் என, அதிர்ச்சி தரும் ஆன்மிக ஆய்வு முடிவுகள், ஒரு பக்கம் எச்சரிக்கை செய்கின்றன.


ஆன்மிக நம்பிக்கை இல்லாதோருக்கும், அதிர்ச்சி தரும் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வு முடிவுகள், அபாயகரமானதாக உள்ளன. மனிதருக்கு கண் பார்வை கோளாறில் ஆரம்பித்து, மன இறுக்கம், மன அழுத்தம், மனநோய் வந்து, உடல் எடை அதிகரிக்கும். இதன் தொடர்ச்சியாக, சர்க்கரை வியாதி, மாரடைப்பு, இதயக் கோளாறு, ரத்த அழுத்தம், கழுத்து எலும்பு தேய்மானம், தலை
சுற்றல், தலைவலி, மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்னைகள் வரும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம், பிறரை எப்படி கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது, கணவன் - மனைவிக்குள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி, கள்ளக் காதல் தொடர்பு எப்படி என, 'டிவி' நாடகங்களில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.


இத்தனை பாதிப்புகள் தெரிந்ததும், தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள், டி.ஆர்.பி., ரேட்டிங் அதிகரிக்க, சுய லாபத்துக்காக மக்களைச் சீரழிக்கும், இப்படிப்பட்ட,'டிவி' சீரியல்கள் தயாரிக்க முக்கியத்துவம் தருகின்றன. உங்கள் விலை மதிப்பில்லா ஓய்வு நேரத்தை, அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள கணவன் - மனைவி, பெரியவர்களோடும் சிரித்து பேசி பாசத்துடன் பழகி வாழ்க்கையை அனுபவியுங்கள். குறைந்த பட்சம், நல்லதொரு, 'டிவி' நிகழ்ச்சிகளை பாருங்கள். மக்களே... தயவு செய்து கேவலமான, 'டிவி' நாடகங்களை புறக்கணியுங்கள்!

அரசியல் குறுக்கீடு இன்றி அதிகாரிகள் செயல்பட முடியுமா?அ. அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விழுப்புரம் மாவட்டம், நடுப்பக்கம் கிராமத்தில், ஊராட்சி தலைவர் பதவிக்கு, 50 லட்சம் ரூபாயும், ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு, 20 லட்சம் ரூபாயும் ஏலம் விட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவோருக்கு, இச்சம்பவம் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதற்காகத் தான், உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இவ்விஷயத்தில், ஒரு கண்ணில் வெண்ணெயும், மறு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போல, தேர்தல் ஆணையம் செயல்படுவதாக தோன்றுகிறது. உள்ளாட்சி தேர்தலில் கூட, பல கோடிகள் வைத்திருப்போர் தான் போட்டியிட முடியும். ஆனால், ஊராட்சியில் ஏலம் விடப்படுவதை, ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், ஏலம் விடும் அரசியல் கட்சியினர் மொத்த வியாபாரி ஆகவும், ஓட்டுக்கு பணம் கொடுப்போர், சில்லரை வியாபாரிகள் ஆகவும் கருத வேண்டியுள்ளது. இந்நிலை மாற வேண்டும். அதற்கு, தேர்தல் அதிகாரிகள் பார்வை, வேகம், முழுமையாக, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முற்பட வேண்டும்.


தலைவர் பதவிகளை ஏலம் விடுவதும், ஒட்டுமொத்தமாக, வீடு வீடாக பணம் கொடுப்பதும், ஒரே அளவுகோலோடு, தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை வேடிக்கை பார்ப்பதும், ஏலம் விடுவதை இரும்பு கரத்தால் ஒடுக்க நினைப்பதும், இரட்டை
வேடமாக தோன்றுகிறது. இவற்றை களைய, தெம்பும், திறனும், திராணியும் கொண்ட அதிகாரிகளாக, தேர்தலுக்காக மாற வேண்டும். அரசியல்வாதிகளின் குறுக்கீடும், ஆட்சியாளர்களின் குறுக்கிடும் இல்லாத வகையில் அதிகாரிகள் செயல்பட்டால், உலகின் ஜனநாயக நாடு எனும் பெருமையை மீட்டெடுக்க முடியும். உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் குறைகள் எல்லாம்
தீர்க்கப்பட்டால், நாடும் மன மகிழ்ச்சியோடு செழிக்கும்!


நாட்டை கெடுப்போர் அரசியல்வாதிகள் மட்டுமல்ல...!
எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் மத்திய அமைச்சரவையில், நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்த, ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், பலமுறை முன் ஜாமின் கேட்டும், அது மறுக்கப்பட்டு, இறுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.


சிறைக்குள் இருந்தும், தொடர்ந்து முன் ஜாமின் கேட்டு மனு போட்டு, ஒரு வழியாக, முன் ஜாமினில் வெளியேறி விட்டார். வெளியே வந்தும், சும்மா இருக்கவில்லை. என்னமோ,
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைக்கு சென்று, செக்கிழுத்து அவதிப்பட்டது போல, 'கப்சா' விட்டு, கயிறு திரித்து, புத்தகம் எழுதப் போகிறாராம்; அவர் மட்டும் விதிவிலக்கல்ல! காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி வகிப்பவர், சோனியா. இவரது மருமகனும், ராகுலின் மச்சானும், பிரியங்காவின் கணவனுமான, ராபர்ட் வாத்ரா; இவர், ஸ்பெயின் நாட்டுக்குச் செல்ல, டில்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.


இவர் மீது, பிரிட்டன் தலைநகர் லண்டனில், சொத்துக்கள் வாங்கிய விவகாரத்தில், பணப்பரிவர்த்தனை மோசடி செய்துள்ளதாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில், 'ராபர்ட் வாத்ரா வெளிநாடு செல்லக் கூடாது' என்ற நிபந்தனையில், முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 'சாட்சிகளை கலைத்து விடுவார்' என, அமலாக்கத் துறை எடுத்துக் கூறி, நீதிமன்றம், 'வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது' என, நிபந்தனை விதித்து, டில்லி உயர் நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி இருந்தது. இப்போது, அந்த நிபந்தனையையும்
திரும்பப் பெற்று, அவர் வெளிநாட்டு பயணத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.


வெளிநாடு செல்லும் ராபர்ட் வாத்ரா, சாட்சிகளை கலைத்து விட மாட்டாரா...இதில் என்ன நிச்சயத் தன்மை இருக்கிறது. 'மருத்துவ சிகிச்சை பெற, வெளிநாடு செல்கிறேன்' என, அனுமதி பெற்றுள்ளாராம், ராபர்ட் வாத்ரா. இந்தியாவில், சிறந்த மருத்துவமனைகள், தலைசிறந்த
மருத்துவர்கள் இல்லையா... நாட்டை கெடுத்துக் கொண்டிருப்போர், அரசியல்வாதிகள் மட்டுமல்ல...!


இதை குறைக்க பிரதமர் மோடியை நாடே நம்புகிறது!

சொ.செல்வராஜ், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: பூமியின் மொத்த நிலப்பரப்பில், 17 சதவீதத்தை மனிதர்களே ஆக்ரமித்துள்ளனர். இதில், இந்தியர்களாகிய நாம், 2.4 சதவீதத்தை ஆக்கிரமித்து உள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய தேசிய குடும்ப நல ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, நாட்டில், 0.3 சதவீத ஆண்கள், 36 சதவீதப் பெண்கள் மட்டுமே, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.


மணிப்பூரில், 30 சதவீத பெண்களும், தமிழகத்தில், 10 சதவீத பெண்களும், கருத்தடை சிகிச்சை செய்து கொள்கின்றனர். மக்கள் தொகை பெருக்கத்தில் இந்தியா, இதே வேகத்தில் சென்றால், அடுத்த எட்டு ஆண்டுகளில் முதலிடத்தை பிடிக்கும் என, ஆய்வாளர்கள்
அதிர்ச்சியூட்டுகின்றனர். இந்தியாவில், பெருகிவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில், மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடம் வகிக்கும் சீனாவுக்கு அடுத்து, இந்தியா இரண்டாம் இடத்தை வகித்து வருகிறது.சீனாவில், 143.4 கோடி பேரும், இந்தியாவில், 136.8 கோடி பேரும் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை பெருக்கத்தால், நாட்டின் இயற்கை வளங்கள் அழிவிற்கும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் காரணமாகி விடுகிறது. இது, நாட்டில் தரமான உணவு, துாய்மையான காற்று, சுகாதாரமான குடிநீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட காரணமாக அமைந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. பிற நாடுகளை காட்டிலும், 65 சதவீத இளைஞர்களை கொண்ட, மனித வளம் மிக்க நாடாக, இந்தியா திகழ்கிறது.


ஆனாலும், வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பாலும், நாட்டின் பொருளாதார ஏற்ற, இறக்கங்கள் போன்றவற்றாலும், நாட்டின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவில் இல்லை. மக்கள் தொகையை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய அதிரடி நடவடிக்கைகளாக இவை இருக்க வேண்டும்.


இந்தியாவில், ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது. அதற்கு மேல்
பெற்றால், ரேஷன் பொருட்கள், இடஒதுக்கீடு, அரசின் சிறப்பு சலுகை, இலவசம் மற்றும் மானியம் போன்றவற்றை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும். அரசு வேலை வாய்ப்புகள் அவர்களுக்கு மறுக்கப்பட வேண்டும். தேச நலனுக்கு எது சரியோ, அதை அமல்படுத்த, மத்திய அரசு முன் வர வேண்டும்.


துணிவாக, துரிதமான முடிவெடுக்கும் வல்லமை கொண்டவர், பிரதமர் மோடி; மக்கள் தொகை பெருக்க விவகாரத்தில், அதை தடுக்க அவர் அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் என, நாடே நம்புகிறது!


அரசியல்வாதிகளே... மத நல்லிணக்கத்தை கெடுக்காதீர்!

சொ.பீமன், விருதுநகரிலிருந்து எழுதுகிறார்: கடாரம் கொண்ட ராஜேந்திர சோழன், எவ்வளவு வலிமை மிக்கவர் என்பது, உலகறிந்த உண்மை. எந்த விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலத்தில், பெரிய படையை பராமரித்தும், அவர்களை கொண்டு செல்வதற்கான, பல கப்பல்களையும் வைத்தும், அயல்நாடுகளை கைப்பற்றினார் என்பது வரலாறு. கம்போடியாவில், உலகிலேயே மிகப் பெரிய, ஹிந்துக் கோவில் உள்ளது. அதை, 500 ஏக்கரில் நிறுவி உள்ளதை, உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


மன்னர் ராஜேந்திர சோழன் எண்ணியிருந்தால், கம்போடியா மக்கள் அனைவரையும் ஹிந்துக்களாக மாற்றியிருக்கலாம்; ஆனால், அதை அவர் செய்யவில்லை. இதுவே, அவர் ஹிந்து வெறியர் அல்ல, என்பதற்கான எடுத்துக்காட்டு. கடவுள் நம்பிக்கை உள்ளோரையும்,
இல்லாதோரையும் சமமாக கருதுவது, ஹிந்து மதம். ஹிந்து மதத்தில் தான், ஆத்திகன், நாத்திகன் என்று இரு சாரார் உள்ளனர். மற்ற மதங்களில், அவ்வாறு உள்ளதாக தெரியவில்லை. இந்திய அரசியலமைப்பு, இந்திய குடிமக்கள் அனைவருக்கும், சமய சுதந்திரத்தை அளிக்கிறது. எல்லா சமயங்களும், ஒரே மாதிரியாக கருதப்பட வேண்டும்.


பொதுவாக, இந்தியாவில், ஒரு மதத்தினர், மற்றொரு மதத்தை இழிவுபடுத்தி பேசுவதில்லை. ஆனால், ஹிந்து மத அரசியல்வாதிகள் தான், கூட்டணியில் இருக்கும் போதே, கூட்டணி தலைவரை புகழ்ந்து பேசி, கூட்டணி மாறியபின் அவர் குறைகள், குற்றங்களை, அரசியல் லாபத்துக்காக விமர்சிப்பது, கூட்டணி தர்மம் ஆகாது. மதங்களை பற்றி பேசுவதற்கு, மதத் தலைவர்கள் இருக்கின்றனர். இதில், அரசியல்வாதிகள் மூக்கை நுழைப்பது தேவையற்றது. இழிவாக பேசி, சிறுபான்மை மக்களின் ஒட்டுகளை பெற முயற்சிக்கின்றனர்.மக்கள் மனதில், மதம் பற்றி இழிவாக பேசி, நஞ்சை கலந்து, மத நல்லிணக்கத்தை கெடுக்காதீர்!

மனித மிருகங்களுக்கு வக்காலத்து வாங்குகின்றனரே!

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரபு நாடுகள் போல, இந்தியாவில் சட்டங்கள் கடுமையாக இல்லாததே குற்றங்கள் பெருக காரணம். கொடியவர்களை, தெலுங்கானா மாநிலத்தில் 'என்கவுன்டர்' முறையில் தண்டித்தது போல தண்டிப்பது தான், இனி, இம்மாதிரி அராஜகங்கள், அக்கிரமங்கள் நடக்காமலிருக்க வழி! ஐதராபாதில், பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்ற நான்கு கயவர்களை, 'என்கவுன்டரில்' போலீசார் சுட்டுக் கொன்றனர்.


இதற்கு, 'போலீசார் சட்டத்தை, தங்கள் கையில் எடுத்துள்ளனர்; விசாரணை இல்லாமல் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது, தவறான முன்னுதாரணமாகி விடும்' என, பா.ஜ., - எம்.பி.,மேனகா கூறியுள்ளார். சட்டத்தை காப்பாற்ற வேண்டிய நீதிபதியே ஆனாலும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கு, இப்படி ஒரு கொடுமை நடக்கும் போது, விசாரணைக்கு காத்திருக்க மாட்டார். இதை, நான் சிகப்பு மனிதன் என்ற படத்தில் இயக்குனர் பாக்யராஜ் அழகாக காட்சிப்படுத்தி
இருப்பார். பொன்னையோ, பொருளையோ கொள்ளையடித்து இருந்தால் நீதிமன்றம், வழக்கு, விசாரணை, தண்டனை என்று படிப்படியாக, சட்டம் தம் கடமையை செய்யலாம்.


ஆனால், இது பெண்ணின் மானப் பிரச்னை; மானத்தை அழித்தவர்கள், பெண் மருத்துவரின் உயிருக்கும் உலை வைத்தனர். இந்த காட்டுமிராண்டி கும்பலுக்கு, வக்காலத்து வாங்குவது வேடிக்கை. அன்று, துச்சாதனனிடமிருந்து பாஞ்சாலியை காக்க, கண்ணன் இருந்தான்; இன்று, பாஞ்சாலிகள், பல துச்சாதனர்களிடம் சிக்கி தவிக்கின்றனர். சட்டங்கள் திருத்தப்பட்டால் ஒழிய, இவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் வழங்காத சலுகையை, தனியொருவனாக
தந்துள்ள உண்மையான, தெலுங்கானா மாநில போலீஸ் அதிகாரி, 'ஹீரோ' சஜ்ஜனாரை
பாராட்டுவோம்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • venkat Iyer - nagai,இந்தியா

    திரு.அப்பர் சுந்தரம் கூறியது போல,ஊராட்சி தலைவர்கள் பதவிக்காக பல லட்சங்களை கொடுப்பதற்கான காரணங்களை முதலில் ஆராய வேண்டும் ஊராட்சிக்கு மத்நதிய அரசின் பஞ்சாயத்து ராஜ் கீழ் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூபாய் ஐந்து கோடிக்கு மேல் நிதி வருகிறது.மாநில அரசும் அதற்கு சமமான நிதியை ஊரக வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்கின்றனர்.ஒன்றிய சேர்மன் மறைமுக தேர்தல் என்பதால் ஊராட்சி தலைவர் பதவிக்கு மதிப்பு கிடைக்கின்றது.பணம் யார் அதிகம் கொடுக்கின்றாரோ அவருக்கு பஞ்சாயத்து தலைவர் ஓட்டு போட்டு நேரடியாக அந்த படத்தினை தனது பாக்கேட்டில் போட்டுக் கொள்ளலாம்.கிராம பஞ்சாயத்து தலைவர் குளங்களை தூர் வாருகிறேன் என்று சொல்லி நிறைய சைடில் மணல் வண்டல் மண் எடுத்து சம்பாதிக்க முடியும்.எங்கள் பகுதி ஊராட்சி தலைவர் போன் முறை இரண்டு வீடுகளை கட்டியதோடு நிலமும் ஐந்து ஏக்கர் வாங்கி உள்ளார்.இது எப்படி சாத்தியம் என்பது மக்களுக்கு தெரியாமல் இல்லை.தனி மனிதன் கட்சி பாகுபாடு இல்லாமல் ஊராட்சி வளர்ச்சிக்கு பாடுபட நினைப்பவர்கள் இப்போது எல்லாம் ஜெயிப்பது சாத்தியம் இல்லை.என்னிடம் பணிபுரியும் தொழிலாளி ஐந்து ஓட்டுக்கள் இருப்பதை தெரிவித்து பத்தாயிரம் தான் கேட்டாராம்.அவருக்கு தருவதாகக் ஒரு வேட்பாளர் கூறிய நிலையில் எதிர் வேட்பாளர் பதினைந்தாயிரம் தருவதாக கூறிய நிலையில் ,அதை மறைக்க முன்பு பேரம் பேசிய முதல் வேட்பாளரின் தனக்கு பணம் வேண்டாம் ஓட்டு போட்டு விடுவதாக பொய் சொல்லி வைத்துள்ளாராம்..இதுதான் நிலை.இந்த நிலையில் பஞ்சாயத்து ஊராட்சிகள் எப்படி வளர்ச்சி பாதையில் செயல்படப்போகின்றது என்பது குடிமகன்கள் கையில்தான் இருப்பது உண்மை.தேர்தல் செயல்பாடுகளில் மாற்றங்கள் வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை.

  • S.V.SRINIVASAN - Chennai,இந்தியா

    நீங்கள் கூறும் அரசியல் குறுக்கீடு இல்லாமல் அதிகாரிகள் செயல்பட முடியுமா என்பதெல்லாம் காமராஜர், கக்கன் காலத்தோடு மலையேறி விட்டது.

  • Darmavan - Chennai,இந்தியா

    வதேரா வெளி நாட்டு பயணம் கோர்ட்டின் செயல். கோர்ட் பொறுப்பை உணராதவரை இந்த குற்றவாளிகள் தப்பிக்க முடியும்.கோர்ட் சரி செய்யப்படவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement