Advertisement

காதில் வாங்காத கார்த்தி!

Share

சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம், புதுக்கோட்டைக்கு வந்தார். அப்போது, நிருபர்களிடம் அவர், 'உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறதா என்பதை உறுதிப்படுத்தவே, தி.மு.க., மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளது. தேர்தலை கண்டு
நாங்கள் பயப்படவில்லை. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்' என்றார்.


மூத்த நிருபர் ஒருவர், 'அப்ப... கோர்ட் தீர்ப்பை ஏத்துக்கிறீங்கன்னு சொல்லுங்க... உங்க அப்பா விஷயத்திலும், உங்க விஷயத்திலும் கோர்ட் தீர்ப்பை ஏத்துக்குறீங்கல்லியா...' எனக் கேட்க, கார்த்தி காதில் அது ஏறவில்லை!


'அமைச்சர் சொல்வது அ.தி.மு.க.,விற்கும் சேர்த்தா...!'





மூதறிஞர் ராஜாஜி பிறந்த நாளையொட்டி, சென்னை பாரிமுனையில் விழா நடந்தது. அவர் சிலை அருகே, அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு, அமைச்சர் ஜெயகுமார் தலைமையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், மலர் துாவி மரியாதை செலுத்தினர். பின், நிருபர்களிடம், அமைச்சர் ஜெயகுமார், 'தி.மு.க., குழப்பத்தில் உள்ளது. அதன் தலைவர் ஸ்டாலின், குழப்பவாதியாக உள்ளார். இதற்கு காரணம், முதல்வர் பதவி. அவர் மட்டுமல்ல; முதல்வர் ஆக நினைப்போர், நித்தியானந்தா போல், ஒரு தீவு வாங்கி, அங்கு தங்களை முதல்வராக அறிவித்து கொள்ளலாம்.

தமிழகத்தில் முதல்வராக முடியாது. அது, அ.தி.மு.க.,வால் மட்டுமே முடியும்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க.,விலே நிறைய பேர், முதல்வர் கனவில் உள்ளனர். அவர்களுக்கும் சேர்த்து, அமைச்சர் பதில் கூறுகிறாரோ...!' என, 'கமென்ட்' அடிக்க, அங்கு மற்றவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.


'இது கூட எம்.எல்.ஏ.,வுக்கு தெரியலை!'





ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பங்களாபுதுார், பஞ்., யூனியன் துவக்கப் பள்ளியில், முப்பெரும் விழா நடந்தது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் பங்கேற்றனர். அந்தியூர், எம்.எல்.ஏ., ராஜாகிருஷ்ணன், 'ஒரு பள்ளித் துறையிலே, ஒரு நடுநிலைப் பள்ளியிலே, ஒரு துவக்கப் பள்ளியிலே, இங்கு பெரும் விழா ஏற்பாடு செய்துள்ளனர். இது, துவக்கப் பள்ளி விழாவா அல்லது ஊராட்சி ஒன்றியத்தின், மாணாக்கர்களின் மாநாடா என்ற அளவில், சிறப்பாக நடத்தி கொண்டிருக்கின்றனர்...' என்றார்.


இதை கவனித்த ஆசிரியர் ஒருவர், 'நிகழ்ச்சி நடப்பது, துவக்கப் பள்ளியா,நடுநிலைப் பள்ளியான்னு கூட, நம்ம, எம்.எல்.ஏ.,வுக்கு தெரியலை. அதனால் தான், இவர் பேசுறது எல்லாமே, ஒரே உளறலா இருக்கு...' என, நொந்து பேசினார். மற்றொரு ஆசிரியர், 'எல்லாம், நாம செஞ்ச பாவம்...' என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement