dinamalar telegram
Advertisement

அரிசி வழங்கி ஓட்டு வேட்டையாடும் தி.மு.க., பிரமுகர்!

Share

''ஆம்புலன்ஸ்களை மடக்கி, கொள்ளை லாபம் அடிச்சுண்டு இருக்கா ஓய்...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார் குப்பண்ணா.

''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''விபத்துல சிக்கியவாளை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைச்சிண்டு போறதுக்கு, '108' அவசர கால ஆம்புலன்ஸ்களை அரசாங்கம் இயக்கிண்டு இருக்கோல்லியோ... ஆனா, விபத்துல சிக்கினவாளை, தனியார் மருத்துவமனையில சேர்க்கறதுல தான், ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
அக்கறை காட்டறா ஓய்...

''அவாளுக்கு, தனியார் மருத்துவமனைகள் சார்புல, 'கவனிப்பு'ம் நடக்கறது... சென்னையில, நாலைந்து தனியார் மருத்துவமனைகள் இந்த மாதிரி செயல்படறதாம்...

''இது சம்பந்தமா, சென்னை, ஓ.எம்.ஆர்., சாலையில இருக்கற ஒரு தனியார் மருத்துவமனை பத்தி, அரசு தரப்புல விசாரணை நடக்கறது...


மனுஷாள் உயிரோடு விளையாடற இந்த மாதிரியானவா மேல, அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கணும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''ஆபீசையே மாத்திட்டு போயிட்டாருல்லா...'' என, வேறு விஷயத்திற்கு மாறினார், அண்ணாச்சி.


''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.


''சென்னை எழும்பூர்ல, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் ஆபீஸ் இருக்கு... இங்க, தலைமை அதிகாரிக்கு, அடுத்து ஒரு அதிகாரி இருந்தாரு வே...

''இவர் இப்ப, இந்த ஆபீசை விட்டு, தலைமைச் செயலகத்துக்கு போயிட்டாராம்... தமிழகத்துல முதலீடு செய்ற நிறுவனங்களுக்கு, தேவையான வசதிகளை செய்து தர்ற பணியை, அவருக்கு குடுத்திருக்காவ வே...

''பழைய ஆபீஸ்ல இருந்தப்ப, அவர்கிட்ட இருந்த கையெழுத்து போடுற அதிகாரத்தை, துறையின் தலைவர் பறிச்சிட்டாரு... 'அந்த கோபத்துல தான், அதிகாரி, கோட்டைக்கு போயிட்டார்'னு சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''கார்த்திகேயன் தள்ளி உட்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''கேரள நிவாரணத்துக்கு வசூல் செஞ்ச அரிசியை, உள்ளாட்சி தேர்தல் ஓட்டு வேட்டைக்கு பயன்படுத்துறாங்க...'' என்றார்.


''எங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''சென்னை மாநகராட்சி, மாதவரம், 25வது வார்டை, மகளிர் வார்டா மாத்தியிருக்காங்க... இங்க, தி.மு.க., பிரமுகர் ஒருத்தர், கட்சியில உறுப்பினரே இல்லாத தன் மனைவியை நிறுத்த முடிவு செஞ்சிருக்காருங்க... இதுக்காக, வார்டுல இருக்கிற ஒவ்வொரு குடும்பத்துக்கும், தலா, 10 கிலோ அரிசியை பொங்கல் பரிசா குடுத்துட்டு இருக்காருங்க...

''தி.மு.க., பிரமுகரின் அண்ணன், கட்சியில மாவட்ட பொறுப்புல இருக்கார்... சில மாசங்களுக்கு முன்னாடி, கேரளாவுல வெள்ளத்தால பாதிக்கப்பட்டவங்களுக்கு, தி.மு.க., சார்புல, அரிசி, போர்வை உள்ளிட்ட பொருட்களை வசூல் செஞ்சாங்க...

''அப்ப, 400 மூட்டை அரிசியை பதுக்கி, ஒரு குடோன்ல இருப்பு வச்சிருந்தாங்க... இந்த அரிசியை தான், வாக்காளர்களுக்கு குடுத்துட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''சுதர்சனமும், நந்தகோபாலும் ஜோடியா எங்க வே கிளம்பிட்டாவ...'' என, தெருவைப் பார்த்து, முணுமுணுத்தபடியே அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் நடையைக் கட்டினர்.

ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட, 'அஜால் குஜால்' அதிகாரி!

''நிர்வாகிகள் விருப்பத்தை நிறைவேற்றி வச்சிட்டாரு பா...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.

''எந்தக் கட்சி தகவலுங்க...'' என விசாரித்தார், அந்தோணிசாமி.


''அ.தி.மு.க.,வோட, தே.மு.தி.க., தரப்புல, உள்ளாட்சி தேர்தல், 'சீட்' பங்கீடு பத்தி பேச குழு
போட்டிருக்காங்களே... குழுவுல, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், மாநில நிர்வாகிகள் மோகன்ராஜ், பார்த்தசாரதி இருக்காங்க பா...


''ஆனா, 'எல்லா வேலைகளையும் சுதீஷ் பார்த்துக்குவார்... மத்த நிர்வாகிகள், ஒப்புக்கு
சப்பாணியா தான் இருப்பாங்க'ன்னு ஏற்கனவே பேசியிருந்தோம்...


''ஆனா, இந்த முறை, விஜயகாந்த் போட்ட உத்தரவால, அ.தி.மு.க.,வோட பேச்சு நடத்த, மோகன்ராஜ், பார்த்தசாரதியை சுதீஷ் அழைச்சிட்டு போயிருக்காரு பா...'' என்றார் அன்வர்பாய்.


''விஜயகாந்த் பத்தி, என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குல்லா...'' என, களத்தில் குதித்த
அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சென்னை, சாலிகிராமம், கண்ணம்மாள் தெருவுல விஜயகாந்த் வீடு இருக்கு... இந்த வீட்டை, தன் திருமணத்துக்கு முன்னாடியே, விஜயகாந்த் கட்டிட்டாரு... 30 வருஷங்களுக்கும் மேலா இங்கேயே இருந்தவர், அப்பப்ப, வீட்டை, 'ஆல்டர்' பண்ணிட்டு இருந்தாரு வே...

''இப்ப, அவரது மகன்கள் வளர்ந்துட்டாவ... பெரிய மகனுக்கு, சீக்கிரமே கல்யாணம் நடக்க போவுதுல்லா... எல்லாருக்கும் இப்ப இருக்கிற வீடு பத்தாதுன்னு நினைச்சு, காட்டுப்பாக்கத்துல பிரமாண்ட பங்களாவை, விஜயகாந்த் கட்டிட்டு இருந்தாரு வே...


''பல வருஷங்களா நடந்த கட்டுமான பணிகள் முடிஞ்சு, இப்ப, 'பெயின்டிங்' நடந்துட்டு
இருக்கு... தை பிறந்ததும், புது பங்களாவுல பால் காய்ச்சி குடியேற, விஜயகாந்த் குடும்பம்
தயாராகிட்டு இருக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.


''வசூல், கட்டப் பஞ்சாயத்து, காம லீலைன்னு அழிச்சாட்டியம் அதிகமானதால, அதிரடியா துாக்கியடிச்சுட்டா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.


''எல்லா தப்பு, தண்டாக்களையும் குத்தகைக்கு எடுத்திருக்கிறவர் யாருங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.


''கோவை, கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரியை தான் சொல்றேன்... 12 வருஷத்துக்கும் மேலா அங்கேயே இருக்கறதால, கள்ள லாட்டரி, மது விற்பனை மாமூல், கட்டப் பஞ்சாயத்துன்னு கரை கண்டவராகிட்டார் ஓய்...


''இவரை, வேற எங்கே மாத்தினாலும், எஸ்.பி., அலுவலகத்துல இருக்கற செல்வாக்கை பயன்படுத்தி, பழைய இடத்துக்கே வந்துடறார்...


அது மட்டுமில்லை... பெண்கள் விஷயத்துலயும், அதிகாரி படு, 'வீக்'கா இருந்திருக்கார் ஓய்...


''காமரசம் சொட்ட சொட்ட, சில பொம்மனாட்டிகளிடம் இவர் பேசிய, 15க்கும் மேற்பட்ட ஆடியோக்கள், போலீஸ் வட்டாரங்கள்ல பரபரப்பா வலம் வந்துண்டு இருக்கு... இப்போதைக்கு இவரை, ஆயுதப் படைக்கு துாக்கியடிச்சிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.


''வர்க்கி வியாபாரி ஆறுச்சாமி வரார்... ஊட்டி வர்க்கி வாங்கி வையும் நாயர்...'' என்றபடியே அண்ணாச்சி கிளம்ப, பெரியவர்கள் பின்தொடர்ந்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • S.V.SRINIVASAN - Chennai,இந்தியா

    தி மு க கட்சி காரர்கள் அவர்களுடைய கட்சி கொடுத்த நின்வரான பொருட்களையே திருடராங்கன்னா இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்தால் குலை நடுங்குகிறது. தமிழக மக்களே உஷார். தயவு செய்து வரும் 2021 தேர்தலில் தி மு க வை தோற்கடியுங்கள்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement