Advertisement

நீர் பற்றாக்குறையை நிரந்தரமாக தீர்க்க வழிகள் இருக்கு!

Share

எஸ்.ஆர்.சோலை ராகவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால், அணைகள், ஏரிகள், குளங்கள் என, அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தண்ணீரை சேமித்து வைக்க வசதி இல்லாததால், பல பகுதிகளில் தண்ணீர் வீணாகிறது. அதுமட்டுமின்றி, குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதுவும் அப்புறப்படுத்த முடியாமல் வீணாகிறது.

எனவே, ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களில் தண்ணீர் எந்தெந்த பகுதிகளில் தேங்கி நிற்கிறது; அது, அப்புறப்படுத்த முடியாத நிலையில், நீண்ட நாட்களாக நிற்கிறதா என்பதை கண்டறிந்து, குறிப்பிட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைக்கலாம். தண்ணீர் தேங்கி, அப்புறப்படுத்த முடியாத நிலை உள்ள பகுதிகளில், தண்ணீர் தேங்கி நிற்கும் போதே, குறிப்பிட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு தோண்ட ஆரம்பிக்க வேண்டும். இதனால், தேங்கி நிற்கும் தண்ணீர், பூமிக்குள் செல்லும்.

சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு செல்லும். இந்த ஆழ்துளை கிணறுகள் குறைந்தபட்சம், 30 அடியிலிருந்து, 500 அடி வரை இருக்கலாம். இது, அமைக்கப்பட்ட பின், ஆழ்துளை கிணற்றில், எந்த உயிரினமும் விழுந்து விடாதபடி, பாதுகாப்பு வேலிகளை அமைக்க வேண்டும். தண்ணீர் மட்டும் கிணறுக்கு செல்லும் வகையில், வழி செய்து வைக்க வேண்டும்.தமிழகம் முழுவதும், ஆழ்துளை கிணறுகளை அமைக்கலாம். இந்த அமைப்பில் தேவைப்பட்டால், அடி பம்ப் வைத்தும், தண்ணீர் இறைத்துக் கொள்ள வசதிகள் செய்யலாம்.

இப்போதிருந்தே, கடலில் மழைநீர் வீணாவதை தடுக்க, தடுப்பு அணைகள் கட்டி, தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். இதனால், நிரந்தரமாக தண்ணீர் பற்றாக்குறையை போக்க முடியும்!

இது தானே இப்போதுள்ள நடைமுறை!பி.ஸ்ரீபாதராஜன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தனியார் நிறுவனம், 20 மாநிலங்களில் மேற்கொண்ட ஆய்வு பற்றியும், அதன் முடிவுகளையும், பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன.அதன்படி, லஞ்சம் பெறுவதில், ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்திலும், பீஹார் இரண்டாவது இடத்திலும், உத்தரபிரதேசம் மூன்றாவது இடத்திலும், தமிழகம் ஆறாவது இடத்திலும் உள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது; இது, சற்றே ஆறுதல் அளிக்கிறது.

அடுத்த ஆண்டு, தமிழகம் முதலிடத்திற்கு வந்தாலும், ஆச்சரியப்படுவதிற்கில்லை.தமிழகத்தை பொறுத்தவரை, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பொதுமக்களில், 62 சதவீதத்தினர், தங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவு பெற, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனராம். கடந்த ஆண்டை விட, 10 சதவீதம் அதிகரித்து, தற்போது, 62 சதவீதமாக, லஞ்சம் அதிகரித்துள்ளது என, அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இன்னொரு அதிர்ச்சியான தகவல், லஞ்சம் கொடுத்த, 62 சதவீதத்தினரில், 35 சதவீத மக்கள் பல முறை லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறுகின்றனர்; 27 சதவீதம் சதவீதத்தினர், ஓரிரு சமயங்களில் மட்டுமே, லஞ்சம் கொடுத்ததாக தெரிவிக்கின்றனர் என, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கைப்படி, லஞ்சம் பெறுவதில், முதலிடத்தில் பத்திரப் பதிவு துறை, இரண்டாவது இடத்தில் உள்ளாட்சி அமைப்புகள், மூன்றாவது இடத்தில் காவல் துறை, அதற்கடுத்து விற்பனை வரி, போக்குவரத்து, மின்சாரத் துறையும் உள்ளன.இப்பொழுதெல்லாம், லஞ்சம் வாங்குவதை பல அதிகாரிகள் அவமானமாகவே கருதுவதில்லை. அது, அவர்களது தினசரி அலுவலக பணிகளில் ஓர் அங்கமாகி விட்டது.

எவ்வளவோ, திறமையான, நேர்மையான, பொன் மாணிக்கவேல் போன்ற அதிகாரிகள் இருந்தாலும், அவர்களால் சுதந்திரமாக, சுயமாக செயல்பட முடிவதில்லை. நேர்மையாக செயல்பட முற்பட்டால், அரசியல் குறுக்கீடு அல்லது அச்சுறுத்தல் அல்லது 'டம்மி' இலாகாவுக்கு பணிமாற்றம் செய்யப்படுகின்றனர். இது தானே, இப்போது உள்ள நடைமுறை!

அரசின் திட்டங்கள் வெற்றி பெற...!பொன்.கருணாநிதி, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: பல அரசு பள்ளிகளில், ஆசிரியர்களே அமைச்சுப் பணியாளர்களாக, அலுவலக உதவியாளர்களாக, தட்டச்சர்களாக, 'அவதாரங்கள்' எடுத்து, பணியாற்றி வருவது, அரசுக்கு தெரியாதது அல்ல. அலுவலக பணியிலிருந்து, கருவூலப் பணி வரையும், தேர்தல் பணி தொடங்கி கணக்கெடுப்பு பணிகள் வரையும், ஆசிரியர்களை அரசு பயன்படுத்துகிறது. இதனால், கற்பித்தல் பணியை, அவர்களால் முழுமையாக செய்ய முடிவதில்லை.

பல அரசு உயர்நிலைப் பள்ளிகளில், இளநிலை உதவியாளர் முதல், இரவுக் காவலர் வரை, பணியிடங்கள், இன்று வரை உருவாக்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, யோகா, கராத்தே கற்றுக் கொடுப்பது அவசியம். ஆனால், அதை கற்றுக் கொடுக்கக்கூடிய அளவிற்கு, பள்ளிகளில் போதிய பணியாளர்கள் இல்லை. அரசு பள்ளிகளில், கல்வி தரத்தை மேம்படுத்த, புதிய திட்டங்களை, தமிழக அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது; இது வரவேற்கக்கூடியது. ஆனால், இந்த திட்டங்களை, களத்தில் முழுமையாக அமல்படுத்தக் கூடிய அளவில் பணியாளர்கள் எண்ணிக்கை, அரசு பள்ளிகளில் உள்ளதா என, தெரியாது.

எத்தனை அரசு பள்ளிகளில், குடிநீர் வசதிகள் முழுமையாக உள்ளன. எத்தனை பள்ளிகளில், சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர், மாணவர்களுக்கு வழங்க முடியும்... இவற்றை முழுமையான ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகளை உருவாக்குவதில், அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். கல்வி மேம்பட வேண்டுமென, தமிழக அரசு நினைத்தால், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர்த்து, இதர பணிகள் வழங்க கூடாது.

ஆசிரியரல்லாத பல்வேறு பணிகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், இரவுக் காவலர், துப்புரவு பணியாளர் காலியாக உள்ள, 6,000 பணியிடங்களை நிரப்ப அரசு முடிவெடுத்துள்ளது; இதுவும், பாராட்டுக்குரியது. அனைத்து பள்ளிகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்கி, அவற்றை உடனடியாக நிரப்பினால் மட்டுமே, ஆசிரியர்களால் கற்பித்தல் பணியை முழுமையாக நிறைவேற்ற முடியும். ஆசிரியர்கள் மன நிம்மதியுடன், ஆர்வத்தோடு, கற்பித்தல் பணியில் ஈடுபட்டால் மட்டுமே, அரசின் திட்டங்கள் வெற்றி பெறும்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    லஞ்சம்வாங்குபவர்கள் பற்றிய ஆய்வை சரியாக செய்யவில்லை என்று கருதுகிறேன் முதலிடம் தமிழகத்துக்கு மட்டும்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .நான்பணியின் நிமித்தமாக எங்கள் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வருமுன்எங்கள் ஊர் நூலகத்தில் என் பெயருக்கு இருந்த உறுப்பினர் attain மூலம் நூல்களை எடுப்பதை என் உறவினர் ஒருவருக்கு மாற்றிக்கொடுக்க நூலக உதவியாளரை அணுகினேன் .மூன்று நூல்களுக்கு முப்பது ரூபாய்தான் காப்பு தொகை .அவர் அதற்கே கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா என்று கேட்டார் .லஞ்சம் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறு சான்று அவ்வளவே

  • venkat Iyer - nagai,இந்தியா

    திரு.sribhatharajan கூறியக் கருத்துக்களில் உண்மை இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.அரசு பணியாளர்களை நம்பிதான் உயர் அலுவலர்கள் பணி வேகம் இருக்கின்றது.ஊழல் செய்யும் கீழ் ஊழியர்களை கண்டித்தால் உயர் அலுவலர்கள் மீது தவறாக ஆத்திரக்காரர், கோபக்காரர் அவருக்கு வேலை வாங்க தெரியவில்லை என்று ஊழியர்களுக்கு இடையே வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு அவர் மீது தவறாக முத்திரை வைக்கப் பட்டு மொத்தமாக கீழ் அலுவலர்கள் அனைவரும் பணியை வேண்டுமென்று தாமதம் செய்கின்றனர்.இதற்கு சான்று ஊரக பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் கோபப்பட்டதை எதிர்த்து அனைத்து ஊழியர்களும் போராட்டம் பண்ணியதாகும். பொதுவாக கீழ் ஊழியர்கள் தான் வாங்கும் சம்பளம் உயர் அலுவலர்களை விட இரு மடங்கு கம்மி என்று கூறி அதிகப்படியான வேலையை செய்வது கிடையாது.இதற்காகவே ஆன்லைன் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு சான்றிதழ் பெற வசதியை பொதுமக்கள் பெற முடிந்தாலும்,நிலவருமானவரித்துறையில் இன்றுவரை லஞ்சம் கொடுக்காமல் பட்டா மாற்றம் செய்ய முடியவில்லை.மக்கள் மீதும் உயர் அலுவலர் கள் மீதும் அப்படி ஒரு அலட்சியம் இவர்களிடம் இருக்கிறது.மக்கள் லஞ்சம் கொடுத்தாவது காரியத்தினை சீக்கிரம் முடித்துக் கொள்ள நினைக்கும் நிலையில் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை க்கு தள்ளப்படுகிறார்கள்..இவர்களை கட்டுப்படுத்த கடவுள்தான் அவதாரம் எடுத்து வர வேண்டும்.

  • venkat Iyer - nagai,இந்தியா

    திரு.சோலை ராஜன் நீர் சேமிப்பு குறித்து நல்ல தகவலை கூறுவது சரியான தீர்வுதான். நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுகாவில் மடப்புரம் ஊராட்சியில் மண்மலை கிராமத்தில் 1993 ஆம் ஆண்டிலே கடல் நீர் எங்கள் பகுதியில் பூமிக்கடியில் உட்புகுவதை அறிந்து நான் நீர் தொழில் படிப்பில் டிப்ளமா படித்த காரணத்தினால் ,எனது விவசாய பம்ப் செட் அருகில் உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தில் குளத்தினை மழை நீரை நேரடியாகவும், மற்றும் வடிகால் மழை நீரையும் சேமிக்க அன்றே ஒன்றேகால் லட்சத்தில் 6000 ச.மீ நீரை சேமித்து நிலத்தடி நீருடன் கலந்து பத்து ஏக்கர் பாசனம் செய்து நல்ல முறையில் விவசாயம் செய்து செய்தேன்.குளத்திற்கு தண்ணீர் வைத்தேன் என்ற காரணத்திற்காக விவசாய பம்ப் செட் மின் இணைப்பை அன்று துண்டித்தார்கள். இன்று சொந்த குளத்தினை அனுமதி பெற்று தான் தூர்வார வேண்டும் என்று சட்டம் இருக்கிறது என்று கூறி தரங்கம்பாடி வட்டாட்சியர் தூர் வாரும் பணியை செய்யவிடாமல் தடுத்து விட்டார்கள். விண்ணப்பம் செய்ததில் பதில் இன்றுவரை தூர்வார அனுமதி கொடுக்கவில்லை.இதனால் விவசாயம் செய்யவில்லை.பத்து ஏக்கர் விவசாயம் செய்யும்போது விளையும் 15 டன் அரிசி உற்பத்தி கிடைக்காமல் போய்விட்டது. இரண்டு அரிசி இருந்தால் ஒரு எறும்பு ஒரு ஆண்டுக்கு வேண்டிய உணவு போதுமானதாகும். எல்லாவற்றிர்க்கும் நீர் முதன்மை ஆதாரமாகும்.விவசாயிகளுக்கு அரசு ஊழியர்கள் பல்வேறு சிரமங்களை கொடுத்து வருவதும் எல்லாவற்றிர்க்கும் லஞ்சத்தினை எதிர் பார்ப்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. இப்படி நீர் ஆதாரத்திற்காக பாடுபடுபவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகளை கொடுப்பது உண்மையில் வேதனைப்படுவதை தவிர வேறு வழி இல்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement