Advertisement

விதிமீறல் கட்டடங்களுக்கு விரைவாக அனுமதி!

Share

''ஒரு ரூபாய் கூட தரச் சொல்லாதீங்கன்னு சொல்லிட்டாங்க பா...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.

''யாருக்கு பணம் தரக் கூடாதுன்னு, யாருவே சொன்னா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''அ.ம.மு.க., சார்புல, லோக்சபா தேர்தல்ல பலர் போட்டியிட்டாங்களே... அப்ப, 'தேர்தல் செலவுக்கு பணம் வேணும்'னு, பெங்களூரு சிறையில இருந்த சசிகலாவை பார்த்து, தினகரன் கேட்டிருக்காரு பா...

''சசிகலாவும், தனக்கு சொந்தமான தொழில்களை கவனிச்சிட்டு இருக்கிற, இளவரசியின் வாரிசுகளிடம், தினகரனுக்கு பணம் தரும்படி, உத்தரவு போட்டிருக்காங்க... ஆனா, தேர்தல்ல தினகரன் கட்சி, மண்ணை கவ்விடுச்சே பா...

''அதோட, அவர் கூட இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும், தாய்க் கட்சியான, அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் ஓடிப் போயிட்டாங்க... இப்ப, உள்ளாட்சி தேர்தல் செலவுக்கு பணம் வேணும்னு தினகரன் கேட்டா, 'எங்களை ஒரு ரூபாய் கூட தரச் சொல்லாதீங்க'னு இளவரசியின் உறவினர்கள், சசிகலாவை பெங்களூர்ல பார்த்து, சொல்லிட்டு வந்திருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''மாஜியை கூப்பிட்டு, மண்டகப்படி வாங்கியிருக்காவ வே...'' என, அடுத்த மேட்டருக்கு சென்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சென்னை, தேனாம்பேட்டையில, சில குடியிருப்புகளுக்கு, குடிநீர் இணைப்பு தர்ற பணிகளை, சமீபத்துல, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் துவங்குனாவ... அந்த பகுதியைச் சேர்ந்த, அ.தி.மு.க., 'மாஜி' கவுன்சிலரைக் கூப்பிட்டு, பூமி பூஜையை தடபுடலா போட்டிருக்காவ வே...

''இது, தென்சென்னை வடக்கு மாவட்ட, அ.தி.மு.க., முக்கிய புள்ளிக்கு எரிச்சலை குடுத்திருக்கு... ஏன்னா, 'மாஜி' கவுன்சிலர், முக்கிய புள்ளிக்கு எதிர் கோஷ்டியில இருக்காரு... இதனால, குடிநீர் வாரிய அதிகாரிகளைக் கூப்பிட்டு, 'மாஜியை எப்படி அழைக்கலாம்'னு, அர்ச்சனை பண்ணியிருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.

ஒலித்த மொபைல் போனை எடுத்த அன்வர்பாய், ''சின்னையனுக்கும், சத்யாவுக்கும் எந்த நேரமும் பஞ்சாயத்து தான் போங்க பா...'' என சலித்தபடியே, 'கட்' செய்தார்.

உடனே, ''அனுமதியை அள்ளி குடுக்கறதுல, கர்ணனை மிஞ்சிடுவார் போலிருக்கு ஓய்...'' என, கடைசி தகவலுக்கு சென்றார், குப்பண்ணா.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னை, பல்லாவரம் நகராட்சிக்கு புதுசா வந்திருக்கற அதிகாரி, விதிமீறல் கட்டடங்களுக்கான அனுமதியை, 'பிட் நோட்டீஸ்' மாதிரி, வாரி வாரி குடுத்துண்டு இருக்கார் ஓய்...

''அதிகாரிக்கு, பல லட்சம் ரூபாய் கைமாறிடறது... இந்த வகையில, ஏரிக்குள்ள கட்டியிருக்கிற ஒரு தனியார் பள்ளிக்கு அனுமதி தரதுக்கான பணிகள், இப்ப ஜோரா நடந்துண்டு இருக்கு ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''மாறன் இப்படி உட்காருங்க... நாங்க கிளம்புறோம்...'' என, நண்பருக்கு இடம் தந்து, அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement