Advertisement

உழைப்பதில் ஊக்கம் காட்டுங்கள்

Share

ஒவ்வொரு வைகறையும் உங்களுக்கு ஒரு பரிசுப் பொட்டலத்தை சுமந்து கொண்டு வருகிறது. நீங்கள்தான் அதைப் பிரித்துப் பார்ப்பதில்லை. உங்களுக்குச் சிந்தனைச் சிறகுகள் உண்டு. ஆனால் சிறகடிக்க நீங்கள் முயன்றதில்லை. வாத்தியக்கருவி கையில் இருக்கும் போது வாசிக்க ஏன் தயங்க வேண்டும்

பிறருடைய பிரச்னைகளில் உட்புகத் துடிக்கும் நீங்கள் உங்களுக்குள் பயணப்பட என்றாவது முயன்றதுண்டா? அனுபவம் தான் உண்மையான ஆசான் அதற்குக் கொடுக்கப்படுகிற விலை கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும் கிடைக்கின்ற பயன் ஏராளம். நம்பிக்கையின் கை உடைகிற போது, அவநம்பிக்கை காலுான்றத் தொடங்கிவிடுகிறது.

உள்ளுக்குள் ஆற்றல்
ரஷ்ய நாட்டு அறிஞரான டால்ஸ்டாயிடம் ஒரு இளைஞன் வந்தான். “நான் உழைத்து முன்னேற வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு மூலதனமாக நீங்கள் கொஞ்சம் பணம் தரமுடியுமா? என்று கேட்டான். கொஞ்சம் சிந்தித்த டால்ஸ்டாய் அந்த இளைஞனிடம் கேட்டார். “உனக்கு நுாறு ரூபிள் (பணம்) தருகிறேன். உனது வலது கையை வெட்டித் தர முடியுமா?”“ஐயோ! அது முடியாது” என்று அலறினான். “சரி, ஆயிரம் ரூபிள் தருகிறேன். உனது ஒரு காலைக் கொடுப்பாயா?” “ஐயோ! எப்படி முடியும்” என்று பதட்டமானான் இளைஞன். “சரி! பத்தாயிரம் ரூபிள் தருகிறேன். உனது ஒரு கண்ணைத்தரமுடியுமா?”அதிர்ந்து போன அவன் நகரத் தொடங்கினான். அவனைத் தடுத்து நிறுத்தி டால்ஸ்டாய் சொன்னார், “இளைஞனே! உன்னிடம் விலை மதிக்க முடியாத உறுப்புகள் இருக்கின்றன. அவை தாம் உனக்கு மூலதனம். அவற்றைப் பயன்படுத்தி உழைக்கத் தொடங்கு. படிப்படியாக முன்னேறலாம்”.அப்போது தான் தனக்குள் இருக்கும் ஆற்றல் என்ன என்பதை உணர்ந்தான் அந்த இளைஞன்.உயர்ந்த வெற்றி 'கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு வேறு வழியில்லை. உழைப்பினால் உயர முடியாதவர்கள் தான் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அலட்டிக் கொள்வார்கள்” வெற்றி பற்றி இப்படிச் சொன்னார் அறிஞர் மேக்ஸ் குந்தர் என்பவர். “விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பது போலத்தான் உழைக்காமல் உயர நினைப்பது”. “உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றி இல்லை”என்கிறார் அறிஞர் எமர்சன்.'உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல்' என்ற தலைப்பில் பேச வந்தபயிற்சியாளர் அந்தக் குழுவைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.“ஒரு செங்கலின் பயன் யாது?” ஒவ்வொருவராக விடை சொல்லத் தொடங்கினர்.கட்டடம் கட்ட, குளிக்கும்போது மஞ்சள் தேய்க்க (இது ஒரு பெண்), மஞ்சள் குங்குமம் இட்டுக் கடவுளாக வழிபட, சின்ன நீரோடையைக் கடக்கும்போது கால் பதித்து நடக்க, செங்கல் துாளில் பல் துலக்க, எதற்காவது முட்டுக் கொடுக்க, சிறு துண்டு களைப் புடலங்காயில் கட்டித் தொங்கவிட, பேப்பர் வெயிட் போல் பயன்படுத்த, வெளியிடங்களில் அடுப்பு கூட்ட என்று பதில்கள் வந்தன. உயிரே இல்லாத செங்கல், இவ்வளவு பணிகளுக்குப் பயன் படுமானால் நாம் எப்படியெல்லாம் பயன்படலாம், உழைக்கலாம்.
எப்படி வாழ்கிறோம்
அறிஞர் எமர்சனைப் பார்த்து ஒருவர் கேட்டார் “உங்கள் வயது என்ன?” “360 ஆண்டுகள்” ''என்னால் இதை நம்ப முடியவில்லை. 60 வயதுக்கு அதிகமாக இருக்க மாட்டீர்கள்”எமர்சன் சொன்னார் “என்னுடைய வயது அறுபது தான்; ஆனால் உங்களைவிட ஆறு மடங்கு அதிகமாக உழைத்திருக்கிறேன். 360 எப்படி வாழ முடியுமோ அவ்விதம் இந்த 60 ஆண்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறேன்” நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி வாழ்கின்றோம் என்பதுதான் முக்கியம்.

“நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ?”என்றார் பாரதியார். வீணையை இசைப்பதற்குப் பதிலாக சோம்பல் என்ற புழுதியில் எறிந்து விடுகிறோம்.மனிதப்பிறவி உண்டோம், உறங்குகிறோம், விழித்தோம் என்று வாழ்வது ஒரு வாழ்க்கையா? பிற உயிரினங்கள் கூட இதைத்தானே செய்கின்றன.

பிறவிகளில் மகத்தானது மனிதப் பிறவியல்லவா? அந்தப் பிறவியை மகத்துவப்படுத்துவது நாம் உழைக்கிற முறையில் தானே இருக்கிறது. சோம்பல் கொண்ட மனம் துருப்பிடித்த இரும்பு போல். சுறுசுறுப்பு கொண்ட மனம் சாணை பிடிக்கப்பட்ட கத்தி போல.

உடனுக்குடன் பணிகளை முடிப்பதே முக்கியம். மூன்று நாட்களில் முடிய வேண்டிய வேலையை முப்பது நாட்களுக்குச் செய்து கொண்டிருந்தால் என்ன பயன்?வெற்றிக்கான வழிகள் உழைக்க நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது வெற்றியின் விதை. சிந்திக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அது சக்தியின் ஊற்று. படிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அது அறிவின் வாயில். சுறுசுறுப்பாளர்கள் நேரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தெரிந்திருப்பார்கள்.

அந்தந்த வேலையை அந்தந்த நேரத்துக்குள் முடிக்க பழகியிருப்பார்கள். ஒரு நாள் என்பது நம் வாழ்வின் முக்கியமான பகுதி. அதன் ஒவ்வொரு மணித்துளியையும் நாம் எப்படிப் பயன்படுத்துகிறோமே அதைப் பொறுத்துத் தான் நம் வாழ்க்கை அமையும்.சுறுசுறுப்பான மனதுக்குத்தான் எதிர்பாராத வாய்ப்புகள் வந்து சேரும்.“வாய்ப்பிளந்த சிப்பிக்குள்தான் மழைத்துளி விழுந்து முத்தாக வளரும்” என்றார் லுாயிபாஸ்டியன்.

உழைப்பின் உன்னதம் உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றியைப் பெற முடியாதுஎன்கிறார் வால்டேர். ஆளுமைத்திறனில் பளிச்சென்று இருப்பது ஒரு பண்பு என்று சொல்வார்கள். அது உடையில் மட்டுமல்ல உள்ளத்திலும் தான். கடலைக் கடக்க கப்பலில்பயணித்த நாம் இன்று விண்ணில் பறப்பதற்கு உழைப்பு தான் காரணம்“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும்” என்பது வள்ளுவர் கூற்று.“ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றி தாழாது உஞற்று பவர்” தொடர்ந்து முயற்சித்து உழைப்பவர்கள் விதியைக்கூட வென்றுவிடுவார்கள் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.காந்திஜி நடத்திய வார்தா ஆசிரமத்தில் எவரும் உழைக்காமல் ஒரு கைப்பிடி உணவைக்கூட உண்ண முடியாது. காந்திஜியைப் பார்ப்பதற்காக ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபபாய் படேல், அபுல்கலாம் ஆசாத், கான் அப்துல் கபார் கான், நேரு, அன்னிபெசன்ட், பால கங்காதர திலகர் உள்பட பல தேசத் தலைவர்கள் வந்து செல்வார்கள். அவர்களும் அந்த ஆசிரமத்தில் ஏதாவது வேலை செய்து தான் சாப்பிட வேண்டும் என்பது ஆசிரமத்தின் சட்டம்.ஒரு சமயம் காந்திஜியைப் பார்க்க வந்த நேரு, ஆசிரமத்தில் வேலை எதுவும் செய்யாமல் நேரே உணவருந்தும் பகுதிக்குச் சென்று விட்டார். “வேலை ஏதாவது செய்து விட்டுத்தான் சாப்பிட வர வேண்டும் என்பதைத் தாங்கள் மறந்துவிட்டீர்களா ஐயா” என்று நேருவுக்கு நினைவூட்டினார் ஆசிரம சேவகர்.“அடடே மறந்துவிட்டேன்” என்று சொன்ன நேரு ஆசிரமத்தின் பின்பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த சமையல் பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவி சுத்தப்படுத்தினார். அதன் பிறகுதான் அவருக்கு உணவு வழங்கப்பட்டது.

சிந்தனையும் உழைப்புத்தான்உடலால் உழைப்பது மட்டுமல்ல, சிந்தனையாலும் உழைப்பது ஒருவகை. படைப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் அந்த வரிசையில் அடங்குவர். அதனால்தான் பல தொழில்களைச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்ட பாரதியார் “எமக்குத் தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல்” என்றும் கூறுகிறார். மொத்தத்தில் உழைப்பால் உயர்வதே உன்னதமாகும். உருளுகின்ற கற்களே உருண்டையாகும்.
-முனைவர் இளசை சுந்தரம், வானொலி நிலைய முன்னாள் இயக்குனர், மதுரை. 98430 62817

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement