Advertisement

குடியுரிமை சர்ச்சை நல்லதொரு விவாதம்

Share

மத்திய அரசு மேற்கொண்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நீண்ட விவாதத்திற்கு பின் நிறைவேறியிருக்கிறது. சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், யார் குடியுரிமை உடையவர்கள் என்ற கேள்விக்கு விடை தரும் மசோதா இது. ராஜ்யசபாவைத்தாண்டி சட்டமாக மாறும் காலம் தொலைவில் இல்லை.

சில விஷயங்களில் மத்திய அரசு முன்னெடுக்கும் நிகழ்வுகளில், காஷ்மீருக்கு தனி அந்தஸ்தை நீக்கியது உட்பட, இம்மசோதாவிலும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், தி.மு.க., போன்ற கட்சிகள் எதிர் அணியில் நிற்பதைக் காணலாம்.

ஆனால், பார்லிமென்டின் இரு அவைகளிலும் குடியுரிமை மசோதா விவாதம் முழுவதையும், உள்துறை அமைச்சர் அமித் ஷா கையாண்ட விதம், விவாதங்களை அரசியல் சட்ட அடிப்படையில்அரசு கையாளுகிறது என்பதற்கு அத்தாட்சியாகும்.

நமது அரசியல் சாசனம் முதலில் 50 பக்கங்களை கொண்ட ஆவணம், இன்று பலபக்கங்களை கொண்டிருப்பதற்கு காங்கிரஸ் ஆட்சிகள் மேற்கொண்ட சட்டதிருத்தங்கள் காரணமாகும்.பொத்தாம்பொதுவாக பா.ஜ.,வுக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்பதால் இது நிறைவேறி விட்டது என்று பிறகு பேசப்பட்டாலும், ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், அண்டை நாடுகளில் இருந்து வருபவர்கள், தேர்தல் நடக்கும் சமயத்தில் வாக்காளர் அடையாள அட்டை பெற்று, ஓட்டளிக்கும் சூழ்நிலை வந்தாலோ அல்லது அவர்கள் அப்பகுதியின் அரசியல் கட்சிகளுடன் அடையாளப்படுத்திக் கொண்டாலோ எளிதாக குடிமக்களாக கருதப்படுவர் என்ற நிலை முடிவுக்கு வரும்.

மிகப்பெரிய நாடான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் உள்ள குடியுரிமை சட்டங்கள், ஏகப்பட்ட விதிகளை கொண்டிருக்கின்றன. எளிதாக ஒருவர் அங்கு புகவோ அல்லது புகுந்த இடத்தில் அதிகரித்த மக்கள் கூட்டமாக மாறுவதோ நடக்காது.

சுதந்திரம் பெறும் போது, ஜின்னா தலைமையில் பாகிஸ்தான் என்ற நாடு உருவானதில் பல பின்னணிகள் உள்ளன. மறுபுறம் வங்கதேச முஸ்லிம்களை, பாரபட்சமாக பாகிஸ்தான் கையாண்டு, அது தனி நாடாக உருவெடுத்தது.

அன்றைய தினத்தில் இருந்து, அங்கிருந்து 'அடித்து விரட்டப்பட்ட அகதிகள்' என்பவர்கள் அதிகம். அதற்கு அடையாளமாக, கடந்த 70 ஆண்டுகளில் நமது நாட்டில் மைனாரிட்டியினர் கிட்டத்தட்ட 18 சதவீதம் என உயர்ந்த போது, அங்கு 00.2 சதவீத மைனாரிட்டியினர் என்று குறந்ததும் ஆராயத்தகக்கது.

ஆப்கன் கதை வேறு. தலிபன் அட்டகாசத்தால் வெளியேறிய பலர், இந்த நாட்டிற்கு வந்தனர். பர்மா என்ற மியான்மரில் இரு பிரிவு முஸ்லிம்களில், ரோகிங்கியா என்பவர்கள் அப்பாவிகள். அவர்கள் டில்லியில் வந்து தங்க அனுமதித்த அரசு, அங்குள்ள தலைவர் சூச்சியிடம் பேசி, பா.ஜ., அரசு, பலரைத் திரும்ப அனுப்பியது.

மேலும், இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் நிலை வேறு. ஏனெனில் இங்கே கவுரவமாக இருக்க வழி தேடியபோதும், தாங்கள் அனைவரும், தமிழ் மாகாணங்களில் வாழ்ந்த நலமான வாழ்வு இங்கு இல்லை என்று கூறி திரும்பியதை, தமிழக அரசியல்வாதிகள் சிலர் மறந்திருக்கின்றனர். அங்கும் இப்போது நிலைமை மாறி வருகிறது. இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகள், புத்த மத கோட்பாடுகளில் ஆர்வமுற்றதால், அதிக அளவு மதச்சார்பற்ற தத்துவத்தை நிலைநாட்டுவதில்லை.நம் நாட்டில் மதச்சார்பற்ற நிலை என்பது, அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற ஓட்டு வசதிக்கான கொள்கையாக மாறியது. ஆனால், மத்தியில் பா.ஜ., அரசு வந்ததும், மெஜாரிட்டியை காக்கும் அரசு என்ற முத்திரையுடன், முஸ்லிம்களுக்கு எதிரானது என, எதிர்க்கட்சிகளால் இன்று வர்ணிக்கப்படுகிறது. ஆனால் ,ஐதாராபாத் ஒவைசி, இம்மசோதா நகலைக் கிழித்த செயல் , அவர் மதாபிமனத்தில் ஊறியதை உறுதியாக்கியது.

ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை, நம் எல்லைப்புற நாடுகள். அவை அனைத்தும், இஸ்லாமிய மத வழி நாடுகள். அங்குள்ள மைனாரிட்டியினரான ஹிந்து, ஜைனர், பவுத்தர், சீக்கியர் மற்றும் பார்சிக்கள் இங்கு இனி குடியுரிமை பெறலாம் என்றும், இதற்கு, 2014ம் ஆண்டு டிசம்பர் வரையறை என்றும் இம்மசோதா கூறுகிறது. அதனால் அரசியல் அமைப்பு சட்டம், 14 மற்றும் 21 உட்பட சில விதிகள் கூறும், 'எல்லோரும் சமம்' என்பது, மாறிவிடும் என்றால், அதற்கும் பதில்கள் உள்ளன.

அசாம், மணிப்பூர், சில வட கிழக்கு மாநிலங்களுக்கு இம்மசோதா பொருந்தாது என்பதின் அடிப்படை காரணம், அங்குள்ள மலைவாழ் மக்கள், மற்ற இனங்கள் குறிப்பிட்ட மதக் கோட்பாடு பிரிவில் வராதவர். மணிப்பூரில் சில பகுதிகளுக்கு செல்ல இன்னமும், 'பெர்மிட்' நடைமுறை இருக்கிறது.

ஆயிரம் அறிஞர்கள், இந்த மசோதாவை எதிர்க்கின்றனர் என்றால், பிரிட்டிஷ் அறிஞர்கள் நம்மை எப்படி அறிந்திருக்கின்றனரோ, அதே பார்வையில் அவர்கள் சிந்தனைக்களம் உள்ளதன் அடையாளம் எனலாம்.

சிவசேனா இம்மசோதாவை முழுவதும் எதிர்க்காததும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அமித் ஷா விளக்கத்தை ஏற்றதும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான கருத்து அல்ல. அத்துடன் நம்முடன் உள்ள சகோதர முஸ்லிம்களை இது பாதிக்காது என்று அக்கட்சியினர் ஏற்பதையும் கவனிக்கலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement