Advertisement

வெங்காயத்திற்கு காட்டும் ஆர்வம் தங்கத்திற்கு இல்லையே!

Share

எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் குழந்தைகள் உணவு தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இயந்திரம் பழுதடைந்த மறு நாள், பத்திரிகைகள், வானொலி மற்றும் 'டிவி'க்களில், அந்த நிறுவனம் சார்பில், ஒரு கோரிக்கை விடப்பட்டது. 'இயந்திரத்தில் சில கோளாறுகளால், எங்கள் நிறுவனத்தில் குழந்தைகள் உணவு தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை சரியாகி மீண்டும் உற்பத்தி துவங்க, 10 நாட்கள் வரை ஆகலாம்.


'எனவே, பொதுமக்கள், தங்கள் வீடுகளில், 10 நாட்களுக்கும் மேலான குழந்தை உணவை, இருப்பு வைத்திருந்தால், அவற்றை அருகில் உள்ள ஸ்டோர்களில் கொடுத்து, பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கோருகிறோம். 'அப்போது தான், அவ்வப்போது அவற்றை வாங்குவோர் பாதிக்காமல் இருப்பர்' என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கை வெளியானதிலிருந்து, மக்கள் அருகிலுள்ள ஸ்டோர்களுக்குச் சென்று, தங்கள் வீட்டில் கூடுதலாக இருப்பு வைத்திருந்த குழந்தை உணவுகளை திருப்பிக் கொடுத்து, பணத்தைப் பெற்றுச் சென்றனராம்.

பத்து நாட்களில் நிலைமை சரியாகி உற்பத்தி தொடர்ந்தது. இதே போன்றதொரு நிலைமை, நம் நாட்டில் வெங்காயத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதே போன்று, நாளிதழ்கள், வானொலி, 'டிவி'க்களில் ஒரு கோரிக்கையும் விடப் பட்டிருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

விளைச்சல் தவறியதாலும், நீரில் மூழ்கி அழுகியதாலும், வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அது, கடும் விலை உயர்வால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் வெங்காயம் விளைச்சல் அதிகமானால், சமாளிக்கலாம். இது போன்ற நிலைமை, எந்த ஒரு ஆட்சியிலும் நிகழக்கூடியது தான். உற்பத்தி பாதிப்பாலும், வெள்ளப் பாதிப்பாலும், விலை உயர்ந்துள்ள வெங்காயம் விலை குறித்து, பார்லிமென்ட் வரை, எதிர்க்கட்சியினர் கூச்சலிடுகின்றனர். தங்கம் விலை அன்றாடம் உயர்ந்து கொண்டு இருப்பது குறித்து, முச்சு விடுவதில்லையே!


அரசியல்வாதிகள் கல்வி வியாபாரம் செய்ய முடியாதே!
வி.எம்.மகிழ்நன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என, முழங்கிய திராவிட கட்சிகள் கூட, தம் அலுவலக மொழியாக, தமிழை பயன்படுத்தவில்லை. இந்த வேதனைக்கு மருந்து போட்டது போன்று, தமிழக காவல் துறை தற்போது செயல்பட்டுள்ளது.'காவல் துறையில், இனி அனைத்து சுற்றறிக்கைகளும், அறிவிப்புகளும், தமிழில் தான் வெளியிடப்பட வேண்டும்.

'கையெழுத்து உட்பட, அனைத்து நடவடிக்கைகளிலும், தமிழ் தான் பயன்படுத்தப்பட வேண்டும்' என, மாநில காவல் துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். கல்வி, சட்டம், வருவாய் துறைகளிலும் கூட, தமிழ் பயன்பாடு பெயரளவிற்குத் தான் நடைபெற்று வருகிறது. தலைமை செயலரும், மற்ற துறை செயலர்களும், காவல் துறையின் சுற்றறிக்கையை பின்பற்றி, தமிழ் மொழியின் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.

இதற்கு முன்னோடியாக, தொடக்கக்கல்வி முதல், உயர்கல்வி வரை, தமிழே கற்றல், கற்பித்தல் மொழியாக இருப்பதை, அரசும், கல்வித் துறையும் உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்தால், மற்ற துறைகள் எல்லாம் மாறி விடும். இது, நடக்கும் அளவில் மாற, ஒரே ஒரு அரசாணை போதும். நீதிமன்ற படியேறாத வகையில், அந்த அரசாணை அமைக்க வேண்டும். ஆனால், அவ்வளவு லேசான காரியம் அல்ல. பெரும்பாலான கல்வி நிலையங்கள், அரசியல்வாதிகளாலும், அரசின் ஆதரவு பெற்றவர்களாலும் தானே நடத்தப்பட்டு வருகின்றன.

ஒருவேளை, அப்படி ஒரு ஆணையை நடைமுறைப்படுத்தினால், அரசியல்வாதிகள் அடிக்கும் கல்விக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி வருமே... அப்புறம், எப்படி கல்வி வியாபாரம் செய்வது?

தரம் தாழ்த்தி பேசக் கூடாது!
டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், திருமண நிகழ்ச்சி ஒன்றில், 'முதல்வர் இ.பி.எஸ்., அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்குவதை துவக்கி வைத்திருக்கிறார்' எனக்கூறி, இதற்காக ஒரு கதையையும் சொல்லி இருக்கிறார்.

அதில், 'திருடன், ஒரு வீட்டின் பூட்டை உடைத்து, அனைத்து பொருட்களையும் திருடி, இரண்டு, 500 ரூபாய் நோட்டுகளை மட்டும் கவரில் வைத்து, அந்த கவர் மீது, 'இதை நீ... சாப்பிட மட்டும் வைத்துக் கொள்' என, எழுதிவிட்டு சென்றானாம். 'வெளியில் சென்ற வீட்டின் உரிமையாளர், வீட்டுக்கு வந்து பார்த்தவுடன், அதிர்ச்சி அடைந்து, அந்த கவரை எடுத்துப் பார்த்தாராம். அனைத்துப் பொருட்களையும் திருடிச் சென்று விட்டான். இரண்டு, 500 ரூபாய் நோட்டுகளை மட்டும் சாப்பாட்டுச் செலவுக்கு வைத்து கொள்ளுங்கள் எனக்கூறி விட்டு, 'எஸ்கேப்' ஆனானாம்' என்று கதையை சொல்லி முடித்து இருக்கிறார், ஸ்டாலின்.

இந்த கதை வாயிலாக, முதல்வர் இ.பி.எஸ்.,சை, மறைமுகமாக விமர்சனம் செய்து இருக்கிறார். பிரதமர் மோடியை, 'திருடன்' என மறைமுகமாக பேசிய காங்கிரஸ் எம்.பி., ராகுலை, உச்ச நீதிமன்றம், 'உயர்ந்த பதவியில் இருக்கும் நீங்கள், இப்படி பேசக்கூடாது. பேசும்போது யோசித்து பேச வேண்டும்' என, கடுமையாக கண்டித்துள்ளது; இதை ஸ்டாலின் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

திண்ணை பிரசாரம் முதல், பொதுக்கூட்டம், பொது நிகழ்ச்சி அனைத்திலும், 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், இ.பி.எஸ்., இல்லை' என, தொடர்ந்து பேசி வருகிறார். இன்னொரு, விஷயத்தையும் ஓயாமல் கூறி வருகிறார். 'இ.பி.எஸ்., ஊர்ந்து சென்று, சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவி பெற்றார்' என, பேசுகிறார். இனி, ஸ்டாலின் இப்படி தரம் தாழ்ந்து பேசக் கூடாது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

  |"எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:" வெங்காயம் விக்கிறவன் கிட்ட மாமூல் வாங்க முடியாதே.. தங்கம் விக்கிறவன் கிட்ட மாமூல் வாங்கலமுள்ள....

 • s.rajagopalan - chennai ,இந்தியா

  திருட்டு ரயிலில் வந்தவரின் பிள்ளை கூசாமல் எப்படியெல்லாம் பேசுகிறார் பாருங்க... அரசியலிலிருந்தும், போடு வாழ்விலிருந்தும் விலக்கப்பட வேண்டியவர்கள் 'எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்ற காமராஜரின் சிரஞ்சீவி சொற்களை மறக்கவே முடியாதபடி செயல்படுகிறார்களே ?

 • SanSar - chennai,இந்தியா

  இது உங்கள் இடம் பகுதிக்கு கடிதம் / செய்தி / கட்டுரை அனுப்ப தேவையான இமெயில் முகவரியை தெரிவிக்க முடியுமா?

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  பொங்கலுக்கு நாலு நாள் முன்புதான் பேக்கேஜ் தரும் அரசு ஒன்றரை மாதம் முன்பே ரூபாயுடன் தருமாம், எலி சூட் கோட்டுடன் ஓடுகிறது என்பதை கொஞ்சம் நாசுக்காகக் கூறியிருக்கலாம் நூறு பவுன் எடுத்து , மூக்குத்தியைப் போட்டவனுக்கு என்ன பெயர் சொல்லலாம் ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement