Advertisement

இ.பி.எஸ்., கட்டுப்பாட்டில் அ.தி.மு.க.,

''இந்த அதிகாரிகள் திருந்தவே மாட்டாங்க...'' என்றபடியே, நாயர் கொடுத்த, இஞ்சி டீயை உறிஞ்சினார், அந்தோணிசாமி.

''என்ன வே சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''திருவள்ளூர் மாவட்டம், புழல் ஏரியை சுத்தியிருக்குற, 27 கிராமங்களை, நீர் பிடிப்பு பகுதிகளா அரசு அறிவிச்சிருக்குங்க... சென்னையின் குடிநீர் தேவைக்கு, அந்த பகுதி தான் பிரதான ஆதாரமா இருக்கு... அதனால அங்க, எவ்வித மேம்பாட்டு திட்டங்களும் நடக்கக் கூடாதுன்னு, அரசு தடை விதிச்சி இருக்குங்க...

''ஆனா, தடைய மீறி, சில நிறுவனங்கள், 'லே - அவுட்' போட்டு, மனைகளை ஜோரா வித்துக்கிட்டு இருக்குங்க... இதனால, சப் - ரிஜிஸ்டர் ஆபிஸ்ல, லஞ்சம் தண்ணியா பெருக்கெடுத்து ஓடுதாம்ங்க... 2015 வெள்ளத்துல, சென்னை திணறியதை பார்த்த பின்னும், இந்த அதிகாரிகள் திருந்தலைங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''போலி சுகாதார சான்று விவகாரத்துல, நடவடிக்கை எடுக்க, சென்னை மாநகராட்சி நிர்வாகம் தயங்கறது, சந்தேகத்தை கிளப்பிருக்கு ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.''என்ன ஏதுன்னு விபரமா சொல்லு பா...'' எனக் கேட்டார், அன்வர் பாய்.

''சென்னை, திருவான்மியூர், பெருங்குடி பகுதிகள்ல, போலியான அனுமதியோட, தங்கும் விடுதிகள் ஏராளமா செயல்படறது... இது, மே மாசத்துல வெளிச்சத்துக்கு வந்துது ஓய்..

''சுகாதாரம், துப்புரவு ஆய்வாளர்கள் கையெழுத்தை, சில சுகாதார அதிகாரிகள் போலியா போட்டு, சான்று வழங்கினது, விசாரணையில உறுதியாச்சு ஓய்..

''தவறு செஞ்சவா மேல, பத்து மாசமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை... சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகள், பணத்தைக் கொடுத்து, அமுக்கிட்டான்னு பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''கட்சி, தன் கட்டுப்பாட்டுல தான் இருக்குன்னு, முதல்வர் நிரூபிச்சிட்டாரு பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அன்வர் பாய்.

''மேல சொல்லுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான, 'மாஜி' அமைச்சர் கே.பி.முனுசாமியோட பேத்தியின் பரதநாட்டிய அரங்கேற்றம், சென்னை சேத்துப்பட்டுல நடந்துச்சு... இதுல, முதல்வர் இ.பி.எஸ்., கலந்துக்குறாருன்னு விளம்பரம் பண்ணினாங்க பா...

''இதனால, கிரீன்வேஸ் சாலையில் இருந்து சேத்துப்பட்டு வரைக்கும், போலீஸ் பாதுகாப்பு போட்டுருந்தாங்க... ஆனா முதல்வர், ஏர்போர்ட்டுக்கு போய், கோவைக்கு பறந்துட்டார் பா...

''விழாவுக்கு, முதல்வர் வரலைன்னு தெரிஞ்சதும், அங்கிருந்த அமைச்சர்கள், 'எஸ்கேப்' ஆகிட்டாங்க... துணை முதல்வரும், மனோஜ் பாண்டியனும் மட்டும் கலந்துக்கிட்டாங்க பா...

''இது மூலமா, கட்சி, தன்னோட கட்டுப்பாட்டுல தான் இருக்குன்னு, முதல்வர் காட்டிட்டாருன்னு, ஆளுங்கட்சியினர் பெருமையா பேசிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''அந்த விழாவுல, அண்ணாநகர், தி.மு.க.,- எம்.எல்.ஏ., மோகன் கலந்துகிட்டாராம்... அது, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் காதுக்கு போயிருக்குங்க...'' என, கூடுதல் தகவல் கூறியபடி, இடத்தை காலி செய்தார், அந்தோணிசாமி.

நண்பர்களும் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement