Advertisement

இது உங்கள் இடம்

மனித மிருகங்களை சுட்டு வீழ்த்தியது மகிழ்ச்சியே!
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்திய அரசியல் சட்ட அமைப்பே, பல குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை தொடர்குண்டு வெடிப்பு குற்றவாளி முதல், நாடாளுமன்றத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க நினைத்த குற்றவாளிகள் வரை, நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டனர்.


விசாரணை செய்யப்பட்ட பின் தான், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டுள்ளனர். பொது மக்களை பொறுத்தவரை, கொடூரமான குற்றங்கள் புரிந்தோரை, 'போட்டு' தள்ளுவது தான், சரியான தண்டனையாக கருதுகின்றனர். அதிலும், பாலியல் குற்றங்களை, குழந்தை கள் மற்றும் இளம் பெண்களுக்கு எதிராக நடப்போர் மீது, 'என்கவுன்டர்' நடத்துவது நியாயமே!

தமிழக காவல்துறையின் கண்ணியமும், ஆட்சியாளர்களின் கண்ணியமும் நாம் அறிந்ததே. அவர்கள் நினைத்தால் யார் மீதும், எந்த வழக்கும் பதிவு செய்து, கைதும் செய்யலாம். பின், அவர்கள் தப்பிக்க முயற்சி செய்ததாக சுட்டு விட முடியும். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை, நான்கு பேர் சேர்ந்து, துடிக்க துடிக்க வன்புணர்ச்சி செய்து, அவரை தீயிட்டு கொளுத்தி, கொன்று விட்டனர்.

அந்த மனித மிருகங்களை, ஐதராபாத் போலீசார் சுட்டு கொன்றது, நாடு முழுவதும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இன்று, தெலுங்கானாவில், காவல் துறையின் ஐ.பி.எஸ்., அதிகாரியான, சஜ்ஜனாரை, 'ஹீரோ'வாக நாட்டு மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். சுதந்திரத்தை காவல்துறை கைகளில் கொடுத்து விட்டால், அதை அவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உண்டு. பின் நீதிமன்றம் எதற்கு என்ற கேள்வியும் எழலாம்.

எது எப்படியோ, பிரியங்கா ரெட்டி படுகொலைக்கு காரணமான, குற்றவாளிகள் நான்கு பேரும், 'என்கவுன்டர்' வாயிலாக கொல்லப்பட்டது, மகிழ்ச்சியே!

ஹிந்து அறநிலைய துறை மேம்படுமா? சொ.செல்வராஜ், கோ - ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், பழமை வாய்ந்த தொன்மையும், கலைச் சிறப்புமிக்க கோவில்களின் எண்ணிக்கையும் ஏராளம். தன்னார்வமிக்க, ஆன்மிகவாதிகள், பக்த கோடிகள், ஹிந்து சமயக் கோவில்களுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தானமாக வழங்கியுள்ளனர்; அதில், நிலங்கள் ஏராளம். அவற்றை பாதுகாக்கவே, ஹிந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டு, 70 ஆண்டுகளாகிறது.

'கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' எனும் சொலவடை இன்றும் வழக்கில் உள்ளது. அதனால் தான், தமிழகத்தில் கோவில்கள் அதிகமுள்ள, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட பகுதிகளை கோவில் நகரங்கள் என, அழைக்கிறோம்.தமிழகத்தில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 44 ஆயிரம் கோவில்கள் இருப்பதாக, அத்துறையின் இணைய தள தகவல் கூறுகிறது.
கடந்த, 2013ல், தமிழக ஹிந்து சமய அறநிலையத்திற்கு, 4.78 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும், 29.16 கோடி சதுர அடி பரப்பளவுள்ள, 33 ஆயிரத்து, 627 மனைகளும், 2.45 கோடி சதுர அடி விஸ்தீரணம் உள்ள, 22 ஆயிரத்து, 599 கட்டடங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றிலிருந்து, அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களுக்கு நியாய வாடகையாக, ஆண்டிற்கு, 6,000 கோடி ரூபாய் வந்திருக்க வேண்டும்.

ஆனால், அறநிலையத் துறையோ, ஆண்டிற்கு, 200 கோடி ரூபாய் கூட வசூலிப்பதில்லை.'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களின் வருமானமும், இந்த நிலையில் தான் இருக்கும் என்பதை, மறுப்பதற்கில்லை.கோவில்களுக்கு அதிக வருமானம் வருவதற்கும், நல்ல முறையில் கோவில்களை பராமரிப்பதுடன், போதிய கண்காணிப்பு பணியை மேற்கொள்வதன் வாயிலாக, அறநிலையத் துறையை மேம்படுத்தலாம்!
ரஜினியிடம் உருப்படியான திட்டம் இல்லை!
ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: இ.பி.எஸ்., திடீர் என, முதல்வர் ஆகவில்லை. அவர், அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்து, தொண்டராக, பல ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். தேர்தல் வாயிலாக, அவர், எம்.எல்.ஏ.,வாகவும், மக்களால் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.

ஒருவருக்கு பின், வாரிசாக ஒருவர் என பதவிக்கு வர, அ.தி.மு.க., ஒன்றும் மன்னராட்சி அல்ல. அது, ஜனநாயக கட்சி. அங்கு, சாதாரணமானோர் கூட, எம்.எல்.ஏ., ஆகலாம்; எம்.பி., ஆகலாம்; அமைச்சர் ஆகலாம்; ஏன், முதல்வர் கூட ஆகலாம். இது அந்த கட்சியில், சர்வ சாதாரணமாக நடைபெறும், நிகழ்ச்சி தான். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை தான். முதல்வர் இ.பி.எஸ்., கட்சிக்கு, உண்மையாக உழைக்க வேண்டும்! அவ்வளவு தான். அந்த அடிப்படையில் தான் அறுதிப் பெரும்பான்மை, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவோடு, 2017, பிப்., 16ல் இ.பி.எஸ்., முதல்வர் பதவியை ஏற்றார்; நம்பிக்கை இல்லா தீர்மானத்திலும் வெற்றி பெற்றார். இதில் அதிசயமோ, ஆச்சரியமோ எதுவும் இல்லை.

ஏற்கனவே, விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து, இரு முறை எம்.எல்.ஏ.,வாகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். 'பழம் நழுவி பாலில் விழாதா' என, ஒரு சிலர் எதிர்பார்த்த அளவுக்கு, தன் கட்சியை தக்க வைத்து கொண்டுள்ளார். கமல் கட்சி ஆரம்பித்து, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பல இடங்களில் தன் வேட்பாளர்களை நிறுத்தி, டிபாசிட்டை இழக்க செய்துள்ளார். ரஜினி அரசியலுக்குள் நுழையவில்லை. கட்சி பெயர், கொடி, கொள்கை என்ன, எப்போது ஆரம்பிப்பார் என, எதுவுமே தெரியாது.

அதற்குள், 'முதல்வர் ஆவோம் என, இ.பி.எஸ்., கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்; எதிர்காலத்தில் என்ன நடக்கும் என, யாருக்குத் தெரியும்' என, நடிகர் ரஜினி பேசி இருக்கிறார். 'சாதாரண நடிகராக இருந்த நான் சூப்பர் ஸ்டாராக உள்ளேன். அப்படி இருக்க, நான் ஏன், முதல்வர் ஆகக் கூடாது?' என, அவர் பேச்சில் தொக்கி நிற்கிறது. ரஜினிக்கு, அ.தி.மு.க.,வில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை தெரிவித்து விட்டேன். முதலில், அவர் கட்சி ஆரம்பிக்கட்டும். அவர், கட்சி கொள்கைகளையும், கோட்பாடுகளையும், மக்களிடம் எடுத்து சொல்லட்டும்; அவர் எண்ணம் நிறைவேறுமா என்பதை, மக்கள் ஓட்டளித்த பிறகு பார்க்கலாம்!

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இபிஎஸ் முதல்வரான ‘வரலாறு’ எல்லாரும் அறிந்ததே. கூவத்தூர் ஸ்பான்சர், நம்பிக்கை வாக்கெடுப்பில் ராணுவக் கட்டுப்பாடு, எல்லா நாடகமும் மறக்கக் கூடியதில்லையே சாய்சியின் குட் புக்சில் இடம்பெற்றுத்தானே வந்தார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement