Advertisement

மின் வாரிய உத்தரவை கிடப்பில் போட்ட அதிகாரிகள்!

''வி.ஐ.பி., வார்டுகளை, கூட்டணிக் கட்சிகள் வட்டமிடுதாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னை மாநகராட்சியில, 2016ல தேர்தல் அறிவிச்சப்ப, திருவொற்றியூர், 7வது வார்டை, அ.தி.மு.க., முன்னாள், எம்.எல்.ஏ., குப்பனுக்கும், 20வது வார்டை, சாரதி பார்த்திபனுக்கும் ஜெயலலிதா குடுத்தாங்க...

''இவங்களை எதிர்த்து, தி.மு.க.,வுலயும் வலுவான ஆட்களை நிறுத்துனாவ வே... இதனால, இந்த ரெண்டு வார்டுகள்லயும், பணமழை பொழிஞ்சது...

''இப்ப, கூட்டணியில இருக்கிற, தே.மு.தி.க., - பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் குடுத்திருக்கிற பட்டியல்ல, இந்த ரெண்டு வார்டுகளும் இருக்காம்... ஆனா, அ.தி.மு.க., பிரமுகர்கள், இந்த வார்டுகளை விட்டுத் தர முடியாதுன்னு உடும்பு பிடியா இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''எல்லாரையும் அழ வச்சிட்டாருங்க...'' என, அடுத்த தகவலுக்கு நகர்ந்தார், அந்தோணிசாமி.

''ஏதாவது சீரியல் டைரக்டர் தகவலா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''அவசரப்படாம கேளுங்க... திருச்சி மாநகர, அ.ம.மு.க., சார்புல, முன்னாள் துணை மேயர் சீனிவாசன், பாலக்கரை திருமண மண்டபத்துல, ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணியிருந்தாருங்க...

''அங்க, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வந்து, ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்துனாங்க... அதோட நிறுத்தியிருக்கலாம்...

''ஜெயலலிதா இறந்த அன்னைக்கு, 'தாயே எழுந்துரும்மா... தமிழகமே அழுகிறம்மா'ன்னு ஒரு சோக பாடலை, ஆளுங்கட்சி மீடியாக்கள்ல வெளியிட்டாங்க... அந்தப் பாடலை, மண்டபத்து ஸ்பீக்கர்கள்ல சத்தமா போட்டிருக்காங்க... அதைக் கேட்டு, பெண்கள் எல்லாம் தேம்பி, தேம்பி அழ, மண்டபமே மழை பெய்ஞ்ச மாதிரி நனைஞ்சு போயிடுச்சுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''வாரியத்தின் உத்தரவை கிடப்புல போட்டுட்டாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு சென்றார், அன்வர்பாய்.

''மின்வாரிய சங்கதியா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''ஆமாம்... தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான, மின் தொடரமைப்பு கழகம், மின் கோபுர வழித்தடங்கள் வழியா, எல்லா பகுதிகளுக்கும் மின்சாரத்தை எடுத்துட்டு போகுது...

''இந்த நிறுவனம், வருஷா வருஷம், பல நுாறு கோடி ரூபாய் செலவுல, 230 கிலோ வோல்ட் மற்றும் அதுக்கும் மேற்பட்ட திறன்ல, துணை மின் நிலையங்கள், மின் வழித்தடங்களை, தனியார் நிறுவனங்களுக்கு, 'டெண்டர்' விட்டு அமைக்குது பா...

''இந்த தனியார் நிறுவனங்களுக்கு சாதகமா, சென்னை, திருச்சியில இருக்கிற நிதி பிரிவு அதிகாரிகள் செயல்படுறதா புகார்கள் இருக்குது...

''அதனால, நிதி பிரிவுல முக்கியமான பதவிகள்ல, ஆறு வருஷத்துக்கும் மேலா இருக்கிறவங்களை, வேற இடங்களுக்கு மாத்தும்படி, மின் வாரியம் உத்தரவு போட்டது... ஆனா, அந்த உத்தரவு கிணத்துல போட்ட கல்லா கிடக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.

நண்பர்கள் நகர, பெஞ்ச் அமைதியானது.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • A R J U N - sennai ,இந்தியா

    ...மின் வாரியம் உத்தரவு போட்டது...அந்த அளவுக்கு பணம் கைமாறியது,பெரிய பதவியில் இருப்போர் மிகுந்த பணத்தாசை பிடித்தவராக இருக்கின்றனர்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    எத்தனையோ உத்தரவுகள், ஆணைகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் எல்லாமே கிணற்றிலும், கிடப்பிலும்தானே போடப்படுகின்றன பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement