Advertisement

ஆதி பெருமை சொல்லும் அகல் விளக்குகள்!

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்க லுக்கு, தமிழ் இலக்கியத்தில் எந்த சான்றும் இல்லை. அது தை நீரால் என்ற பாடுபொருளிலேயே வழங்கப்படுகிறது. பின்னாளில் அதை, அறுவடை நாள் என்றும், உழவர்த் திருநாள் என்றும் கொண்டாடுகிறோம். பொங்கலுக்கு முன் வரும் முக்கிய விழாக்களில் ஒன்று, கார்த்திகை தீபத் திருநாள்!கார்த்திகை தீபங்கள், இப்போது மட்டுமல்ல; 2,000 ஆண்டுகளுக்கு முன்பும், அகல் விளக்குகளில் தான் ஏற்றப்பட்டன

.மனிதனின் இருளகற்றி ஒளி கொடுத்த முதல் விளக்கு அகல் விளக்கு. அந்த அகல் விளக்கு அது ஏற்றப்படும் நாள், அதன் அழகு, அது எரியும் காட்சி என சங்க இலக்கியங்களில், ஆங்காங்கே ஒளிர்கின்றன, கார்த்திகை தீபப் பாடல்கள்.வேனிற்காலத்தில் அவ்வையார் ஒரு நாள், காட்டு வழியே செல்கிறார். நிறைய மரங்கள், பூக்களுடன் நிற்கின்றன. அவற்றில் ஒன்று, இலவ மரம்.இலவ மரத்தில் இலைகள் எல்லாம் உதிர்ந்து, பூக்களும், பூக்களுக்கு நடுவே, ஓரிரு அரும்புகளும், நீட்டிக் கொண்டிருக்கின்றன.

அந்தப் பூக்கள் செக்கச் சிவந்திருக்கின்றன.பூக்களின் நடுவில் நீட்டிக் கொண்டிருக்கும் மகரந்தக் குழல், எரியும் திரி போல் நீண்டு நிற்கிறது. அதைப் பார்த்த அவ்வையாருக்கு. கார்த்திகை திருவிழாவின் போது, பெண்கள் ஒன்று கூடி நின்று ஏற்றுவது தீபங்கள் போல் தோன்றுகிறது.'நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டுஇலையில மலர்ந்த முகையில் இலவம்அருஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி!' (அகம்-11)ஆரம்பத்தில் மண்ணை வெறுமனே குழைத்து, குழிபோல் ஆக்கி, வெயிலில் காய வைத்து, அதில் இலுப்பை எண்ணை ஊற்றி, தமிழர்கள் தீபம் ஏற்றினர். பின் சூளையில் சுட்டு பயன்படுத்தும் பழக்கம் வந்தது. இந்த விளக்குகள் தான் கோவில்களிலும், இல்லங்களிலும் ஏற்றப்பட்டன.

கார்த்திகை போன்ற பண்டிகை நாட்களிலும் பயன்படுத்தப்பட்டன.தலைவியை பிரிந்து, காட்டு வழியே பயணிக்கிறான் தலைவன். அவன் கண்களில், மலை உச்சியில் நெருப்பென சிவந்து இதழ் விரித்து பூத்திருக்கும் இலவம் பூக்கள் கண்ணில் படுகின்றன. அவன் கண்களுக்கும், அந்தப் பூக்கள், கார்த்திகை தீபத்தின் போது ஏற்றப்படும் நூற்றுக்கணக்கான விளக்குகள் போல் தோன்றுகின்றனவாம். இப்படி தலைவவனின் கண்கொண்டு இந்தப் பாடலைப் பாடியவர், பாலை பாடிய பெருங்கோ. இடம் பெற்ற இலக்கியம், அகநானூறு(185).ஊரை விட்டு காதலனுடன் காட்டு வழியே செல்கிறாள் தலைவி. அதுவும் நீண்ட தூரம் செல்கிறாள்.

ஊரை விட்டுப் பிரிந்தது, உற்றாரை விட்டு வந்தது, நடந்து வரும் களைப்பு என, அவள் முகம் சற்றே வாடுகிறது. அதைப் பார்த்து விடுகிறான் காதலன். தன்னை நம்பி வந்தவளின் முகம், எந்த விதத்திலும் வாடிவிடக் கூடாது என்று நினைக்கிறான். அவள் சோர்வடையாமல் இருக்க, சற்று துாரத்தில் தெரியும் அந்தக் காட்சியை விவரிக்கிறான்.'பெண்ணே நீ வாழ்க. மகிழ்ச்சி கொள்வாயாக! அங்கே பார். கார்த்திகைத் திங்களில் வரிசையாக ஏற்றும், தீபத்தின் விளக்கினைப் போல, கோங்கம் மரத்தின் பூக்கள் வரிசையாகப் பூத்திருக்கின்றன. அந்த தீஞ்சுடர் அழகினைப் பார். உன் களைப்பு போகும்' என்று கூறும் அந்தத் தலைவனின் வரிகள்,'அறுமீன் கெழீய அறம்செய் திங்கள்செல்சுடர் நெடுங்கொடி போலப்பல்பூங் கோங்கம் அணிந்த காடே!'என்று, நற்றிணையில் இடம் பெற்றுள்ளது (202 -நற்றிணை).

கார்த்திகை மாதத்தில் நடுநிசியில் கூட தெருக்களில் பெண்கள் வரிசையாக விளக்கு ஏற்றி வைத்திருக்கின்றனர். அழகிற்காகவும், மணத்துக்காகவும், வீட்டின் முன், பூ மாலைகள் வரிசையாக தொங்கவிடப்பட்டிருக்கின்றன, என்கிறது நக்கீரர் பாடிய அகநானூறுற்றுப் பாடல்.'அறுமீன் சேரும் அகலிருள் நெடுநாள்மறுகு விளக் குறுத்து மாலை துாக்கி' (அகம் 141)கோங்கம் மரத்தில் இருந்து காற்றிலாடி மணம் கமழும் பூக்கள் கீழே உதிர்கின்றன. அப்படி விழுந்த பூக்கள், திரியை துாண்டி விட்டால் எரியும் விளக்குப் போல் இருக்கிறது என்கிறார் சேரமான் இளங்குட்டுவன் (அகம் 153).கார்நாற்பது என்றொரு சங்க இலக்கிய நுால். அதைப் பாடியவர் மதுரை கண்ணங்கூத்தனார்.

அவர் கண்களுக்கு காந்தள் மலராகிய தோன்றிப் பூ தெரிகிறது. அது விரல்களை குவித்து வைத்திருப்பது போல், செக்கச் சிவந்து மலர்ந்திருக்கிறதாம். அப்படி சிவந்திருக்கும் பூக்கள், நன்மை மிகுந்த கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் விளக்கைப் போல் காட்சித் தருகிறது என்பதை,'நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்டதலைநாள் விளக்கின் தகயுடைய ஆகிப்புலமெலாம் பூத்தன தோன்றி' (கார்.நாற்: 26)என்று உவமைப்படுத்திஇருக்கிறார்.களவழி நாற்பது பாடியவர் பொய்கையார். போர்க்களத்தில் சோழ அரசன் நீர் நாடன் போரிடுகிறான். போரில் வீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்கின்றனர்; குத்தப்படுகின்றனர்.

வாளால் தங்களை சேதப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் உடம்பில் இருந்து இரத்த ஆறு ஓடுகிறது. அப்படி ஓடும் ஆறு எண்ண முடியாத அளவிற்கு ஏற்றப்பட்ட கார்த்திகை விளக்கின் தீபச்சுடர் அசைந்தாடுவது போல் இருக்கிறது என்கிறார். அவர் கூறும் வரிகளைப் பாருங்கள்:'கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவேபோர்க் கொடித் தானை பொருபுனல் நீர்நாடன்' (கள.நாற்பது 17)ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான, சீவக சிந்தாமணி என்ற காப்பியத்திலும் திருக்கார்த்திகை தீபம் பற்றி குறிப்புகள் உள்ளன.'குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்னகடிகமழ் குவளை பைந்தார்'என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

நம் சங்க நுால்கள், ௨.௦௦௦ ஆண்டுகள் பழமையானவை. அந்த நுால்களிலேயே கார்த்திகை விளக்கு, அதன் சிறப்பு, அந்த விளக்கைப் போல் காட்சித் தரும் இயற்கையில் மலர்ந்த மலர்கள் என, புலவர்கள் வியந்து போற்றி உள்ளது, நாம் பெருமைகொள்ளத்தக்கது.தொல்காப்பியம், 'வேலின் நோக்கிய விளக்குநிலை' என்கிறது. அகல் விளக்கில் செங்குத்தாய் எரியும் அந்த தீபம், கூர்மையான செந்நிறமுள்ள வேல் போல் காட்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

'தொல் கார்த்திகை நாள்' என்று பின்னாளில், திருஞானசம்பந்தரும் இந்த நாளை போற்றி இருக்கிறார். ௨,௦௦௦ ஆண்டு தொன்மையான பழமையான நம் தீபத்திருநாளை போற்றுவோம், விளக்கேற்றுவோம்.புற இருளை மட்டும் அல்ல, மனத்தின் அக இருளையும் அகற்றுவோம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement