Advertisement

மற்றவர் உரிமையை மதிப்போம் மனித உரிமையை காப்போம், நாளை சர்வதேச மனித உரிமை நாள்

Share

ஐக்கிய நாடுகள் பொது சபை 1948 டிச., 10 பாரிசில் சைலட் மாளிகையில் உலக மக்கள் அனைவருக்குமான உலக மனித உரிமை பேரறிக்கையை பிரகடனப்படுத்தியது.
இரண்டாம் உலகப்போரில் உலக நாடுகள் பெற்றிருந்த கசப்பான அனுபவங்களையும், போருக்கு பிந்தைய கடுமையான விளைவுகளிலிருந்து மீண்டெழுந்து மனித உரிமைகளை பாதுகாக்க அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டின் மனைவி எலீனா தலைமையில் இப்பிரகடனம் தயாரானது. ஐ.நா., பொதுச்சபையில் 48 நாடுகள் இதற்கு ஆதரவாக ஓட்டளித்தன. எந்த நாடும் எதிராக ஓட்டளிக்கவில்லை. சில நாடுகள் மட்டும் ஓட்டளிப்பை தவிர்த்தன.

அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட ஆவணம் உலகில் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட ஆவணம் சர்வதேச மனித உரிமை பிரகடனம் தான் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருவர் மனித மாண்புகளுடன் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்வது மட்டும் இல்லாமல் மற்ற மனிதர்களையும் தன்னை போல வாழ விடுவதற்கான நெறிமுறைகளை உண்டாக்குவதே இதன் நோக்கமாகும்.

எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்றும், இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சொத்து, சமூக அந்தஸ்து மற்றும் பிறப்பில் எவ்வித வேறுபாடுகளுமின்றி ஒவ்வொரு மனிதரும் வாழ வேண்டிய அவசியத்தை உணர்த்தவே உலகம் முழுவதும் டிச., 10 மனித உரிமை நாளாக அனுசரிக்கப்படுகிறது.
மனித உரிமைகள் சாசனம்
சர்வதேச மனித உரிமைகள் சாசனம் 30 பிரிவுகளை கொண்டுள்ளது. அதன்படி சமத்துவ உரிமை, ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை உண்டு. சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமையில்லை.

சித்ரவதைக்கும், மனிதத் தன்மையற்ற தாக்குதலுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம் உண்டு. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை உண்டு. பாரசபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கு எல்லோரும் உரித்தானவர்கள். ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை, சட்டத்திற்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை, நீதிக்காக பகிரங்கமான விசாரணை நடத்த உரிமை, குற்றம் சாட்டப்படுவோர் குற்றம் நிரூப்பிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை என கூறிக் கொண்டே செல்லலாம்.
தேசிய, மாநில ஆணையங்கள், நீதிமன்றங்கள்இந்திய அரசால் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1993 ம் ஆண்டில் இயற்றப்பட்டது. இதன்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில ஆணையம், மனித உரிமை நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. டில்லியில் தேசிய ஆணையத்தின் ஆண்டறிக்கையின்படி 2015 ஏப்., முதல் 2016 மார்ச் வரை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 808 மனித உரிமை மீறல் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டன. அந்தாண்டில் ஒருலட்சத்து 18 ஆயிரத்து 254 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் ஐந்து கோடியே 55 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வரை பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. அதிகபட்சமாக உத்தரபிரதேசம், ஒடிசா, ஹரியானா மாநிலங்களில் இருந்து முறையே 49,721, 16,278, 11,606 புகார் மனுக்கள் பெறப்பட்டன.

தமிழகத்திலிருந்து 3,138 புகார் மனுக்கள் மட்டுமே அந்தகால கட்டத்தில் அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் 1670 காவல் பாதுகாப்பின் போது மரணங்களும், பாலியல் வன்முறைகளும் நடந்ததாகவும் அந்த ஆய்வறிக்கையில் உள்ளது.

யார் புகார் அளிக்கலாம்
மனித உரிமைகள் மீறலால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி பொது நலனில் அக்கறை கொண்ட யாரும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கலாம். புகாரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அவரவர் தாய் மொழியில் எழுதி அனுப்பலாம். நீதிமன்ற கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தட்டச்சு வேண்டியதில்லை. புகார்தாரரே புகாரை ஆணையத்திற்கு அனுப்பலாம். பிற அதிகாரிகளுக்கு அனுப்பிய புகாரின் நகலை அனுப்பினால் ஏற்கப்படாது. புகார் செய்பவர் பெயர், முழு முகவரியை மனுவில் குறிப்பிட வேண்டும்.எந்தெந்த பிரச்னைகளுக்கு புகார்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்க கூடிய வழக்குகள், உரிமையியல் தொடர்பான புகார்கள் விசாரணைக்கு எடுக்கப்படுவதில்லை. சென்னையில் மாநில மனித உரிமை ஆணையம் செயல்படுகிறது. இதற்கு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைவராகவுள்ளார்.

இரு உறுப்பினர்கள் உள்ளனர். காவல் துறை தலைமை இயக்குனர் தலைமையில் தனியாக விசாரணை அமைப்பும் புகார்களை விசாரிக்க இங்கு செயல்படுகிறது. போலீசாருக்கு எதிரான புகார்கள், சுற்றுச்சூழல் சீர்கேடு, சிறைவாசிகள், மருத்துவம், சுகாதாரம், கல்வி, பெண்கள், குழந்தைகள், கொத்தடிமைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக புகார் வழங்கலாம். இப்புகார்களை தேசிய மற்றும் மாநில ஆணையம் நேரடியாக விசாரிக்கும் அல்லது அந்தந்த துறை உயரதிகாரிகளுக்கு புகார்களை அனுப்பி சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்.தண்டிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மனித உரிமை நீதிமன்றமாக செயல்படுகிறது. பாதிக்கப்பட்டவர் தனிநபர் முறையீடாக வழக்கு தாக்கல் செய்யலாம். மனித உரிமை ஆணையத்திற்கு தவறு செய்தவர்களை தண்டிக்க அதிகாரம் இல்லை. ஆனால் மனித உரிமை நீதிமன்றத்திற்கு சட்டப்படி தண்டனை வழங்க, அபராதம் விதிக்க, இழப்பீடு வழங்க அதிகாரம் உள்ளது. மனித உரிமைகளை மீறும் வகையில் சட்டப்படி செய்ய வேண்டிய கடமைகளை அரசு அதிகாரி செய்யாமல் இருந்தாலும், செய்யக்கூடாத செயல்களை செய்தாலும் பாதிக்கப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் நீதி வேண்டி வழக்கு தொடரலாம். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி பொது நலனில் அக்கறை கொண்ட எவரொருவரும் பொது நல வழக்கு தாக்கல் செய்யலாம்.

இலவசமாக வழக்கு நடத்த வாய்ப்பு
தற்போது உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் இலவச சட்ட உதவி மையங்கள் செயல்படுகின்றன. பொது நல வழக்கு தாக்கல் செய்ய விரும்புவோர் உரிய அதிகாரிகளுக்கு மனு அளித்து, மனுவின் நகல் மற்றும் மனு அனுப்பியதற்கான ரசீது, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பினால் அவர்கள் வழக்கை தகுந்த வழக்கறிஞர்கள் மூலம் இலவசமாக நடத்த நடவடிக்கை எடுப்பர்.

அதிகரிக்கும் மனித உரிமை மீறல் வழக்குகள்கடமைகளும், உரிமைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். நமது உரிமைகளை கேட்கும் அதே நேரத்தில் மற்றவர்களின் உரிமைகளுக்கு பங்கம் விளைவிக்காமல் இருப்பது நம் கடமையாகும். ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றங்களிலும், மனித உரிமை ஆணையங்களிலும் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக தாக்கலாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இது மனித உரிமைகள் தொடர்பாக ஏற்பட்டு வரும் விழிப்புணர்வை காட்டுகிறது. பன்முகத் தன்மையை பாதுகாப்பதே மனித உரிமையின் ஆத்மா என ஐ.நா., சபை குறிப்பிடுகிறது. இந்தியா ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடாக விளங்குகிறது. இந்த மனித உரிமை நாளில் மற்றவர்களின் உரிமைகளை மதித்து, மனித உரிமைகளை பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்.

- முனைவர் ஆர்.அழகுமணி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர், மதுரை98421 77806

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement