Advertisement

வழக்குகள் வாபஸ்: விஜயகாந்த் உற்சாகம்!

''உள்ளாட்சி தேர்தல் வர்றதால, இணக்கமா செயல்படணும்ன்னு முடிவு பண்ணியிருக்கா ஓய்...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார், குப்பண்ணா.

''எந்தக் கூட்டணி விவகாரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''மதுரை மாவட்டத்துல, அமைச்சர்கள் ராஜு, உதயகுமார், கோஷ்டி அரசியல்ல ஈடுபட்டு வந்தாளே... இவர் ஒரு நிகழ்ச்சி நடத்தினா, பதிலுக்கு அவர் ஒரு நிகழ்ச்சி நடத்துவார் ஓய்... ''உதயகுமார் நிகழ்ச்சிக்கு அச்சடிக்கற அழைப்பிதழ், போஸ்டர், விளம்பரங்கள்ல, ராஜு படம் இருக்கும்... ஆனா, ராஜு நிகழ்ச்சி விளம்பரங்கள்ல, உதயகுமார் படம் இருக்காது ஓய்... ''ஆனா, சமீபத்துல, ஜெ., நினைவு நாளையொட்டி, ராஜு தரப்புல வெளியான விளம்பரங்கள்ல, உதயகுமார் படம் இருந்துது... ''உள்ளாட்சி தேர்தல் வர்றதால, இணக்கமா செயல்பட, ரெண்டு தரப்புமே முடிவு பண்ணியிருக்கு... இதனால, அ.தி.மு.க.,வினர் சந்தோஷப்படறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''பதவி இல்லாமலே, அதிகாரத்துக்கு பஞ்சமில்லை பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''யாரைச் சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி

''சென்னை நங்கநல்லுார் பகுதி, அ.தி.மு.க., 'மாஜி' பெண் கவுன்சிலரின் கணவரது அலப்பரை ஓவரா இருக்கு... அங்க இருக்குற, மாநாராட்சி விளையாட்டு மைதானத்தை, தன் கட்டுப்பாட்டுல வச்சிருக்காரு பா... ''மாணவ - மாணவியர் விளையாடணும்னா, 'மாஜி'யின் வீட்டுக்கு போய், அவங்க கணவர்கிட்ட அனுமதி கேட்கணுமாம்... ''அந்த மைதானத்தை குத்தகை எடுத்தவங்களையும், அங்க எந்த பணியையும் செய்ய விட மாட்டேங்கிறாராம் பா...

''வர்ற உள்ளாட்சி தேர்தல்ல போட்டியிட, 'மாஜி' கவுன்சிலர் திட்டம் போட்டுருக்காங்க... 'ஜெயிச்சா, மைதானத்தையே வித்துடுவாங்க'ன்னு, மக்கள் பேசிக்கிறாங்க பா...'' என விளக்கினார், அன்வர்பாய்.

அவ்வழியாக சென்றவரைப் பார்த்து, ''ஏம்பா பரணி... ஊர்ல இருந்து எப்படே வந்த...'' எனக் கேட்ட அண்ணாச்சியே, ''சர்க்கரை பொங்கல் சாப்பிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்காரு வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார்.

''என்ன விபரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''அரசை விமர்சனம் பண்ணதால, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மேல, ஏகப்பட்ட அவதுாறு வழக்குகளை, 'மாஜி' முதல்வர் ஜெயலலிதா போட்டாங்க... அந்த வழக்குகள், உயர் நீதிமன்றம் உட்பட, பல மாவட்ட நீதிமன்றங்கள்ல நடந்துட்டு இருந்துச்சு வே... ''இப்ப, அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் கூட்டணி வச்சிருக்கு... அதனால, எட்டு அவதுாறு வழக்குகளை, அரசு தரப்புல, வாபஸ் வாங்கிட்டாவ வே...

''இதனால, விஜய காந்த் ரொம்பவே குஷியாகிட்டாராம்... உடல்நிலை பாதிப்பால, சாப்பாடு விஷயத்துல கட்டுப்பாடு காட்டிட்டு இருந்தவர், வழக்கு வாபஸ் ஆனதால, வீட்டுல சர்க்கரை பொங்கல், மசால் வடை செய்ய சொல்லி, ரசிச்சு சாப்பிட்டாராம் வே...'' என, முடித்தார், அண்ணாச்சி.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • karthikeyanrajendran - pattukkottai,இந்தியா

    இது என்ன விளையாடுகிறார்களா மக்களுடைய வரிப்பணத்தில்.. இவர்கள் வேண்டுமென்றால் வழக்கை போடுவார்கள் ஆண்டு கணக்கில் இழுத்தடிப்பார்கள் எதிர்க்கட்சிகளை மிரட்டி பணிய வைப்பதற்காக இதெல்லாம் ஒரு உத்திதான்.. தயவுசெய்து நீதிமன்றம் ஏழு எட்டு ஆண்டுகளாக மக்களுடைய வரிப்பணத்தில் நடத்திய இந்த வழக்கு தீர்ப்பு வராமல் வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்ட இந்த அதிமுக அரசு மக்களுடைய பணத்தை திருப்பி அரசினுடைய கஜானாவில் சேர்க்குமா.. இந்த வழக்கை யார் எடுத்து நடத்தினர் அவர்களிடமே நீதிமன்றம் வசூலிக்க வேண்டும்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement