Advertisement

ஆண் பிள்ளைகளை, 'அடித்து' வளருங்கள்!

Share

நான் சிறுமியாக இருந்த போது, வீட்டிற்குள் நுழைந்து, திருட்டுத்தனமாக பாலைக் குடித்து போகும் பூனையை, எங்கள் அம்மா, கோபத்தில், அடித்து விரட்டுவார்.

எங்கள் அப்பா, 'பூனை பாவம் பொல்லாதது; அதை அடிக்காதே...' என்பார். வீட்டைச் சுற்றி பறக்கும் தட்டான் பூச்சியை பிடித்து, விளையாட்டுக்காக, அதன் வாலில் நுாலை கட்டி, பறக்க விடுவோம். 'வாயில்லா பூச்சிகளை துன்புறுத்தாதே' என, என் தாய் தடுப்பார்.அணில் மீது பாசம் பொழியும் என் சகோதரர்கள், ஓணானைப் பிடித்து துன்புறுத்துவர். 'இந்த ஓணான், என்ன பாவம் செய்தது; ஏன் இப்படி துன்புறுத்துகிறீர்கள்...' என கேட்டால், 'ராமபிரான் தண்ணீர் கேட்ட போது, அணில் ஓடிப் போய், இளநீர் எடுத்து வந்து கொடுத்தது; ஓணான் கொடுக்க மறுத்தது' என, சொல்வர், அப்பாவித்தனமாக!அப்போதும் என் வீட்டில் உள்ள பெரியவர்கள், 'இந்த மாதிரி துன்புறுத்தினால், அவை சாபம் விடும். அது, அடுத்த ஜென்மத்திற்கும் தொடரும்; நம்மை வாட்டும்' என்பர். சாபத்திற்கு பயந்து, சிறு பூச்சிகள், விலங்குகளை என் சகோதரர்கள் துன்புறுத்த தயங்குவர்.ஈரோடு அருகே உள்ள, பவானி சாகர் என்ற இடத்தில், நான் வேலை பார்த்த போது, நான் சந்தித்த ஒரு நபர், அப்பா சொன்னது பொய்யில்லை; உண்மை என்பதை புரிய வைத்தார். அவரின் கையிலும், காலிலும் உள்ள விரல்கள், மாடுகளின் குளம்புகளைப் போல சேர்ந்திருந்தன.அவரிடம் நான், 'ஏன் உங்களுக்கு இப்படி இருக்கிறது...' என கேட்ட போது, 'என் தாத்தாவுக்கு தாத்தா, தோட்டத்தில் பயிரை மேய்ந்த சினைப்பசுவை, உயிரோடு தோலை உரித்து கொன்று விட்டார். 'அந்த சாபம் தான் இது. அதற்குப் பிறகு, எங்கள் குடும்பத்தில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் கைகளும், கால்களும் இப்படி இருக்கிறது' என்றார்.பாட்டி கதைஅதுபோல, எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில், ஒன்பது பெண் குழந்தைகள். அந்த குழந்தைகளை கல்யாணம் செய்து கொடுப்பதற்குள், அந்த குடும்பத்தின் தலைவர் படாத கஷ்டமில்லை. 'இவருக்கு மட்டும் ஏன் இப்படி, ஒன்பது பெண் குழந்தைகள் பிறந்தன...' என, கேட்டதற்கு, பக்கத்து வீட்டு பாட்டி கூறிய கதை, மிகவும் சோகமானது.'அந்த குடும்பத் தலைவரின் தாத்தா, சிறு வயதாக இருந்த போது, இளம் பெண் ஒருவரை, ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி விட்டாராம். அதனால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாளாம். அவள் விட்ட சாபம் தான், அந்த குடும்பத்தில், ஒன்பது பெண் குழந்தைகள் பிறந்தன' என்றார்.

இது எல்லாம், விஞ்ஞான அறிவுக்கும், ஆய்வுகளுக்கும் மாறுபாடாக அல்லது வினோதமாக இருக்கலாம். ஆனால், இப்படி கூறினால் அல்லது இப்படி கூறி, நம் இளைஞர்களை நம்ப வைத்தாலாவது, பாவ காரியங்கள் செய்யாமல், ஒழுக்கமாக மாறுவரா என்ற நப்பாசை தான், நம்மவர்களுக்கு அப்போது இருந்தது.'போக்சோ' சட்டம்குழந்தைகள், பெண்களிடம் அத்துமீறி நடந்தால், குறைந்தபட்சம், ஏழாண்டு முதல், ஆயுள் தண்டனை வரை கிடைக்க வகை செய்யும், 'போக்சோ' எனப்படும் சட்டம் அமலில் உள்ளது.

இந்த விபரம், எல்லாருக்கும் நன்கு தெரியும். எனினும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து விட்டனவா?சில ஆண்டுகளுக்கு முன் வரை, மாநிலத்திற்கு ஒன்று என இருந்த இது போன்ற வழக்குகள், இப்போது, ஊருக்கு ஒன்றிரண்டு என்ற அளவுக்கு பெருகி விட்டன.ஹெல்மெட் இன்றி இரு சக்கர வாகனம் ஓட்டினால், ஓட்டுனர் உரிமம் பறிபோகும்; அதிகபட்சம், 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, மோட்டார் வாகன சட்டம் சொல்கிறது.

ஆனால், சாலையில் பாருங்கள், எத்தனை பேர், ஹெல்மெட் அணிந்துள்ளனர்?செய்வது தவறு என தெரிந்தும், தவறு செய்பவர்களை திருத்த, சட்டத்தாலும் முடியவில்லை; தண்டனைகளாலும் முடியவில்லை. பாவம் அல்லது சாபம் கிடைக்கும் என்று சொன்னாலாவது திருந்துவரா, என்ற எண்ணம் தான், இந்த கட்டுரை.இப்படித் தான், ஏழு ஆண்டுகளுக்கு முன், டில்லியில் மருத்துவ மாணவி, ஐந்து பேர் கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, குற்றுயிரும், குலை உயிருமாக சாலையில் வீசப்பட்டாள். அந்த கொடூரர்களுக்கு, இன்னும் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.அதே நேரத்தில், தெலுங்கானாவில், கடந்த மாத இறுதியில், கால்நடை பெண் மருத்துவர் ஒருவரை, நான்கு பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, தீ வைத்து எரித்து கொன்றது. அவர்களை, அந்த மாநில போலீசார், இரண்டு நாட்களுக்கு முன், 'என்கவுன்டரில்' சுட்டுக் கொன்றனர்.

இதையடுத்து, அந்த மாநில போலீசாருக்கு, நாடு முழுவதும் பாராட்டுகள் குவிகின்றன. இதைப் பார்த்தால், பாலியல் பலாத்காரங்களுக்கு எதிராக கடும் தண்டனை வேண்டும் என்ற மக்களின் உணர்வு வெளிப்படுகிறது.பிற வழக்குகளுக்கு, எந்த தண்டனை வழங்குகிறோம் என்பதை விட, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடிய பாலியல் பலாத்கார வழக்குகளுக்கு, அரபு நாடுகளில் வழங்கப்படுவது போன்ற தண்டனை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற குரல் இதன் மூலம் வலுத்துள்ளது.தட்டிக் கொடுக்கவும்போலீஸ் என்கவுன்டர்களை ஆதரித்தால், அவர்கள் அட்டூழியம் செய்யத் துவங்கி விடுவர்; நிரபராதிகளை கூட அவர்கள், கொன்று குவித்து விடுவர் என்ற குரலும் வெளிப்படுகிறது.எனினும், நம் நாட்டின் சட்டங்களாலும், தண்டனைகளாலும், பாலியல் குற்றங்கள் குறையாத போது, வேறு மாதிரி சிந்தனை தான் தேவைப்படுகிறது.அது, 'அரசன் அன்றுகொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்ற எண்ணத்தை, நம் இளைஞர்கள் மனதில் விதைக்க வேண்டும். தப்பு செய்தால், தண்டனை கிடைத்தே தீரும் என்பதைச் சொல்லி, ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.'முருங்கையை ஒடித்து வளர்க்க வேண்டும்; ஆண் பிள்ளைகளை அடித்து வளர்க்க வேண்டும்' என்பது கிராமத்து சொலவடை. முருங்கை மரம் வேகமாக வளரும். அப்போது ஒடித்து வளர்க்காமல் விட்டால், வீட்டின் உயரத்தையும் தாண்டி வளர்ந்து, கீரை, காய்களை பறித்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும்.அது போலத் தான், ஆண் குழந்தைகளையும், ஆண்களையும் அவ்வப்போது, 'தட்டியும்' தட்டிக் கொடுத்தும் வளர்க்க வேண்டும்.'எந்த தவறை நீ செய்தாலும், அது உன்னை மட்டுமின்றி, உன் குடும்பத்தையும் வாட்டும். இப்போது இல்லாவிட்டாலும், நீ தளர்வடைந்து, செயல் இழந்து இருக்கையில், நீ செய்த குற்றங்கள், உன் கண் முன் நிகழும். அப்போது உன்னால் தடுக்க முடியாது. 'நீ செய்த தவறுக்காக, ஒன்றும் அறியாத உன் குழந்தைகள் ஏன் அவதிப்பட வேண்டும்... அதனால், நேர்மையாக இரு; நல்லவனாக வாழு' என, ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும், ஆணுக்கும், அவனின் தாய், மனைவி அறிவுரை வழங்க வேண்டும்.

பழமொழிகள்வெறும் அறிவுரை மட்டும் வழங்கினால், யாரும் கேட்க மாட்டார்கள். அவன் புரியும் விதத்தில், பெரியோர் பொன் மொழிகள், பழமொழிகள், நடந்த சம்பவங்கள் போன்றவற்றுடன் விளக்க வேண்டும். இதை, சிறு வயதிலேயே செய்தால், பசுமரத்து ஆணி போல, மனதில் நன்கு பதியும்!நம் சமூகத்தில், பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகளுக்கு வரவேற்பு அதிகம். ஒரு பெண் கருவுற்று, ஆண் குழந்தையைப் பெற்று விட்டால், அவளுக்கு மதிப்பு அதிகம். 'ராஜா போல, சிங்கக்குட்டி போல, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து விட்டாள்' என்பர். அதன் பிறகு, அவளுக்கு இந்த சமுதாயத்தில் உள்ள மரியாதையே தனி!இப்போதிலிருந்து, 500 - 600 ஆண்டுகளுக்கு முன், அவுரங்கசீப் போன்ற முகலாய மன்னர்களைப் பார்த்து, இந்திய குறுநில மன்னர்கள் பயந்து கிடந்தனர். ஆனால், தன் தாய் ஜீஜா பாய் சொன்ன, இதிகாச கதைகளை கேட்டு வளர்ந்த இளைஞன் வீரசிவாஜி, முகலாய மன்னர்களுக்கு எதிராக, ஹிந்து சாம்ராஜ்ஜியத்தைப் படைத்தார்.தாயிடம் கிடைத்த ஞானம் தான், மோகன்தாஸ் என்ற சிறுவனை, மகாத்மாவாக மாற்றியது. சரியில்லாத தந்தையிடம் வளர்ந்ததால், ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர், கொடுங்கோலன் ஆனான். ஒரு நாட்டின் அஸ்திவாரமாக, இளைஞர்கள் இருப்பதால் தான், '100 இளைஞர்களை தாருங்கள்; இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்' என்றார், சுவாமி விவேகானந்தர்.ஆனால், இப்போது செய்தித் தாள்களைப் பாருங்கள்... மது குடிக்க பணம் தராத தாயை, தந்தையை கொன்ற மகன்; இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்; நடந்து சென்றவர்களிடம், மொபைல் போனை பறித்தவன்; காதலிக்க மறுத்த பெண்ணின் மீது, 'ஆசிட்' ஊற்றியவன்; கொலை செய்தவன் என, அநேகமாக அனைத்து குற்றங்களையும் செய்வோர் ஆணாகவும், அதிலும் இளைஞராகவும் தான் இருக்கின்றனர்.நிச்சயம் அந்த குற்றவாளி, யாரோ ஒரு தாய்க்கு மகன்; ஒரு பெண்ணுக்கு சகோதரன்; ஒரு பெண்ணுக்கு கணவன் என, பல ரூபங்களாக விளங்குகிறான். சிறு வயதில் கட்டுப்பாட்டுடன் வளர்க்கத் தவறிய ஆண் பிள்ளைகள், பின், மோசமான குண நலன்களுடன், ஊதாரிகளாக மாறி, சமூகத்தில் பீதியை ஏற்படுத்துகின்றனர்.

அதனால் தான், ஆண் குழந்தைகளை அடித்து, அதட்டி, அறிவுரை கூறி, அவ்வப்போது தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டியது அவசியம் என்கிறேன். அதே நேரத்தில், பெண் குழந்தைகளை சுதந்திரமாகவும், அவிழ்த்து விட்டும் வளர்க்க வேண்டும் என, சொல்லவில்லை.'நம் வீட்டில் வளரும் பெண் குழந்தைகளைப் போன்றவர்கள் தான்; பிற வீடுகளின் பெண் குழந்தைகளும். அவர்களிடம் காம வேட்கை கொள்ளக் கூடாது. 'உனது சகோதரியிடம், பிற ஆண்கள் தவறாக நடந்து கொண்டால், அது எந்த அளவில் அவளுக்கும், நம் குடும்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமோ அதே போல தான், நீ, பிற பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் போதும், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.பெற்றோரின் கடமை'எனவே, காம வேட்கை அதிகமாக இருக்கும், 14 வயதிலிருந்து, 19 வயது வரை, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் தவறிழைத்து விட்டால், ஆயுள் முழுக்க தண்டனையாக இருக்கும்' என, அந்தச் சிறுவனுக்கு அறிவுறுத்த வேண்டியது, பெற்றோரின் கடமை.சிறுவனாக இருக்கும் போதே, அவனின் புத்தியை அறிந்து, திருத்தாத பெற்றோர், மாபெரும் தவறைச் செய்தவர்கள் ஆவர்.முதலில் சிறிய குற்றங்களைச் செய்யும் போது, கண்டிக்கப்படாதோர், தண்டிக்கப்படாதோர் தான், பிற்காலத்தில் பெரிய குற்றங்களைக் கூட, மன வருத்தமே இல்லாமல் செய்கின்றனர். அவர்களை நல்வழிப்படுத்தத் தவறியது, பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொறுப்பு தானே!அதுபோல, திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பின், ஆண் தவறு செய்தால், அந்த தவறுக்கு, மனைவியான பெண்ணும் உடந்தை தான். மணமான பின், வேறொருத்தியுடன் ஓடும் கணவன்; பச்சிளம் குழந்தையை பாலியல் வன் கொடுமை செய்யும் அயோக்கியன்; மதுபானக் கடையே கதி என, விழுந்து கிடக்கும் மடையன் போன்றோரை திருத்த வேண்டிய பொறுப்பு, தடுக்க வேண்டிய கடமை, அவனின் மனைவிக்குத் தான் உள்ளது.தன் கணவன் தவறான பாதையில் போகிறான் என்பதை கண்காணிக்கத் தெரியாதவள், மனைவியாக இருக்கவே லாயக்கற்றவள். ஆண்களை அடக்கி ஆள்பவள் தான் பெண்.நல்லொழுக்க வகுப்புகள்நான் எவ்வளவோ முயற்சித்தேன்; கணவன் திருந்தவில்லை என்ற நிலை ஏற்படும் போது, அவனுக்கு, எவ்வித, 'ஷாக்' டிரீட்மென்ட் கொடுக்கவும், பெண் தயாராக இருக்க வேண்டும். அதற்கு அவள், தன் சொந்த காலில் நிற்கும் வலு அவசியம்.சில சினிமா படங்களில் பார்த்திருக்கலாம். தெருவில் ரவுடித்தனம் செய்யும் ஒருவன், வீட்டில், பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடப்பான். அந்த அளவுக்கு அவனை பக்குவமாக வைத்திருக்கும், 'தொழில்நுட்பம்' தெரிந்தவள் தான் மனைவி.அதற்காகத் தான், சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, நல்லொழுக்கம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறேன். முன்னர் பள்ளிகளில், நல்லொழுக்க வகுப்புகள் இருந்தன.

இப்போது இல்லாதது தான், சிக்கல்களுக்கு அடிப்படை காரணம். எனவே, பள்ளிகளில் மீண்டும் அறநெறி வகுப்புகளை துவக்குங்கள்.தவறிழைத்து சிறை சென்றவர்களை அழைத்து வந்து, செய்த தவறால், அவர் குடும்பம் சந்தித்த பிரச்னைகள்; அவர் சந்தித்த துன்பங்களை சொல்ல வைத்து, இளைஞர்களை கேட்க செய்யுங்கள்.இதுபோன்ற சிறிய விஷயங்கள் தான், தவறிழைக்கும் இளைஞர்களை திருத்துமே தவிர, தண்டனைகளாலும், என்கவுன்டர்களாலும் முடியாது!எஸ்.செல்வசுந்தரி சமூக ஆர்வலர்இ-மெயில்: selvasundari152@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement