Advertisement

கடவுளிடம் இருந்து யாரும் தப்பவே முடியாது!

Share

சுப்ர.அனந்தராமன், சின்ன காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ரயில்வே ஐ.ஜி.,யாக இருந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவை, கூடுதல் பொறுப்பாக கவனித்தபோது, அதற்குரிய ஊதியத்தை, பொன் மாணிக்கவேல் பெறவில்லை. 'கடவுளுக்கு ஆற்றும் பணியாக, இந்த வேலையை செய்கிறேன்' என, அவர் கூறியுள்ளார். நேர்மையான, நெஞ்சுரம் மிக்க, ஓய்வு பெற்ற, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், 'ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய் ஊதியமே, தமிழக அரசிடம் இருந்து வேண்டாம்' எனக் கூறி, பணியாற்றியுள்ள செய்தி வியப்பளிக்கிறது.

வேறு எந்த தமிழ் பத்திரிகையும், வார இதழ்களும் வெளியிடாத பொன் மாணிக்கவேலின் சிறப்பு பேட்டியை, 'தினமலர்' நாளிதழ் மட்டுமே, வெளியிட்டுள்ளது; வாசகர் என்ற முறையில், இதற்காக பெருமைப்படுகிறேன். பழங்கால பொக்கிஷங்களாக விளங்கும், சுவாமி விக்ரகங்கள் நுாற்றுக்கணக்கில், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. ஆவண ரீதியாக, சிங்கப்பூரில் இருந்து, 16 சிலைகள் உட்பட, எண்ணற்ற சிலைகளை மீட்டு, வர வேண்டியுள்ளது. அதற்குள், பொன் மாணிக்கவேல் பணியில் இருந்து, தமிழக அரசால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பண்பாட்டு துரோகிகளான, அரசியல்வாதிகளே பல ஆண்டுகளாக, தமிழக கோவில்களில் இருந்து, விலை மதிக்க முடியாத, புராதன சிலைகளை கடத்தி இருக்கின்றனர்; அதற்கு, அறநிலைத்துறை அதிகாரிகளும் துணை போயிருக்கின்றனர்; இந்த வெட்ட வெளிச்சமான உண்மையை, வெளியே கொண்டு வருவதற்குள், பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்றுள்ளார். புதிதாக அவரது பதவியை ஏற்றுள்ள, ஐ.ஜி., அன்புவிடம், 'வழக்கு சம்பந்தமான ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்' என, தமிழக காவல் துறை கோரியுள்ளது.

அதற்கு, 'ஆவணங்கள் ஒருங்கிணைப்பு பணிகள் நடந்து வருவதால், விரைவில் ஒப்படைக்க இருக்கிறேன்' என, பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். அவர் ஒப்படைக்க வுள்ள ஆவணங்களை, நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியாது. நீசர்களும், அதற்கு துணைபோன லஞ்ச ஊழல் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், கடவுளிடம் இருந்து, தப்பவே முடியாது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு, பொன் மாணிக்கவேல் ஆற்றிய பணிகள் மிகவும் பாராட்டத்தக்கது!

உயிரை மாய்ப்பது பிரச்னைகளுக்கு தீர்வாகாது!
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ மெயில்' கடிதம்: உயிர் என்பது, ஆண்டவன் கொடுத்துள்ள அருமையான பொருள். அது, போனால் திரும்ப வராது. மன போராட்டங்களுக்கு தீர்வு, தற்கொலை அல்ல. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, ஆசிரியர் தண்டித்ததாக கூறி, இருவேறு பள்ளிகளில், இரண்டு, 10ம் வகுப்பு படித்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மாணவர்களின் உறவினர்கள், தாலுகா போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாவட்ட கல்வி அலுவலர், 'புகார் வந்தால் விசாரணை நடத்தி, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்போம்' என, கூறியுள்ளார். இதை கேட்டு அழுவதா, சிரிப்பதா என, தெரியவில்லை. அன்று, ஆசிரியர்கள் போதித்த நல்ல விஷயங்கள், மாணவர்களுக்கு பசுமரத்தாணி போல, மனதில் பதிந்து இருக்கும். ஆனால், இன்று அவையெல்லாம் வழக்கொழிந்து விட்டன. வீட்டில் பெற்றோரும், பள்ளிகளில் ஆசிரியர்களும், மாணவர்களை மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாற்றி விட்டனர்.

இன்று, காலை எழுந்ததிலிருந்து, இரவு படுக்க போகும் வரை, மாணவ செல்வங்கள், பையும், கையுமாக, பல்வேறு டியூஷன்களுக்கு செல்வது, வாடிக்கையாகி விட்டது. கல்வி என்பது, பணம் சம்பாதிக்கும் மார்க்கம் என்றாகி போனது. பெற்றோரின் கனவுகளுக்கும், ஆசிரியர்களின் கண்டிப்புக்கும், மாணவர்கள் கள பலி கொடுக்கப்படுகின்றனர். சிறு வயதிலேயே மாணவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு, தற்கொலை தான் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

பிஞ்சு வயதிலேயே மாணவர்களுக்கு, நல்ல பல விஷயங்கள் கற்க ஆவன செய்ய வேண்டியது, கல்வி துறையின் கடமை. அன்பு மாணவச் செல்வங்களே... உயிரை மாய்த்து கொள்வது தான், பிரச்னைகளுக்கு தீர்வு என்றால், உலகில் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள். இன்று மாணவர்களை, ஆசிரியர்கள் ஒரு வார்த்தை தண்டித்தும், கண்டித்தும் திருத்த முடியாது; முடிவு விபரீதம் ஆகி விடும். ஆசிரியர்கள் மீது, வீண் பழி வருவதை தவிருங்கள். ஒவ்வொரு மாணவனின் தற்கொலைக்கு பின்னணியிலும், ஓர் ஆசிரியர் இருப்பர் என்ற கண்ணோட்டத்தை, கல்வி அலுவலர்களும் கை விட வேண்டும்!

மஹா., நிலைமை எந்த மாநிலத்திற்கும் வரக்கூடாது!டாக்டர் ஆர்.அசோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'நானோ, என் குடும்பத்தாரோ எந்த பதவிக்கும் வரவே மாட்டோம்' என்ற பால் தாக்கரே வாக்கை, பொய்யாக்கி விட்டு, அவரது மகன் உத்தவ் தாக்கரே மஹாராஷ்டிர முதல்வராகியுள்ளார். தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், உத்தவ் தாக்கரேயின் பதவி ஏற்பு விழாவில், பங்கேற்றுள்ளார். ஆனால், ரோஷக்காரர்களான, சோனியாவும், ராகுலும் புறக்கணித்தனர்.

'கருணாநிதியின் தலையை வெட்டுவேன்' என்று சொன்ன, பால் தாக்கரேயின் மகன், உத்தவ் தாக்கரேவை, கட்டி அரவணைத்து வந்துள்ளார், ஸ்டாலின். இப்படி அரசியலில், எதிரும், புதிருமான, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து, மஹாராஷ்டிராவில் ஆட்சி செய்கின்றன. மும்பை சென்று உத்தவ் தாக்கரேயை சந்தித்து வாழ்த்து கூறியதால் ஸ்டாலினும், காங்கிரசுக்கு மாற்றாக, எதிரும், புதிருமான அரசியலை தேர்ந்தெடுத்து விட்டார் போலும்.

'மராட்டியம் மராட்டியர்களுக்கே சொந்தம்... இங்கு பிழைக்க வந்த தமிழர்கள், உடனே மும்பையில் இருந்து வெளியேற வேண்டும்; இல்லையென்றால், நடப்பதே வேறு' என, 1970களில் மிரட்டினார், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே. அதற்கு, அந்த காலத்தில் பயந்து, கடுகளவு கூட, தன் எதிர்ப்பை தெரிவிக்காமல் இருந்தார், அன்றைய முதல்வர் கருணாநிதி. பால் தாக்கரேயின் மிரட்டலை கண்டு மிரண்டு, தனி அறையில் கண் கலங்கி அழுதாராம், கருணாநிதி. மஹாராஷ்டிராவை போல, அரசியலில் எதிரி நண்பர்களாவதும், நண்பர்கள் எதிரிகளாவதும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் வரக் கூடாது!

வாக்காளர்கள் இளிச்சவாயர்கள் அல்ல!
சு.பிரபாகர், தேவகோட்டை, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'வில்லன் நடிகர் நம்பியார் கெட்டவர்; அவர், எம்.ஜி.ஆரின் விரோதி' என நம்பும், நம் பாட்டி, தாத்தாக்கள், இன்னமும் உயிருடன் தான் இருக்கின்றனர். தன்னை தி.மு.க.,வில் இருந்து விலக்கிய நேரத்தில், மதுரையில் ஒரு மாநாடு நடத்தினார், எம்.ஜி.ஆர்., சக்தி வாய்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தி, பத்திரிகை மற்றும் ரசிகர்களில் உண்மையான தொண்டர்கள் நாடித்துடிப்பை அறிந்து, அரசியலில் இறங்கி எம்.ஜி.ஆர்., சாதித்தார்.

ஆனால், தொழில்நுட்பம் நிறைந்த இக்கால கட்டத்தில், 'அரசியலில் குதிப்போம்' என்ற முடிவுடனும், 'இணைந்து செயல்படுவோம்' என்றும், பல அறிக்கைகள் விடும் ரஜினி - கமல், ஒன்றுக்கு பலமுறை நன்றாக யோசித்து, அரசியல் களம் இறங்கினால் நல்லது. இதற்கு, மக்கள் பிரச்னைகளை அந்தந்த இடத்துக்கே சென்று, மக்களோடு மக்களாக இருந்து, எளிமையாக கேட்டு வர வேண்டும்.

பத்திரிகை மற்றும் 'டிவி' செய்திகளை, தெரிந்து கொள்ள வேண்டும். தங்களை பற்றிய தவறான பேச்சுகளுக்கு, சரியான பதில் அளித்து விளக்க வேண்டும். விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும். ஒருமுறை தேர்தலை சந்தித்து, வெற்றி பெற்றால் சந்தோஷமும், தோல்வி அடைந்தால் காணாமல் போய் விடவும் கூடாது.

அதேசமயத்தில், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள், மக்களுக்கு எதிராக செயல்பட்டால், அவர்களை பதவியிலிருந்து துாக்கி, மற்றொரு தொண்டருக்கு வாய்ப்பு தர வேண்டும். இந்த விஷயத்தில், ஜெயலலிதா போல் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஒன்றும் சாதாரணமாக, அரசியலுக்கு வந்து விடவில்லை. ஜெயலலிதாவும், அவரை பின்பற்றியே அரசியலுக்கு வந்தார். இருவரையும் போன்று, அரசியலில் நீண்ட காலம் பணியாற்ற வேண்டும்.

இப்படி கஷ்டப்பட்டு தான், யாரும் அரசியலுக்கு வர முடியும்; அவர்களுக்கு தான் வாக்காளர்கள் ஆதரவு அளிப்பர்.அதை விட்டு, ஓராண்டிற்கு முன், நடிகர் கமல் கட்சியை துவக்கியும், ரஜினி இன்னும் கட்சியே துவக்காமலும், கஷ்டப்படாமலும் ஆட்சிக்கு வர நினைப்பது, கானல் நீராகி விடும்!

முதல்வர் இ.பி.எஸ்.,சின் வெற்றி ரகசியம்!
கே.எஸ்.தியாகராஜ் பாண்டியன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ஜெயலலிதா மறைந்த பின், இ.பி.எஸ்., முதல்வரானது அதிசயமாக இருக்கலாம். ஆனால், அவர் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக, முதல்வர் பதவியில் இருப்பது, ஆட்சியையும், கட்சியையும், தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, அவரது புத்திசாலித்தனம். 'அ.தி.மு.க., அரசு, பா.ஜ.,வின் அடிமை அரசு' என, மேடைதோறும், தி.மு.க.. தலைவர் ஸ்டாலின் முழங்கினாலும் கூட, தி.மு.க.,வின் நரித்தனம் தெரிந்த, முதல்வர் இ.பி.எஸ்., அமைதியாக இருக்கிறார்.

தி.மு.க., கூட்டணியில், 39 எம்.பி.,க்கள் இருந்தும், அமைச்சர் பதவி இல்லை என்ற ஆதங்கம், தி.மு.க.,வுக்கு உள்ளது. பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகினால், அடுத்த நொடியே, காங்கிரசை உதறி, பா.ஜ.,வுடன், தி.மு.க., கூட்டணி சேர்ந்து விடும். அத்துடன் நில்லாது, 'வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ.வுக்கு, 80 எம்.எல்.ஏ., சீட் தருகிறோம்' என ஆசை வார்த்தை கூறி, அ.தி.மு.க., அரசை கலைக்கவும், தி.மு.க., வலியுறுத்தும். இதையெல்லாம் உணர்ந்து தான், பா.ஜ.,வுடன், இ.பி.எஸ்., இணக்கமாக உள்ளார்.

தனக்கு எதிராக தர்மயுத்தம் துவக்கிய, ஓ.பி.எஸ்.,சை ஆட்சியில் இணைத்து, துணை முதல்வர், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொடுத்து, தன் ஆதரவாளராக மாற்றி விட்டார். துணை முதல்வர் ஓ.பி,எஸ்., வெளிநாடு பயணம் செல்ல, பெருந்தன்மையோடு அனுமதி அளித்து இருந்தார். பல விருதுகளை, ஓ.பி.எஸ்., பெற்று வந்ததை, பெருந்தன்மையுடன் வரவேற்று இருப்பதன் வாயிலாக, தான் ஓர் எளிமையான, ஆணவம் இல்லாத தலைவர் என, முதல்வர் காட்டி இருக்கிறார்.

சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன், ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவார் என, அ.தி.மு.க.,வினர் நினைத்தனர். அதை, முறியடிக்க மிக பொறுமையாக காய் நகர்த்தினார்; தினகரன் ஆதரவாளர்கள் பாதிக்கு மேல், அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைத்து, தான் ஒரு ராஜ தந்திரி என, முதல்வர் இ.பி.எஸ்., நிரூபித்து விட்டார். தமிழகத்தில், ஒன்பது புதிய மருத்துவக் கல்லுாரிகள் கொண்டு வந்திருப்பது, முதல்வரின் சாதனை. ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கியது, புதிய மாநகராட்சிகள், புதிய தாலுகாக்கள், புதிய வருவாய் கோட்டம் என, தொடர்ந்து அதிரடி அறிவிப்புகள் வாயிலாக, மக்களை கவர்ந்து வருகிறார். ஆணவம் இல்லாமை, புத்திசாலித்தனம், இவை தான், முதல்வர் இ.பி.எஸ்.,சின் வெற்றி ரகசியங்கள்!

வாய்கிழிய பேசுவோர் ஜெ.,வை மறந்தது ஏன்?ஏ.காதர் மைந்தன், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: உரசினால் எரிவதற்கும், ஊதினால் அணைவதற்கும், மக்கள் சாதாரண தீக்குச்சியல்ல. மக்கள் சக்தி என்றென்றும் மகத்தானது. மக்களின் சக்தியையும், உரிமையையும் பறிப்பது என்ற முயற்சி, ஜனநாயகத்தின் வேரை ஆட்டிப் பார்ப்பது போன்றது. தாங்கள் விரும்பினால், நேரடியாக தேர்வு செய்யும் வகையிலும், தாங்கள் விரும்பாவிட்டால், அம்முறையை மாற்றம் செய்யவும், தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயக கேலிக்கூத்து! தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல்களில், மாநகராட்சி மற்றும் நகராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக ஓட்டளித்து, தேர்வு செய்யும் முறையை மாற்றி, கவுன்சிலர்களே மறைமுகமாக தேர்வு செய்ய வழி வகுத்துள்ளனர்.

இந்த முறையில், அவசர சட்டத்தை, தமிழக அரசு அவசர அவசரமாக பிரகடனப்படுத்தி, மாபெரும் வரலாற்றுப் பிழையை செய்திருக்கிறது. மக்கள் தாங்கள் விரும்பும் நபரை, நகராட்சிக்கோ அல்லது மாநகராட்சிக்கோ தலைவராக நேரடியாக தேர்வு செய்வது, வாக்காளரின் அடிப்படை உரிமை. இதை முற்றிலும், அரசியல் காரணங்களுக்காக, தள்ளி வைத்து, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வருவது, சரியானதல்ல. இரண்டடுக்கு தேர்வு முறை வாயிலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோர் கூடி, மற்றொருவரை தலைவராக தேர்ந்தெடுக்கும் முறையால், எவ்வளவு குழப்பம், கடத்தல், குதிரை பேரம், சட்ட - ஒழுங்கு பிரச்னைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன.இதற்கு உதாரணமாக, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல்கள் முடிந்தபின், நடைபெற்ற நிகழ்வுகள் அமைந்தன.

ஜெயலலிதா அரசுக் கட்டிலில் அமர்ந்திருந்த போது, சட்டத்திருத்தம் வாயிலாக, உள்ளாட்சி தலைவர்கள் நேரடி தேர்வு முறையை அமல்படுத்தினார். 'அவரது வழியில் ஆட்சி செய்கிறோம்' என, வாய்கிழிய பேசும், தற்போதைய அரசு, இதில் மட்டும் வசதியாக, ஜெயலலிதாவை மறந்தது ஏன்? எனவே, இந்த பிழையை சரி செய்யும் வகையில், உள்ளாட்சி தேர்தலில் தலைவர்களை நேரடியாக, மக்களே தேர்வு செய்யும் நடைமுறையை அமல்படுத்த, தமிழக அரசு முன் வர வேண்டும்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • venkat Iyer - nagai,இந்தியா

    திரு.அனந்தராமன் அவர்கள் கூறும் சில விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியும்.பலவற்றை ஏற்க முடியாது.பொன்மாணிக்கவேல் ஒரு நேர்மையான அதிகாரி,அதனை பாரட்டீவோம்,ஆதலால்,அதற்காக அவருக்கு கீழே பணிபுரியும் அலுவலர்களிடம் உட்கார்ந்து மதித்து கருத்து கேட்க கூடாது என்பதில்லை. அவர் மிடுக்காக நடந்து கொண்டாலும் ,அவருக்கு கீழே பணிபுரியும் அலுவலர்கள் பலர் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்ததை அவர் மறக்க கூடாது.மேலும் தமிழக அரசியலில் இருப்பவர்கள் சிலைக்கடத்தல் ஊழலில் சம்மந்தப்பட்டிருப்பது போல அவர் ஜாடைமாடையாக கூறுவதும் ஆளும் கட்சியை கேவலப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.உண்மையால் பல விஷயங்கள் அரசு கவனத்துக்கு தெரிவது கிடையாது. யாரோ செய்யும் தவறுக்கு அரசினை குறை கூறவும் கூடாது.அம்மாவின் ஆட்சியில் ஆன்மிகத்தில் பற்று உள்ளவர்கள்தான் எம் எல் ஏ பதவிகளில் இருக்கின்றார்கள். ஆன்மிகத்தினையும் ஆட்சியையும் இரு கைகளால் வைத்து இருப்பதை பொது மக்கள் என்ற விதத்தில் என்னால் உணரமுடிகிறது .அம்மா ஆட்சியில் அம்மா மக்களிடம் இறங்கி வந்து பணிபுரிய வில்லை என்ற குறை நம்மிடையே பலருக்கு இருந்தது.அது முதலமைச்சர் திரு.எடப்பாடியார் மக்களை அனுகுவது மூலம் அந்த குறையை போக்கி நிறைவேற்று வருகிறார்.புதியதாக வந்திருக்கும் சிலைகடத்தல் ஐஜி திரு அன்பு அவர்களின் நேர்மையை சாதரணமாக எடைபோட்டு குறை சொல்ல முடியாது.திரு.பொன்மாணிக்கவேல் தன்னைவிட நேர்மையானவர் யாரும் இல்லாதது போல சமுகத்துக்கு அவர் உணர்த்துவதுப்போல நடந்து கொள்கிறார். மேலும் திரு.அனந்தராமன் ஏதோ திரு.பொன்மாணிக்கவேல் தனது சொந்த காசை செலவு செய்து சிலைகளை திரும்ப கொண்டுவந்தது போல கூறியுள்ளார். அதன் பின்னணியில் மக்களின் ஒத்துழைப்பு மேலும்,அவருக்கு மத்திய வெளியுறவு துறை மற்றும் மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்துள்ளதை மறைக்க பார்க்கின்றார்..ஓய்வு பெறும் வரை அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதை அவர் மறுக்க மாட்டார்.அவர் கூறியது என்னவென்றால் மீதம் இருக்கும் வேலையை கம்பளம் இல்லாமல் முடித்து கொடுப்பதாக மட்டுமே கூறியிருக்கின்றார்.அவரின் பெரும்பான்மையை வேண்டுமானால் போற்றுவோம்.புதியதாக வருபவர்கள் செய்யமாட்டார்கள் என்று கூறுகிறார்.நான் ஈடுபட்டால் சிலர் மாட்டுவார்கள் என்று கூறி தன்னை பணியை செய்யவிடாமல் தடுக்கிறார்கள் என்று கூறுகிறார்..இதனை விடுத்து புதியதாக போடப்பட்ட அலுவலருக்கு பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உதவி செய்வதாக கூறியிருக்கலாம்.ஓய்வு பெறுபவர்கள் எல்லோரும் இது போல் பணி நேர்மை மற்றும் நிலுவை வேலை என்று சொல்லி பணி நீட்டிப்பு கேட்க ஆரம்பித்தால் யாரும் பணி ஓய்வு பெற முடியாது.அவருடைய நேர்மையை உண்மையில் பாராட்டுவோம்.மக்இளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காத நிலையை அனந்தராமன் அவர்கள் பேசவில்லை.அவரைப்போல நேர்மையான பணியாளர்கள் காவல்துறையில் இல்லை என்று சமுகத்தில் அவர் உணர்த்துவது போல நடத்து கொள்வதை உச்ச நீதிமன்றமே கேட்டுள்ளது.உச்ச நீதிமன்றம் சொல்லிய பின்னரும் அவர் மனம் இல்லாமல் பதவிக்காக தொடர்ந்து மேல்முறையிடு செய்ய முயற்சிப்பது சரியில்லை என்றுதான் தோன்றுகிறது.இவர் ஒரு மற்றவர்களுக்கு நேர்மையானவர் என்பதற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். பிடிவாதத்தால் என்ற அவப் பெயருடன்,நேர்மைதன்மையை மங்கும் வகையில் நடந்து கொள்வது சமுகம் ஏற்காது.வாசகர்கள் ஆழமாக கூர்ந்து அவரது நடவடிக்கைகளை பார்த்து கருத்துக்களை தெரிவிக்கவும்.

  • Darmavan - Chennai,இந்தியா

    இந்துக்கள் ஜடங்கள் .இந்துக்கள் ஒன்று சேர்ந்து உச்ச நீதி மன்றத்தில் மாணிக்க வேலை விடவேண்டாம் என்று மனு செய்திருக்கலாம் இப்போது அவர் பட்ட கஷ்டங்கள் வீணாக்கப்படுகிறது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement