Advertisement

'டவுட்' தனபாலு

Share

இ.பி.எஸ்., முதல்வர்: ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து, உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு செய்த பின், வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். உள்ளாட்சி தேர்தல் குறித்த தோல்வி பயத்தால் தான், நீதிமன்றத்தை, தி.மு.க., நாடியது. கடந்த, 2016ல், தேர்தல் அறிவித்த போதும், நீதிமன்றத்தை நாடிய அக்கட்சி தான், தேர்தலை நிறுத்தியது.

'டவுட்' தனபாலு: கடந்த, 2016ல், உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது, தி.மு.க., தான் என கூறும் நீங்கள், அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சரியானபடி வாதாடி இருந்தால், அப்போது, தேர்தல் நின்றிருக்காதே... இப்போதும், 'தேர்தல் தடை செய்யப்படலாம் என, கடைசி வரை நீங்கள் நம்பிக் கொண்டிருந்தீர்கள்' என்ற, தி.மு.க.,வினர் மேற்கொள்ளும் பிரசாரத்தில் உண்மை உள்ளதோ. 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

தி.மு.க., - எம்.பி., கனிமொழி: தெலுங்கானா கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட குற்றத்தில் தொடர்புடையவர்கள், போலீசாரின், 'என்கவுன்டர்' தாக்குதலில் கொல்லப்பட்டது, நியாயமான முடிவு என்றே தோன்றும்; இதை மறுப்பதற்கில்லை. அதே சமயம், நீதிமன்றம் மூலம், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்திருந்தால், தவறு செய்ய நினைப்போருக்கு பயம் ஏற்படும்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வது உண்மை தான். முன்னர், ஆண்டுக்கு ஒன்றிரண்டு என, பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்தன. ஆனால், இப்போது, நினைக்கவே அஞ்சும் வகையில், மாதத்திற்கு நான்கைந்து கொடூரங்கள் நிகழ்கின்றன. அவற்றை தடுத்து நிறுத்த, இந்த அதிரடி தான் சரியாக வரும் என, உங்களைப் போல துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு கிைடைக்காத, சாதாரண மக்கள் நினைப்பது, உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது என்பது தான், 'டவுட்' ஆக உள்ளது.

தமிழக காங்., தலைவர் அழகிரி: உச்ச நீதிமன்றத்திற்கு, தி.மு.க., சென்று, தேர்தல் வேண்டாம் என, சொல்லவில்லை. ஆனால், தவறான முறையில் நடத்த வேண்டாம் என்று தான் வலியுறுத்தியது. தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல், மறைமுக தேர்தல் நடத்துவது; ஒரே தேர்தலை இரண்டு கட்டமாக நடத்துவது தேவையில்லை என்ற கருத்துகளை தான் நீதிமன்றத்தில் தெரிவித்தோம்.

'டவுட்' தனபாலு: தி.மு.க., வுடன் கூட்டணியில் இருப்பதற்காக, அவர்கள் மேற்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளையும், ஆதரிக்க வேண்டியதாகி விட்டது உங்களுக்கு... அதனால், தி.மு.க.,வின் கோரிக்கைக்கு எதிரான தீர்ப்பை, ஆதரவாக வந்தது போல பேசுவதற்கு, தனி சாமர்த்தியம் வேண்டும். இப்படி பேசினால் தான், தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சில், கணிசமான இடங்களை கவர முடியும் என்பது உங்களின் எண்ணமோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.

காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்: என் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்தை, 2007ம் ஆண்டு நடந்த சம்பவங்களுக்காக, 2017ல் வழக்குப்பதிவு செய்து, 2019ல், தேவையில்லாமல், 106 நாட்கள் சிறையில் அடைத்ததற்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். அவர், வழக்கம் போல லோக்சபாவிற்குச் சென்று, இந்த அரசுக்கு எதிராக பேசியது மகிழ்ச்சியை தருகிறது.

'டவுட் தனபாலு: மத்திய அரசுக்கு தான், உங்கள் தந்தை மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி இருந்திருக்கும்; நீதிமன்றங்களுக்கு இருந்திருக்காதே. மத்திய அரசு என்ன சொன்னாலும், தீர்ப்பு சொல்ல வேண்டியது நீதிபதிகள் தானே... இந்நிலையில், உங்கள் தந்தையை சிறையில் வைத்தது தொடர்பாக, மத்திய அரசு மீது நீங்கள், காழ்ப்புணர்ச்சியுடன் புகார் கூறுகிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: வரலாற்றுச் சிறப்புக்குரிய தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது. ஜனநாயகத்தை காக்கக் கூடிய வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. தி.மு.க.,வின் கோரிக்கையை புரிந்து, தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக அரசுக்கும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

'டவுட்' தனபாலு: கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல பேசுகிறீர்கள். தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி தான், உச்ச நீதிமன்றத்திற்கு நீங்கள் சென்றீர்கள். உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, புதிய மாவட்டங்களை தவிர்த்து, பிற இடங்களில் தேர்தல் நடத்த, கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த உத்தரவை, உங்களுக்கு கிடைத்த வெற்றியாக கூறுகிறீர்கள். இது தான் உங்களின், 'உல்டா' அணுகுமுறையோ; 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தென் பெண்ணையாற்றின் துணை நதியான, மார்க்கண்டேய நதியின் குறுக்கே, அணை கட்டும் பணிகளை, கர்நாடகா துவங்க வாய்ப்புள்ளது. அந்த ஆற்றில் அணை கட்டப்பட்டால், தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் என, ஐந்து மாவட்டங்கள் பாதிக்கப்படும். எனவே, தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, விசாரணை துவங்கப்படும் வரை பெண்ணையாற்றில், பாசன திட்டங்களை செயல்படுத்த, கர்நாடகாவுக்கு தடை விதிக்க, தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: தமிழக அரசு இப்போது, உள்ளாட்சி தேர்தல், 'மூடில்' உள்ளது. இந்த நேரத்தில் போய், தென் பெண்ணையாறு போன்ற விவகாரங்களில் தலையிட அவர்கள் என்ன, 'அரசியல்' தெரியாதவர்களா... உள்ளாட்சி தேர்தலின் போது, அந்த ஐந்து மாவட்ட மக்களிடம் வாக்குறுதி அளிக்க வசதியாக, இந்த விவகாரத்தை ஆற போட்டுள்ளனர். அந்த விபரம், அறிக்கை வெளியிடும் உங்களுக்கு தெரியலையோ என்ற, 'டவுட்'டை ஏற்படுத்தியுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    2016 இல் உங்கள் அம்மா இருக்கும் போதே உச்ச நீதிமன்றத்தை அணுகி தேர்தலை நடத்தி இருக்கலாமே பிரசாரத்துக்குப் போகத் தலைவர்கள் தயங்கி, அம்மா உடல்நலத்துக்கு யாகம், வேண்டுதல் என்று நாடகமாடத்தானே நேரம் இருந்தது. இந்த 9 மாவட்டங்களை பிரித்து, அதே சாக்காய் தேர்தலைத் தள்ளிப்போட என்ன அவசரம் உங்கள் பங்குக்கு நீங்களும் தேர்தலைத் தவிர்த்தீர்கள் சும்மா வெளியில் திமுகவைக் குற்றம் சொல்லி நாடகமாடுவது தெரியாதா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement