Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நீங்கள் சொல்வது சரி தான். மதுவால் மாநிலம், முக்கால்வாசி சீரழிந்து விட்டது...' என, கூறத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பேச்சு: தமிழகத்தில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 100 கோடி ரூபாய்க்கு மது, அதிகமாக விற்றுள்ளது. தீபாவளி, பொங்கல், விடுமுறை நாட்களில் இலக்கு வைத்து, மாநில அரசே, மதுபானங்களை விற்கிறது. மது, பாலியல் வன்முறை அதிகரித்தால், தமிழகம் பாழாகி விடும்.

'உண்மை தான், யாருமே நடத்த முடியாத போரைத் தான், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இவர் நடத்திக் கொண்டிருக்கிறார்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், பல கட்சிகளில் இருந்து, இப்போது, எந்த கட்சியிலும் இல்லாத நாஞ்சில் சம்பத் பேச்சு: ஜாதி ஆதிக்கத்திலிருந்து தமிழர்களை மீட்டெக்க, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தொடுத்திருக்கும் போர், வேறு யாரும் செய்ய முடியாத போர். கோடிக்கணக்காக பணம் இருப்போராலும் நடத்த முடியாத போர். சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளாலும், இந்த போரை நடத்த முடியாது.

'இதை கேட்கும், பா.ஜ.,வினர் நிச்சயம் மகிழ்ச்சி அடைவர்...' என, கூறத் தோன்றும் வகையில், முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பின் தமிழக தலைவர் பாத்திமா அலி பேட்டி: காங்கிரஸ் கட்சி, முஸ்லிம்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பார்த்தது. முஸ்லிம்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதில், அக்கட்சி அக்கறை காட்டவில்லை. மோடி ஆட்சியில், முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

'இப்படி செய்வர் என, எப்படி உங்களுக்குத் தெரியாமல் போயிற்று...' என, கேட்கத் தோன்றும் வகையில், ஜெ., அண்ணன் மகள் தீபா பேட்டி: கட்சி துவங்கி, நான் சிறப்பாக நடத்தி வந்தேன். அதை திசை திரும்பும் விதத்தில், எங்களை, அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொள்கிறோம் என்று கூறினர். எனினும், இதுவரை இணைக்கவில்லை. தேர்தல் நேரங்களில் மட்டுமே, இணைப்பு பற்றி பேசுகின்றனர். அதன் பிறகு, ஏதும் செய்வதில்லை.

'அங்குள்ள மக்களை குழப்ப, அரசியல்வாதிகள், போர்வையாளர்கள், பிரிவினைவாதிகள், பிற்போக்குவாதிகள் அதிகம் கிடையாது. அதனால் தான், அவர்கள் நன்றாக இருக்கிறார்களோ என்னவோ...' என, கூறத் தோன்றும் வகையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி: சமீபத்தில் நான் அமெரிக்கா சென்றிருந்த போது, பார்த்து வியந்தது, அந்நாட்டு மக்கள் மனநிலை தான். அவர்களுக்கு எது சரியென படுகிறதோ, அதை தைரியமாக செய்கின்றனர்; பிறரைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அதனால் தான் அந்த நாடு, தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

'நீங்கள் சொல்லும் புள்ளி விபரங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன...' என, கூறும் வகையில், உலக பாலியல் சுகாதார மையத்தின் டாக்டர் ஜெயராணி காமராஜ் பேச்சு: நம் நாட்டு பெண்களில், 10 - 70 வயதுள்ளவர்களில், 76 சதவீதம் பேர், ஏதாவது ஒரு வகையில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். அதுபோல, ஏதாவது ஒரு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக, 85 சதவீத ஆண்கள் ஒப்புக் கொண்டு உள்ளனர்.

'நீங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது போல உள்ளது. எப்படியோ, உங்கள் கோரிக்கை நிறைவேறி விட்டது...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிக்கை: மருந்து பொருட்களின் விற்பனை, மக்களின் ஆரோக்கியம் சார்ந்தது. அதை, ஆன்லைனில் விற்கக் கூடாது என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். மத்திய உள்துறை அமைச்சகம், மருந்து பொருட்களை, ஆன்லைனில் விற்க தடை விதித்துள்ளது. இது, மகிழ்ச்சி அளிக்கிறது.

'எப்ப, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திறப்பர் என, மதுரை மக்கள், நீண்ட காலமாக ஏங்கிக் கொண்டுள்ளனர்; சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி: மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை, ஜப்பான் நிதியுதவியுடன், 1,264 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ளது. முதற்கட்டமாக, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிதி பெற்று, திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்படும்.

'நீங்க, பா.ம.க.,விலிருந்து வெளியேறியவர் போல தெரியவில்லை; ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவிடம் பயின்றவர் போல உள்ளது, உங்கள் பேச்சு...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை: சென்னை தரமணியில், செயல்படும் உலக தமிழராய்ச்சி நிறுவனத்தில், பயிலும் மாணவர்களுக்கு ஹிந்தி பயிற்சி அளிக்கும் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இது, தமிழக அரசை வைத்தே, தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் செயல்; தமிழை மட்டுமல்ல, தமிழ் நிலத்தை, தமிழ் இனத்தை அழிக்கும் செயல்.

'நாடு ஒன்றுபட்டு இருப்பதற்கான முயற்சியில் அவர்கள் இறங்கியிருப்பர். அது ஏன், உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது...' என, கேட்கத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேச்சு: அஞ்சி நடுங்கி ஓரமாக இருந்தவர்கள், இன்றைக்கு பகிரங்கமாக பேசக் கூடிய நிலைக்கு வந்துள்ளனர். 'ஒரே நாடு, ஒரே மொழி' என, பேசுகின்றனர். ஒரே வரியை, கொண்டு வந்து விட்டனர். ஒரே தேர்தல் என்பதை, திரும்ப திரும்ப வலியுறுத்தியபடி உள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement