Advertisement

கேரள தலைவர்?

'அமேதி தொகுதியில் கிடைத்த படு தோல்வி, ராகுலை, ரொம்பவே மாற்றி விட்டது' என, கவலையுடன் கூறுகின்றனர், காங்கிரஸ் நிர்வாகிகள். கடந்த லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் போட்டியிட்ட ராகுல், மத்திய அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான ஸ்மிருதி இரானியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இந்த தொகுதி, ராகுல் குடும்பத்தினர், பாரம்பரியமாக போட்டியிடுவது. ராகுலின் தந்தை ராஜிவ், சித்தப்பா சஞ்சய், தாய் சோனியா ஆகியோர் போட்டியிட்டு வென்ற தொகுதி. ராகுலும், மூன்று முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. நல்ல வேளையாக, கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிட்டதால், அங்கு, ராகுலால் வெற்றி பெற முடிந்தது.

ஆனாலும், அமேதியில் ஏற்பட்ட தோல்வி, அவரை கவலையில் ஆழ்த்தி விட்டது. தோல்விக்குப் பின், அமேதிக்கு செல்வதை, பெரும்பாலும் தவிர்த்து வருகிறார். 'நன்றி இல்லாத மக்கள் இருக்கும் இடத்துக்கு போகாதீங்க தலைவரே' என, கட்சியினரும், அவரை துாண்டி விட்டதால், இப்போதெல்லாம், அமேதியை தவிர்த்து, கேரளாவுக்கு தான் அடிக்கடி செல்கிறார். மாதத்துக்கு ஒரு முறையாவது வயநாட்டுக்கு சென்று, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், பொதுமக்களுடனும் கலந்துரையாடி வருகிறார்.

பா.ஜ.,வினரோ, 'ராகுலை, கேரள மாநில காங்., தலைவராக நியமித்து விடுங்கள். அது தான், கட்சிக்கும், அவருக்கும் நல்லது' என, கிண்டலடிக்கின்றனர்.

யோசனை ஏன்?




'கட்சி தாவ தயாராக இருந்தவர், திடீரென அந்த முடிவை கைவிட்டது ஏன்' என, ஜோதிராதித்யா சிந்தியாவை பற்றி, மத்திய பிரதேச மாநில காங்., நிர்வாகிகள் முணுமுணுக்கின்றனர். ஜோதிராதித்யா சிந்தியா, குவாலியர் அரச குடும்பத்தை சேர்ந்தவர். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் குடும்பத்துக்கு, விசுவாசமாகவும், நெருக்கமாகவும் பணியாற்றி வந்தார். ராகுலின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகவும் இருந்தார்.

மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்., வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், முதல்வர் பதவியை கமல்நாத்துக்கு கொடுத்ததை, இவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், 'தலைவரே... மரியாதை இல்லாத இடத்தில் ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது; கடையை காலி பண்ணுங்க' என, உசுப்பேற்றி விட்டனர். அவரும், கட்சி தாவ நேரம் பார்த்து, சமூக வலைதளங்களில், 'காங்கிரஸ் பிரமுகர்' என்ற வார்த்தையை நீக்கி விட்டு, 'பொதுநலவாதி, கிரிக்கெட் ஆர்வலர்' என, பதிவிட்டார்.

இதையடுத்து, அவர், பா.ஜ.,வுக்கு தாவுவது உறுதி என, பேசப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது, 'மஹாராஷ்டிரா அரசியலில் பா.ஜ.,வுக்கு ஏற்பட்ட பின்னடைவு, ஜோதிராதித்ய சிந்தியாவை யோசிக்க வைத்து விட்டது. ஆனாலும், இப்போது இல்லாவிட்டாலும், எந்த நேரத்திலும், அவர், கட்சி தாவலாம்' என, சஸ்பென்சுடன் கூறுகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement