Advertisement

'வாசன் இப்படி, 'உல்டா'வா பேசுறாரே!'

Share

சத்குரு தியாகராஜரின், 173வது ஆண்டு ஆராதனை விழா, பந்தக்கால் முகூர்த்த விழாவுக்கு, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வந்தார், த.மா.கா., தலைவர் வாசன். அப்போது, நிருபர்களிடம் அவர், 'இந்தியாவில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவர்களுக்கு அதிகபட்சமான தண்டனை வழங்க வேண்டும். பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது தான் த.மா.கா.,வின் கோரிக்கை.

'தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான், தி.மு.க., வழக்கு போட்டுள்ளது' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'ஆக மொத்தம், தேர்தலை நடத்துறதுல யாருக்குமே இஷ்டம் இல்லே போலிருக்கு...' எனக் கூற, மற்ற நிருபர்கள் ஆமோதித்து தலையசைத்தனர்.

'தேர்தல்ன்னா கலெக்டர் மழுப்புறாரே!'
உள்ளாட்சி தேர்தல் குறித்த, அனைத்துக் கட்சி கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அரசியல் கட்சியினர், வார்டு எல்லை பிரிப்பு, ஆளும்கட்சிக்கு சாதகமாக உள்ளதாக குற்றம்சாட்டினர். இந்திய கம்யூ., நிர்வாகி வடிவேல், 'இட ஒதுக்கீடு விவரம் வெளியிடாமல், வேட்புமனு தாக்கல் துவங்க இருக்கிறது. இட ஒதுக்கீடு தெரியாமல், எப்படி நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்? எப்போது தான், இடஒதுக்கீட்டை அறிவிப்பீர்கள்?' என்றார்.

பதில் கூற முடியாமல், கலெக்டர் விஜய கார்த்திகேயன் உட்பட அனைவரும் திகைத்தனர். பின், கலெக்டர், 'தேர்தல் கமிஷன் விதிப்படி, இட ஒதுக்கீடு அறிவிக்கப்படும்' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'உள்ளாட்சி தேர்தலை பற்றி சரியான பதில் கிடைக்காதுன்னு தெரிஞ்சும், எதிர்க்கட்சியினர் கேட்கறாங்க... கலெக்டரும் ஏதாவது பதில் சொல்லி மழுப்புறாரு' எனக் கூற, மற்றவர்கள், 'அரசுக்கு ஏத்தா மாதிரி தானே நடந்து கொள்ள முடியும்' என்றபடி, நடையை கட்டினர்.

மக்களுக்கு உபயோகமா தி.மு.க., நடந்துக்கணும்!@

@
மதுரை, கே.கே.நகர் நுழைவு வாயிலில், உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை, அ.தி.மு.க.,வினர் பராமரித்து வருகின்றனர். சிலையை சுத்தப்படுத்துவதற்காக, அதைச் சுற்றி பெரிய ஷீட்டுகளை வைத்து மறைத்து வேலை செய்து வந்தனர். கூடவே, யாருக்கும் தெரியாமல், எம்.ஜி.ஆர்., சிலை அருகே, ஜெயலலிதா சிலையையும் நிறுவினர்; அதை திறக்கவும் ஏற்பாடுகளை செய்தனர்.
இது குறித்து தகவல் வெளியானதால், தி.மு.க.,வினர், 'அனுமதியின்றி உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக, சிலை நிறுவுகின்றனர்' என, கலெக்டர் வினயிடம் புகார் செய்தனர்; நிருபர்களிடமும் கூறினர். மூத்த நிருபர் ஒருவர், 'இந்த விஷயம்ன்னு வரையறை இல்லாம, எதுவா இருந்தாலும், நாங்க எதிர்ப்போம்ங்கிறா மாதிரி, தி.மு.க., செயல்படுது...
இதைத் தாண்டி, மக்களுக்குப் பயனுள்ள விஷயமா யோசிச்சா தான், கட்சிக்கு எதிர்காலம் நல்லா அமையும்... இதை, கட்சித் தலைமை புரிஞ்சுக்குமா...' எனக் கேட்டு, தான் கொண்டு வந்திருந்த, குறிப்பு நோட்டை, பேன்ட் பாக்கெட்டில் சொறுகியபடி நடையைக் கட்டினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement