Advertisement

ஊழலை ஒழிக்க ஒரு உபாயம்!

Share

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்கவே முடியாதா... சாமானிய மக்கள், அந்த லஞ்சத்தோடும், ஊழலோடும் தான், வாழ் நாள் முழுவதும் மல்லுக்கட்ட வேண்டுமா... இது தான், நாட்டிலுள்ள நாணயமானவர்கள் மனதில் நங்கூரமிட்டுள்ள கேள்வி.

வழக்குகள் மீது விரைந்து விசாரித்து, தீர்ப்பு வழங்காமல், வாய்தா வாங்குவதால் தான், பெரும்பாலான குற்றங்களுக்கு தண்டனை கிடைக்காமல் போய் விடுகிறது அல்லது தண்டனையில் இருந்து லஞ்ச, ஊழல் பேர்வழிகள் தப்பித்து விடுகின்றனர்.மரியாதை ராமன் என்ற பழங்கால நீதி நுால் கதை, இந்த இடத்திற்கு பொருத்தமாக இருக்கும் என, நினைக்கிறேன். ஐந்து மாடுகள் வைத்திருந்த ஒரு பெண், ஐம்பது மாடுகள் வைத்திருந்த ஒரு பெண்ணுக்கு, ஒரு படி நெய் கடன் கொடுத்தார். கடனை திருப்பிக் கேட்ட போது, 'நான் உன்னிடம் கடனே வாங்கவில்லை' என அந்த பெண் சாதித்துள்ளார்.

இந்த வழக்கு, மரியாதை ராமன் வசம் வந்தது. யார் ஏமாற்றுகின்றனர் என்பதை கண்டறிய முயன்றார். இதற்கு, ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொண்ட அவர், மறுநாள் அந்த பெண்கள் வரும் வழியில், சேற்றைக் கொட்டினார். கால்களில் சேற்றை மிதித்து வந்த பெண்களிடம், கால்களை கழுவ, ஆளுக்கொரு குவளை தண்ணீர் கொடுக்கச் செய்தார். ஐம்பது மாடுகள் வைத்திருந்த பெண், ஒரு குவளைத் தண்ணீரையும் கால்களில் கொட்டி, 'தண்ணீர் போதவில்லை; இன்னும் வேண்டும்' என்றாள். ஐந்து மாடுகள் வைத்திருந்த பெண், தன் கால்களில் அப்பி இருந்த சேற்றை, முதலில் வழித்து எடுத்துப் போட்டு, கொஞ்சமாக தண்ணீரை பயன்படுத்தி, காலை சுத்தப்படுத்தி உள்ளே வந்தாள்.

இதை கண்ட மரியாதை ராமன், சிக்கனமாக தண்ணீரை செலவு செய்த பெண் தான் உண்மையானவள் என்பதை முடிவு செய்து, அவளிடம் கடன் வாங்கி, ஏமாற்றியதற்காக, அரை படி நெய் சேர்த்து, ஒன்றரை படி நெய்யை, ஐம்பது மாடு வைத்திருந்த பெண் வழங்க உத்தரவிட்டார். நாட்டில் லஞ்சம், ஊழல் அதிகரிப்பதற்கும், அவற்றை கட்டுப்படுத்துவதற்கும், பழைய சட்டங்களும் ஒரு காரணம். இதற்கு, புராணத்திலிருந்து ஒரு உதாரணம் கூறினால், பொருத்தமாக இருக்கும்.

ப்ருஹத்ரதா என்றொரு மன்னன் இருந்தான். அவனுக்கு இரண்டு மனைவியர். எனினும் குழந்தை இல்லை. இதனால், கவலை அடைந்த மன்னன், கானகம் சென்று, அங்கு வாழ்ந்து கொண்டிருந்த, சந்திர கவுஷிகா என்ற முனிவருக்குப் பணிவிடை செய்யத் துவங்கினான். மன்னரின் மனக்குறையை உணர்ந்த முனிவர், அவனிடம் ஒரு பழத்தைக் கொடுத்து, 'இதை உன் மனைவியிடம் கொடுத்து உண்ணச் சொல்; உனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்' என வாழ்த்தி அனுப்பினார். மன்னனுக்கு இரண்டு மனைவியர் இருப்பது, முனிவருக்குத் தெரியாது; மன்னனும் அதை, முனிவரிடம் சொல்லவில்லை.

வீட்டுக்கு, 'சீல்'
நாடு திரும்பிய மன்னன், முனிவர் கொடுத்து அனுப்பிய கனியை, இரண்டாகப் பிளந்து, இரண்டு மனைவியருக்கும், ஆளுக்கொரு பாதியைக் கொடுத்து, உண்ணச் செய்தான். கர்ப்பம் தரித்த அந்த பெண்களுக்கு, தலா ஒரு முழு குழந்தை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில், பாதி பாதியாகப் பிறந்தது. அவற்றை பார்த்து மிரண்ட மன்னன், அந்த குழந்தைகளை காட்டில் போடச் சொல்லி உத்தரவிட்டான். காட்டில் மூலைக்கு ஒன்றாய் கிடந்த பாதி குழந்தை உருவங்களை, ஒரு அரக்கி பார்த்து, உண்ணலாம் என கருதி, இரண்டையும் ஒன்றாக சேர்த்தாள்.

என்ன ஆச்சர்யம்... ஒன்றாகச் சேர்த்ததும், இரண்டு பிண்டங்களுக்கும் உயிர் வந்து, அழ ஆரம்பித்தது. ஆச்சர்யமடைந்த அரக்கி, குழந்தையை உண்ணும் எண்ணத்தை கைவிட்டு, அதை மன்னனிடம் கொண்டு சேர்த்து, நடந்த விஷயத்தைக் கூறினாள். அரக்கியின் பசியில் இருந்து தப்பிய குழந்தைக்கு, ஜராசந்தன் எனப் பெயரிட்டு, மன்னன் வளர்த்து வந்தான். அவனும் வளர்ந்து நாட்டை ஆளத் துவங்கினான். இந்நிலையில், அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்த தர்மன், ராஜ சூயயாகம் நடத்த விரும்பினான். எல்லா குறு நில மன்னர்களையும் வென்று, சக்ரவர்த்தியாக இருந்தால் தான், ராஜ சூயயாகம் நடத்த இயலும்.

அதன்படி, மன்னன் ஜராசந்தனை வென்று வர, அர்ஜுனன், பீமனுடன் தர்மன் போருக்கு புறப்பட்டார். யுத்தத்தில் பீமன், ஜராசந்தனின் இரு கால்களையும் பிளந்து துாக்கி வீச, அவை இரண்டும் ஒன்று சேர்ந்து, மீண்டும் உயிர்தெழுந்து போரிட தயாராயின.பலமுறை பீமன், ஜராசந்தனை கிழித்துப் போடப் போட, அவை மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து, பீமனுடன் மோத தயாராயின. ஜராசந்தன் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று வரும் சூட்சுமத்தை அறிந்திருந்த கிருஷ்ணர், ஜராசந்தனின் உடலை, திருஷ்டி கழித்த எலுமிச்சம் பழத்தை வீசி எறிவது போல, இடது புறம் உள்ளதை வலது புறமாகவும், வலது புறம் உள்ளதை இடது புறமாகவும் மாற்றி, துாக்கி வீசும்படி, ஒரு புல்லை கிழித்து, பீமனுக்கு காட்டினார்.

பீமனும், கிருஷ்ணர் உணர்த்திய சூட்சுமத்தைப் புரிந்து, அதன் படி துாக்கிப் போட, ஜராசந்தனின் கதை முடிவுக்கு வந்தது. நம் நாட்டில் உலவும் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழித்துக் கட்ட, இது போல ஒரு மாற்று உபாயத்தைச் சிந்தித்தால் தான் முடியும். இப்போது நடை முறையில் உள்ள சட்டங்களாலும், நீதிமன்ற நடவடிக்கைகளாலும், லஞ்சம், ஊழலை உட்கார வைத்து, வெண் சாமரம் வீசத் தான் முடிகிறதே தவிர ஒழித்துக் கட்ட முடியவில்லை.

'இன்னார் லஞ்சம் வாங்கினார்; இவர் ஊழல் புரிந்தார்' என்பது, சாட்சிகள் மற்றும் ஆவணங்களோடு காவல் துறைக்கு கிடைத்ததும், அவைகளை கோர்ட்டில் ஒப்படைத்து, லஞ்சம் வாங்கிய குற்றவாளியின் வீட்டுக்குச் சென்று, அவரிடம் விபரத்தைக் கூறி, வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் வெளியேற்றி, கதவை பூட்டி, வீட்டுக்கு, 'சீல்' வைத்து விட வேண்டும்.மாற்றி யோசிப்போம்குற்றம் சுமத்தப் பட்டவர், அரசின் மீது வழக்குத் தொடுத்து, தான் எந்த குற்றமும் செய்யவில்லை; லஞ்சம் வாங்கவில்லை; ஊழலில் ஈடுபடவில்லை என நிரூபித்து, விடுதலை பெற வேண்டியது, அவரின் பொறுப்பு.

இந்த முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்தால், எப்படி இருக்கும் என, சற்று கற்பனை செய்து பாருங்கள். கற்பனையே, மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது.தான் வாங்கும் லஞ்சம் மற்றும் செய்யும் ஊழல், தன்னை மட்டுமின்றி தன் குடும்பத்தையும் பாதிக்கும்; நிற்க நிழலில்லாமல் நடுத்தெருவில் நிற்க நேரிடும் என தெரிய வந்தால், இந்த நாட்டில் எவனும், லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட மாட்டான். நடைமுறையை மாற்றி யோசிப்போம். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம். காலம் மாறும். லஞ்சமும் ஊழலும் அறவே ஒழியும்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement