Advertisement

மத்திய அரசு மனசு வைத்தால் எல்லாம் நடக்கும்!

Share

பொன்.கருணாநிதி, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நாட்டில் படித்து, வேலை தேடுவோரின் எண்ணிக்கை, இன்று பல கோடியை தாண்டி விட்டது. துப்புரவு பணியாளர் வேலைக்கு கூட, பொறியியல் பட்டதாரிகள் போட்டியிடும் சூழ்நிலை உருவாகி விட்டது.
இத்தருணத்தில், 'மத்திய அரசின் பல்வேறு துறைகளில், மார்ச், 1 நிலவரப்படி, நிரப்பப்படாத பதவிகளின் எண்ணிக்கை, 7 லட்சம் பணியிடங்கள்.


'இதில், குருப் சி பிரிவில் மட்டும் நிரப்பப்படாத பதவிகளின் எண்ணிக்கை, 5.74 லட்சம் பணியிடங்கள். 'இந்த, 7 லட்சம் பணியிடங்களின், நடப்பு ஆண்டில், 1,05 லட்சம் பணியிடங்கள் மட்டும் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என, ராஜ்ய சபாவில், மத்திய பணியாளர்கள் நல அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்; இவர் கருத்துகள் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் உள்ளது.


மத்திய அரசுப் பணியில், இத்தனை காலியிடங்கள் இருந்தால், அரசு நிர்வாகம் எப்படி செம்மையாக நடக்கும். அரசின் நலத்திட்டங்கள் எப்படி, விரைவாக மக்களை சென்றடையும். இத்தனை நாட்கள், இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பாததற்கு என்ன காரணம்? இந்த தாமதத்திற்கு காரணமானோர் மீது, ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது, குறித்தெல்லாம் அமைச்சர், ஏதும் கூறவில்லை. தற்போது, மத்திய அரசுப் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய, கணினி அடிப்படையிலான, 'ஆன் - லைன்' தேர்வுகள் தான் நடக்கின்றன.


மத்திய அரசு, மனசு வைத்தால், ஒரு சில மாதங்களில், காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்திடலாம். மக்கள் நலனையும், வேலையற்றோரின் வேதனையையும் புரிந்து, போர்க்கால அடிப்படையில், இப்பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு முன் வர வேண்டும்!


கல்வி துறைக்கு அரசு பள்ளிகளின் அவலம் தெரியுமா?
சுப்பு. லட்சுமணன், மாவட்ட கல்வி அலுவலர் (பணி நிறைவு), பீர்க்கன்காரணை, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தனியார் பள்ளிகள் துவக்க வேண்டுமானால், முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர், நேரில் பள்ளியை பார்வையிட்டு, சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, பார்வை அறிக்கை தயாரித்து, இயக்குனரகத்திற்கு அனுப்புவார்.


இயக்குனர் அவற்றை சரி பார்த்து, அங்கீகார சான்றிதழ் வழங்குவார்; இது, தனியாரால் நடத்தப்படும் பள்ளிகள் இயங்க, அடிப்படை தேவையாக பின்பற்றப்படுகிறது. ஆனால், இந்த சான்றிதழ்களை எல்லாம், ஒவ்வொரு துறையிடம் இருந்து பெற, தனியார் பள்ளி நிர்வாகங்கள் படும் பாடு சொல்லி மாளாது. இத்தருணத்தில், 'அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை' என, ஒருவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.


நீதிமன்றம், கல்வித்துறை செயலரிடம் விளக்கம் கேட்டுள்ளது. நகர பள்ளிகளை தவிர்த்து, கிராமங்களிலுள்ள அரசு பள்ளிகளில் பெரும்பான்மையானவற்றில் கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை என்பது, மக்களுக்கு, கல்வித்துறைக்கும் நன்கு தெரியும். அரசு பள்ளி, எப்படி வேண்டுமானாலும், அடிப்படை வசதிகள், விளையாட்டுத்திடல், ஆய்வகம், சுற்றுச்சுவர், இரவு காவலர், இருக்கை வசதிகள், கதவு இல்லா ஜன்னல்கள் போன்றவை இல்லாமல் இயங்கலாமா? இவையெல்லாம் இல்லாத பள்ளிகளில், மக்கள் எப்படி, தங்கள் குழந்தைகளை சேர்ப்பர்.

அதிலும், ஆசிரியர்களே இல்லாத பள்ளிகள் பல உள்ளன. எப்படி தரம் உயரும்? அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளை போன்ற கட்டமைப்பு, கழிப்பறை, குடிநீர், ஆய்வகம், சுற்றுச்சுவர், இரவு காவலர், எழுத்தர், தேவையான ஆசிரியர்கள் இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த, அரசுப் பள்ளிகளும், கருத்துரு அனுப்பி, அங்கீகாரம் பெற வேண்டும். அப்போது தான், கல்வித்துறைக்கே, அரசுப் பள்ளியின் அவலம் புரியும்!


எவ்வளவு காலத்துக்கு தான் ஏமாற்றுவரோ!
கீ.உத்ரன், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தை, ஆண்ட முதல்வர் காமராஜர், ஒன்பது அமைச்சர்களை வைத்து தான், பொற்கால ஆட்சியை தந்தார். பள்ளிகள், அணைகள் என எத்தனையோ, அடிப்படை வசதிகளை பெருக்கிய உத்தமர். தான் இறக்கும்போது, சொற்ப ரூபாய் தான், இருப்பு வைத்திருந்தார்.
கடந்த, 1967ல் ஆட்சிக்கு வந்த, தி.மு.க.,வினர், பொது பணத்தை, எப்படியெல்லாம் ஆட்டை போடலாம் என்ற இலக்கண, இலக்கியத்தையெல்லாம் கரைத்துக் குடித்தோர். தி.மு.க., - அ.தி.மு.க., என்று பெயர்கள் தான், இரண்டே தவிர, மற்றபடி அரசு பணத்தை அள்ளிச் செல்வதில், ஒருவருக்கொருவர் சளைத்தோர் அல்ல. திராவிட ஆட்சிகளில், 'மாவட்டத்திற்கு ஓர் அமைச்சர்' என்றனர்; அது, போதாது என, 'ஜாதிக்கு ஓர் அமைச்சர்' என்றனர்; அதுவும் போதாது எனக்கூறி, புதிது புதிதாக மாவட்டங்களை உருவாக்கி கொண்டனர்.அதுவும், திருப்தி தராததால், வாரியங்களை அமைத்து கொண்டனர். திருப்தி எம்.எல்.ஏ.,க்களை திருப்திப்படுத்த, இன்னும் பல குழுக்களையும் அமைத்தனர். அவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு குழு தான், சட்டசபை மதிப்பீட்டுக் குழு. திருச்சி முக்கொம்பில் நடந்து வரும் அணைகட்டும் பணியை, தமிழக சட்டசபை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு
செய்துள்ளனர். அப்போது, மதிப்பீட்டுக் குழுத் தலைவர் தோப்பு வெங்கடாஜலம், 'கரிகாலன் காலத்தில் கட்டப்பட்ட அணை என்பதால், நீண்ட காலம் ஆகி உறுதித் தன்மை இழந்து விட்டது' எனக் கூறினார். அதை கேட்ட, திருச்சி கலெக்டர், '150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது' என, கிசுகிசுக்க, தன் தவறை திருத்திக் கொண்டார், தோப்பு வெங்கடாசலம்.

ஆங்கிலேயர் கட்டிய அணையை, கரிகாலன் காலத்து அணையாக்கிய, இவரைப் போன்றோர், என்ன ஆய்வு செய்திருப்பர் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவர், அமைச்சர் பதவி கேட்டு கொண்டிருப்பதாக தகவல். அமைச்சருக்குரிய தகுதி தனக்கு இருப்பதை, திருச்சியில் நிரூபித்து விட்டாரோ... இதற்கு பெயர் ஆய்வாம். நம் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணாகிறது. தமிழக கடன், லட்சம், கோடிகளில் பயணிப்பதன் காரணம் புரிகிறதா... இன்னும் எவ்வளவு


காலத்துக்கு தான், இது போன்று, நம்மை ஏமாற்றுவரோ, ஆட்சியாளர்கள்... வாக்காள பெருமக்களே... உங்கள் நலனில் அக்கறையுள்ளோரை தேர்ந்தெடுங்கள்; அப்போது தான் நாடு உருப்படும்!
lll

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • venkat Iyer - nagai,இந்தியா

    திரு.லட்சுமணன் அவர்கள் குறிப்பிட்டது போல சமீபத்தில் தொலைகாட்சியில் ஒரு அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் டாய்லட் கதவு இல்லாமல் மாதவிலக்கு காலத்தில் பெண் குழந்தைகள் விடுப்பு எடுக்கும் சூழ்நிலை இருந்ததை நானும் அதிர்ச்சி அடைந்தேன். வகுப்பு நடத்தும் பெண் ஆசிரியர்கள் கூட பெண் குழந்தைகளின் மாதவிலக்கு பிரச்சனையினால் தனக்கு உடல் உபாதை பிரச்சனைகளை அடக்கி வகுப்பில் இருந்ததாக கேள்விப்பட்டேன்.உண்மையில் மாவட்ட ஆட்சியர்கள் கோடை விடுமுறை முடிவடைந்த பின்னர் அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை ஏன் ஆராயாமல் உள்ளார்கள்.ஒரு மாவட்டத்தில் அதிக பட்சமாக இருபத்தைந்து மகளிர் மேல்நிலைப்பள்ளி இருக்குமா?தண்ணீர் வசதி அரசினால் ஏற்படுத்தி கொடுக்க முடியாவிட்டாலும் அந்த ஊரில் வசதி படைத்த பலரது கூட்டு முயற்சியை நாடி கழிவறைகளை சிறப்பாக கட்டி இருக்க ஆலோசனைகளை பள்ளி தலைமை ஆசிரியருக்கு வேண்டுகோள் கொடுத்தால் பிரச்சனை தீர்ந்து இருக்குமே.

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    Mr. உத்திரன்.. ஜெயிக்கிறவன் எல்லாம் நோட்டு கொடுத்து ஒட்டு வாங்கிற பயல்கள் தான். யோக்கியமாய் இனி யாரும் தேர்தலில் நின்னு ஜெயிக்கமுடியாது. யோக்கியன் போடும், போடப்போகும் ஓட்டுக்கும் இனி மதிப்பில்லை. கியூவில் நின்று வாக்களிப்பது வேஸ்ட் of டைம்...

  • Darmavan - Chennai,இந்தியா

    அரசு வேலை இதில் வேலைக்கு மிகுதியாக ஆட்கள் ஓவர் எம்பிளாய்மென்ட் அரசுக்கு செலவு அதிகம்.எந்த அரசு ஊழியரும் வேலை செய்வதில்லை எந்த அரசி அலுவலாம் போனாலும் இதே நிலை .என்னவே எனவே காலிப்பணியாடை தேவைக்கு அதிகமாயிருந்தால் நிரப்பாமல் இருப்பது என்ன தவறு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement