Advertisement

'டவுட்' தனபாலு

Share

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: எங்கள் கட்சியிலிருந்து தப்பி, அ.தி.மு.க.,வுக்கு ஓடியவர்களால், அங்கே நிற்கக் கூட முடியவில்லை; சரிந்து கிடக்கின்றனர். பாவம். இப்போதுள்ள சூழ்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் கூட, அவர்களால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அழுக்குகள் நீக்கப்பட்டு, எங்கள் கட்சி இப்போது துாய்மையாக உள்ளது.

'டவுட்' தனபாலு: துாய்மையாக இருக்கிறது என, சொல்வதற்குப் பதில், 'சுத்தமாக' இருக்கிறது என சொல்வது தான் சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன். 'கடையிலிருந்த பொருட்களை எல்லாம், 'சுத்தமாக' துடைத்து எடுத்து சென்று விட்டனர்' என்பரே; அது போன்று, உங்கள் கட்சி, 'சுத்தமாக' ஆகி விட்டதோ; 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!


பத்திரிகை செய்தி: ஜெ., நினைவு நாளை முன்னிட்டு, அவரின் நினைவிடத்தில், அ.தி.மு.க., வினர், 'கட்சி நமக்கு என்ன செய்தது என்பதை விட, கட்சிக்கு நாம் என்ன செய்தோம் என்ற
கேள்வியை,நம் இதயத்தில் எழுப்பி,ஒற்றுமையுடனும், உறுதியுடனும்கட்சிப் பணிகளை ஆற்றுவோம்' என, உறுதிமொழி எடுத்தனர்.

'டவுட்' தனபாலு: இதை விட, 'எந்த சூழ்நிலையிலும்... ஒருவேளை, சிறையிலிருக்கும் சசிகலா வெளியே வந்தாலும்... அவர் பின்னால் ஓட மாட்டோம்' என, ஜெ., நினைவிடத்தில், கட்சியினரிடம் சத்திய பிரமாணம் வாங்குவது தான் சரியாக இருந்திருக்கும். எனினும், 'ஜெ., சாவின் மர்மம் இன்னும் விலகாமல் இருக்கும் நிலையில், இதுபோன்ற உறுதிமொழி, கருப்புச் சட்டை பேரணி எல்லாம், சும்மா' என, உண்மை தொண்டர்கள் வேதனைப்படுகின்றனரே; அந்த குரல் உங்களுக்கு கேட்கவில்லையோ என்பதே என், 'டவுட்' ஆக இருக்கிறது.


தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: அ.தி.மு.க., அரசின் மக்கள் விரோத செயல்களை, நான் சுட்டிக் காட்டினால், 'எதற்கெடுத்தாலும் ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார்' என்கிறார், முதல்வர் இ.பி.எஸ்., அவர் என்ன சொன்னாலும், அ.தி.மு.க., அரசின் முறைகேடுகளை, நான் சுட்டிக் காட்டிக் கொண்டே தான் இருப்பேன்.


'டவுட்' தனபாலு: தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் என்ன சொன்னாலும், செய்தாலும், செய்யத் தவறினாலும், நீங்கள் மட்டுமல்ல, காங்., அழகிரி, ம.தி.மு.க., வைகோ, மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ., முத்தரசன் மற்றும் சில துக்கடா கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களும் சேர்ந்தல்லவா சாடுகின்றனர்... யார் சொல்வதைத் தான், இ.பி.எஸ்., கேட்பார்; அவரின் நிலை மீது, உங்களுக்கு எல்லாம் பரிதாபம் ஏற்படவில்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement