Advertisement

மாணவர்கள் உணவு பணத்தில் கை வைத்த அதிகாரி!

Share

பெஞ்சில் அமர்ந்ததுமே, ''எதிர்க்கட்சி, எம்.பி., அறிவிச்சதும் தான், மாவட்ட நிர்வாகம் முழிச்சிருக்கு வே...'' என, விஷயத்திற்கு வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த மாவட்டத்துலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.


''சமீபத்துல, தமிழகம் முழுக்கவே பலத்த மழை பெய்ஞ்சுதுல்லா... துாத்துக்குடி மாவட்டமும், மழை, வெள்ளத்தால கடுமையா பாதிக்கப்பட்டுச்சு...

''தொகுதி, தி.மு.க., - எம்.பி.,யான கனிமொழி, தன் அலுவலகத்தை, பொதுமக்கள் தொடர்பு கொள்ள, கட்டணமில்லா போன் நம்பர்களை அறிவிச்சாங்க வே...

''போன்ல மக்கள் தெரிவிச்ச குறைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிச்சு, நடவடிக்கை எடுக்க சொன்னாங்க... மந்தமா இருந்த மாவட்ட நிர்வாகமோ, ரெண்டு நாள் கழிச்சு தான், கட்டணமில்லா போன் நம்பர்களை அறிவிச்சிருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.

''குடும்பத்துல ஏற்பட்ட தகராறை மறைக்க, கட்டுக் கதையை கிளப்பி விட்டுட்டாங்க பா...'' என, அடுத்த விஷயத்தை ஆரம்பித்தார், அன்வர்பாய்.

''எங்க வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் அரசியல் ஆலோசகரா இருந்தவர் சுனில்... சமூக வலைதளங்கள்ல, ஸ்டாலினை பிரபலப்படுத்துற வேலைகளை செஞ்சிட்டு இருந்தாரு பா...


''சமீபத்துல, இவர் விலகிட்டதாகவும், பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் வரப் போறார்னும் தகவல்கள் வெளியானது... ஆனா, உள்ளாட்சி தேர்தல்ல, 'சீட்' வாங்கி தர்றதா, சுனில் தரப்பு வசூல்ல ஈடுபட்டதா, உதயநிதிக்கு புகார் வந்திருக்கு பா...

''சுனிலைக் கூப்பிட்டு, உதயநிதி விளக்கம் கேட்க, அவரோ, ஸ்டாலின் குடும்பத்துல இருக்கிற இன்னொரு வாரிசை கைகாட்டியிருக்கார்... பிரச்னை முத்தி, கடைசியில, சுனிலுக்கு, 'கல்தா' குடுத்துட்டாங்க... இதை வெளியில சொல்லாம, 'அவரா விலகிட்டார், புது ஆள் வரப்
போகுது'ன்னு கதையை கிளப்பிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''சின்ன பசங்க சாப்பாட்டுல கை வச்சிட்டாங்க...'' என, கடைசி தகவலுக்கு சென்றார், அந்தோணிசாமி.

''அடப்பாவமே... எங்க ஓய் இந்த அநியாயம்...'' என, பதறினார் குப்பண்ணா.

''ஆதிதிராவிடர் நலத்துறை நடத்துற மாணவ - மாணவியர் விடுதிகளுக்கு, அஞ்சு மாசமா, உணவு கட்டணம் வழங்காம இருந்தாங்க... இந்தத் தொகையை, சமீபத்துல, மொத்தமா அரசாங்கம் குடுத்திருக்குங்க...

''காஞ்சிபுரம் மாவட்டத்துல, ஒரு பெண் அதிகாரி, விடுதிகளுக்கு வந்த தொகையில, 1.50 லட்சம் ரூபாயை பிடிச்சிட்டு தான் குடுத்திருக்காங்க...

''இது சம்பந்தமா, விடுதி வார்டன்கள் கேட்டப்ப, 'அத்திவரதரை தரிசிக்க, ஆதிதிராவிடர் நலத்துறை உயர் அதிகாரிகள் வந்தாங்கல்ல... அவங்களுக்கு செலவழிச்ச தொகைக்காக எடுத்திருக்கேன்'னு கூலா சொல்லிட்டாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''என் தங்கச்சி தனலட்சுமி வீட்டு வரைக்கும் போயிட்டு வந்துடுதேன்...'' என, அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    உதயநிதி கூப்பிட்டு கேட்டப்போ சுனில் கைகாட்ட இன்னொரு வாரிசு யாரு. சொல்லவே இல்லையே...மக்கள் தெரிந்து கொள்ளட்டும்...

  • மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி

    தனலட்சுமியை துறை வாரியாக விசாரிக்கவேண்டும்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    லஞ்சம், கொள்ளை என்று வந்தபின், பச்சைக் குழந்தையின் பாலைக்கூடத் திருடுவார்கள் இது என்ன புதிதா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement