Advertisement

ஸ்டாலின் அறிவாற்றலை யாருடன் ஒப்பிடுவது?

Share

எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதிகள் என்றாலே, அவர்கள் பொய் சொல்லுவதற்கென்றே பிறவி எடுத்து, வளர்ந்து வந்திருப்பர் என்பதை, நன்றாகவே அறிவோம். ஆனால், புருடா விட மாட்டார்கள் என, இதுவரை நம்பிக் கொண்டிருந்தோம். அந்த நம்பிக்கையில், புதுக்கோட்டையிலிருந்து, ஒரு பிடி மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.

எனக்கு, 70 வயதாகிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கென்று, ஒரு ரேஷன் கார்டை வைத்து இருக்கிறேன். 20 ஆண்டுகளுக்கு முன், அந்த ரேஷன் கார்டை, வெள்ளை கார்டாக, அதாவது, கவுரவ கார்டாக மாற்றினேன். அதன் பின், வீடுகள் மாறி செல்லும் போது, அந்த ரேஷன் கார்டில், விலாச மாற்றம் செய்வதற்காக, ரேஷன் கடைக்கும், மண்டல் அலுவலகத்திற்கும் சென்றிருக்கிறேனே தவிர, பொங்கல் பரிசு பை, இலவச, கலர் 'டிவி' போன்ற, எதையும், அந்த கார்டு வாயிலாக, வாங்கியதே இல்லை.

பொருட்களை வாங்க, ரேஷன் கடைக்கு செல்லவில்லை என்றாலும், என் குடும்ப உறுப்பினர்கள் பெயரும், விலாசமும், அந்தந்த ரேஷன் கடைகளின் பதிவேட்டில் இருக்கிறது. இத்தருணத்தில், 'அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், தி.மு.க., ஆட்சி காலத்தில், இலவச, 'டிவி' வழங்கினோம்' என, புதுக்கோட்டையிலிருந்து, 'புருடா' விட்டிருக்கிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.

எந்தெந்த கார்டுதாரர்கள் அந்த கலர், 'டிவி' வாங்கவில்லை; ஏன் வாங்கவில்லை என, ஏதாவது கணக்கெடுக்க சொல்லி இருப்பாரா, அப்படி வாங்காதவர்களின் வீடு தேடி, அந்த கலர், 'டிவி'யை வாங்கி செல்லும்படி, சிவில் சப்ளைஸ் அலுவலர்களை அனுப்பி நடவடிக்கை எடுத்து இருப்பாரா? அப்படி எதுவும் செய்யவில்லையே!

நிலைமை இவ்வாறு இருக்க, வாய் கூசாமல், தி.மு.க., ஆட்சியில், அனைத்து கார்டுதாரர்களுக்கும், இலவச, 'டிவி' வழங்கப்பட்டது என, இப்படி அவரால் கூற முடிகிறது. 'அனைத்து கார்டுக்கும், பொங்கல் பரிசு வழங்க வேண்டும்' என, மற்றொரு கோரிக்கையும் வைத்துள்ளார், ஸ்டாலின்; இது தான் வேடிக்கையாக உள்ளது. இதை விட, 'மானமுள்ள தி.மு.க.,காரன் யாரும், தமிழக அரசு தரும் பொங்கல் பரிசு, 1,000 ரூபாயை வாங்கக் கூடாது' என, தன் கட்சிக்காரர்களுக்கு கட்டளையும் இட்டு இருக்கிறார், ஸ்டாலின். இவரது, அறிவாற்றலை, யாருடன் ஒப்பிடுவது?


***

உலகளவில் கல்வி தர நிர்ணயம் எப்படி உயரும்?குரு.சண்முகம், முன்னாள் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், முதுநிலைப் பேராசிரியர், சென்னை பல்கலை, சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் இயங்கும், 20க்கும் மேற்பட்ட பல்கலை.,களில் உருவான ஆயிரக்கணக்கான பேராசிரியர்கள் காலி பணியிடங்கள், பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.

இதை உணர்ந்த, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, ஜூன் துவக்கத்தில், ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலை.,களிலும், காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள், ஆறு மாத கால கெடுவுக்குள் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும் என்ற, ஒரு கால அட்டவணையையும் வெளியிட்டது. 'பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படா விட்டால், அந்த பல்கலை.,களுக்கு நிதியுதவி நிறுத்தப்படும்' என்ற ஓர் எச்சரிக்கையை, பல்கலை., யு.ஜி.சி., என்ற நிதி நல்கை ஆணையம் வெளியிட்டது; இந்த காலக்கெடு, டிசம்பரில் முடிவடைகிறது.

ஆனால், தமிழகத்தின், எந்த ஒரு பல்கலை.,யும், இத்திட்டத்தை, இதுவரை முன்னெடுத்து செல்லாது ஏன் என, தெரியவில்லை. தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும், காலியாக உள்ள, 2,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., எனப்படும், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்கலை.,களில் தரமான பேராசிரியர்களை நியமிக்காவிட்டால், ஆராய்ச்சிப் பணிகள் வெகுவாக பாதிக்கப்படும். உயர் ஆராய்ச்சிகள் மேம்படாவிட்டால், பல்கலை.,கள் உலக அளவிலோ அல்லது தேசிய அளவிலோ, தர நிர்ணயம் எப்படி பெற முடியும்?

அனைத்து பல்கலை.,களின் வேந்தர் என்ற முறையில், காலியாக உள்ள அனைத்து, ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் கல்வியில் ஊழலை ஒழித்து வரும் கவர்னர், உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என, நம்புவோம்!


***

பாவ மன்னிப்பு பட வசனம் பொருந்தும்!எஸ்.லாவண்யா மஞ்சுநாத், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'தற்போது, யாரும் ஜாதி பெயரை பெயருக்கு பின்னால், போட்டு கொள்வது இல்லை; இது, ஈ.வெ.ரா.,வுக்கு கிடைத்த வெற்றி' என, தி.க., தலைவர் வீரமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்; இதில், என்ன பெரிய வெற்றி இருக்கு!

ஜாதி பெயர் கொண்டோர், எல்லாரும் ஜாதி வெறி பிடித்தவர்களா... அப்படி பெயர் போட்டு கொள்ளாதோர், எல்லாரும் ஜாதி வெறி இல்லாதவர்களா? இன்று, இங்கு எவ்வளவு ஜாதி கட்சிகள் உள்ளன. அதன் தலைவர்கள், ஜாதி பெயரை போட்டு கொள்வது இல்லை. ஆனால், அவர்கள் எப்படி, மற்ற ஜாதியினர் மீது, துவேஷத்தை, வன்மத்தையும் ஏவி விடுகின்றனர். மற்ற ஜாதியினர் கலாசாரத்தை பற்றி, கிண்டல் செய்கின்றனர். எப்படி, சாதுரியமாக, ஜாதி கலவரத்தை ஏற்படுத்துகின்றனர். இவர்களை விட, ஜாதி பெயர் போட்டுக் கொண்டோர், எத்தனையோ பேர், நம்மிடையே உத்தமர்களாக வாழ்ந்து இருக்கின்றனர்.

மதுரை வைத்தியநாத அய்யர், உ.வே.சாமிநாத அய்யர், வி.ஆர்.கிருஷ்ண அய்யர், சோம்நாத் சட்டர்ஜி, முத்தையா செட்டியார், மு.வ.ராகவ அய்யங்கார், முத்துராமலிங்க தேவர்; இவர்களை போல, பல உத்தம தலைவர்கள் வாழ்ந்தனர். இவர்கள் யாரும், ஜாதி வெறி பிடித்து அலையவில்லை. இப்போது, சில தலைவர்கள், தங்கள் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை போட்டுக் கொள்வதும் இல்லை. ஆனால், நாட்டில் சிலர் ஜாதி பிரச்னையை கிளப்புகின்றனர். இவர்கள் உள்புறம் ஒன்றும், வெளிபுறம் ஒன்றும் பேசுவர். மனமாற, எல்லா மனிதர்களையும் நேசிக்க வேண்டும்.

நடிகர் சிவாஜி நடித்த, பாவ மன்னிப்பு படத்தில், 'யாரும் மதம் மாற வேண்டாம்; மனம் மாறினாலே போதும்' என்ற வசனம் வரும். இது, எக்கால வாழ்க்கைக்கும் சிறந்த உதாரணம். அதை, அனைவரும் பின்பற்ற வேண்டும்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • venkat Iyer - nagai,இந்தியா

    எஸ்.ராமு அவர்களே என்ன கூறுகிறீர்கள்.ஒரு திட்டம் இருக்கும்.யாருக்கு தேவையோ அவர்களுக்கு அதனை பெற்று கொள்ளலாம்.உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் ரேஷன் கடையில் வரிசையில் நிற்க வேண்டும்.ஏழை எளியோர்கள் நாட்டில் நடக்கும் செய்திகளை அறிய உருவான நல்ல திட்டம்.நன்கு சம்பாதிப்பவர்கள் அதனை பெற முயற்சி எடுக்க கூடாது.உங்கள் வீட்டில் டிவி இருந்தும் நீங்கள் வாங்க நினைப்பதே தவறாகும்.அப்படி அலைபவர்கள் பிச்சைக்காரனை விட கேவலமாக கருதுவேன்.அதற்காக நீங்கள் காரில் போக வேண்டும் என்று சொல்ல மாட்டேன்.ஸ்கூட்டி கூட அப்பா இல்லாத பெண் மற்றும் அம்மா கிராம பகுதியில் உள்ளே இருப்பவர்கள் மட்டும்தான் தகுதியானவர்.எல்லோரும் எல்லாவற்றிர்க்கும் அலைவது சரியல்ல.

  • Siva - Aruvankadu,இந்தியா

    எனது குடும்ப அட்டைக்கு இலவச தொலைக்காட்சி வாங்கவில்லை....

  • s.rajagopalan - chennai ,இந்தியா

    வீரமணி 'பூட்ட' கேஸ் நானும் இருக்கிறேன் என்று காண்பிக்க இப்படி ஏதாவது பிட்டு போட்டு வைக்கிறார். அவ்வளவுதான். நமக்கு பதிவு போடஒரு வாய்ப்பு கொடுக்கிறாரே ? அதற்காக நன்றி சொல்வோமே ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement