Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

Share

'எல்லாவற்றிற்கும் போலீசாரை குற்றம் சொல்லலாமா... தனி மனித ஒழுக்கத்தை வலியுறுத்துங்க...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள், எம்.எல்.ஏ., பாலபாரதி பேச்சு:தமிழகத்தில், 3 வயது சிறுமிக்குக் கூட பாதுகாப்பு இல்லை. போலீசாருக்கு தெரிந்தே, பள்ளிகள், கல்லுாரிகள் அருகே கஞ்சா விற்கப்படுகிறது. பல வகையான போதைகளுக்கு இளைய சமுதாயம் அடிமைப்பட்டுள்ளது. இது தொடர்பாக, முதல்வரிடம் பேச, 10 நாட்கள் நடைபயணமாக வந்தோம். தடுத்து, கைது செய்து விட்டனர்.


'மாநில அரசு அதிகாரிகளுக்கு இந்த விபரம் தெரிவதற்குள், உங்களுக்கு தெரிந்து விடுகிறதே; அது எப்படி...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: 'மாநில அரசு பணியாளர்களை தேர்வு செய்ய, தேசிய அளவில் பொதுத் தேர்வு அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. அதில், மாநில அரசுகள் இணைந்து கொள்ளலாம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது, சமூகநீதிக்கு எதிரானது மட்டுமல்ல; மாநிலங்களின் உரிமையை பறிப்பதாகவும் ஆகும்.

'ஆழமாக சிந்தித்து முடிவெடுத்தவர் தான், இரண்டாண்டுகளாக, தமிழக மக்களை ஏமாற்றி வருகிறாரா...' என, கேட்கத் துாண்டும் வகையில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பேட்டி: நடிகர் ரஜினிகாந்த், ஆழமாக சிந்தித்து முடிவெடுக்கக் கூடியவர். எல்லாவற்றையும் யோசித்து தான் கருத்து தெரிவிப்பார். தேவைப்பட்டால், அவர் மக்களை சந்தித்து கருத்து கூறுவார்.

'தமிழக அரசை முடக்குவதே, அவர்கள் எண்ணமாக இருக்குமோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி: இதுவரை தமிழக அரசின் வளர்ச்சிக்கு மட்டுமே முட்டுக்கட்டை போட்டு வந்த, தி.மு.க., இப்போது தமிழ் மொழி மற்றும் தமிழ் ஆராய்ச்சியிலும் தலையிட்டு, முட்டுக்கட்டை போடுகிறது. இவர்களின் எதிர்ப்புக்கு பயந்து, ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஹிந்தி மொழி பயிற்சி அளிப்பது நிறுத்தப்படாது.

'எத்தனை ஆண்டுகள் தான் ஆர்ப்பாட்டம் நடத்துவீர்கள்; இதெல்லாம் சரிப்படாது; அதிரடி நடவடிக்கையில் இறங்குங்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக மகளிர் காங்., தலைவர் ஜான்சிராணி பேச்சு: பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த, போலீஸ் மற்றும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து கட்சி மகளிரையும் இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement