Advertisement

காத்திருப்போம்... நல்லவை அமலாகட்டும்!

Share

தமிழக அரசு பள்ளிகளில் பாடத்திட்டம் உட்பட பல்வேறு விஷயங்களில் அதிக மாற்றங்களை, தமிழக கல்வித்துறை அமைச்சகம் செய்து வருகிறது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் இருந்தாலும், வசதிகள் அதிகமின்றி இருந்தாலும், இடப்பற்றாக்குறை இருந்தாலும், மாணவ - மாணவியர் அதில் அதிக ஆர்வமாக சேரும் காலம் மாறுவதற்கான சூழ்நிலையை இது ஏற்படுத்தலாம்.ஆனாலும் இன்னமும் அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பைத் தாண்டி, பலரும் சேரும் காலம் இக்கல்விஆண்டில் வருகிறதா என்பதை நாம் காணும் போது, அரசு இத்துறையில் செய்திருக்கும் சீர்திருத்தங்கள், மக்கள் மனதை எட்டியிருக்கிறதா என்பது தெரியும்.நாடு முழுவதும் ஒரே கல்வித் திட்டம் என்பது சாத்தியமற்றது. இதை மத்திய அரசு தெளிவாக்கியது

நல்லதொரு தகவல்.
ஆனால் ஆங்கில மொழியில் கல்வி என்பது, வரும் காலங்களில், தமிழகத்தில் நிச்சயம் அதிக முக்கியத்துவம் பெறும். தமிழ் அடிப்படையில் கல்வி என்பது, சிறுகச் சிறுக தேயும். அதே சமயம், குறைந்த பட்சம் தமிழ் எழுத்துக்களை அறிவதற்கும், சில பத்திகளை, 10ம் வகுப்பு மாணவ - மாணவியர் சிரமமின்றி படிக்கவும் முடியுமா என்பதை, இன்று கூற முடியாது. ஏனெனில், கூகுள் இணையதளம் வேறு, கல்வி தொடர்பான சில விஷயங்களில் சேர்ந்து விட்டது. 10ம் வகுப்பு மாணவ - மாணவியர், தான் விரும்பும் விஷயத்தை மொபைல் போன்களில் பார்த்து அலுத்த பின், பாடத்திட்டங்களை ஆராயும் சுபாவம் வந்தாகி இருக்கிறது.இந்த நிதர்சனங்களுக்கு நடுவே, பள்ளிக்கல்வித் திட்டத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு வரை, பல பாடத் திட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன.

இதில் அறிவியல், கணக்கியல், சமூகவியல் ஆகியவை, நிச்சயம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, மற்ற மாநிலக் கல்வித் திட்டங்களுடன் போட்டியிட உதவும். பாடத்திட்டங்களை கையாளும் ஆசிரியர்களுக்கு பயிற்சி, திறனறி கல்விக்கான முன்னேற்பாடுகள் ஆகியவை, இனி வகுப்பறைகளில் இடம் பெறும் போது, அரசு பள்ளிகள் தங்கள் தேர்ச்சி விகித அளவை, ஓரளவு அதிகரிக்க நேரிடும். தவிரவும் இப்போது, ஐந்து மற்றும் எட்டாவது வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வில் வடிகட்டும் முறை வராது என்பது, குறைந்த பட்சம் எழுத்தறிவு பெற்ற தமிழக மக்கள் எண்ணிக்கை, விரைவில், 100 சதவீதமாக மாற உதவும்.இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் பள்ளி மாணவ -மாணவியருக்கு, 14 வகையான கல்வி சார்ந்த பொருட்கள் இலவசமாக தரப்படுகின்றன. இதில் மேல்வகுப்பில் பயிலுவோருக்கு மடிக்கணினி தருவதும் இருக்கிறது.

இதில், இலவசமாக சில பாடப்புத்தகங்கள், பை, போக்குவரத்து வசதிக்கு மிதிவண்டி போன்றவை தவிர, மற்ற சிலவற்றை தருவது, அனைவருக்கும் தேவையா என்பதை கல்வித் துறை முடிவு கட்ட வேண்டிய காலம் வந்திருக்கிறது.ஏனெனில் மாணவ - மாணவியர் ஊட்டச்சத்து பாதிப்பின்றி இருக்கின்றனரா அல்லது நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் வகையில் உணவு கிடைக்கிறதா. அல்லது 'ஜங்க் புட்' அல்லது அபின் கலந்த சாக்லெட் சாப்பிடாமல் பள்ளி வளாகம் வரை அவர்களைக் காக்க முடியுமா என்பது, இன்னமும் முழுவதும் விடை அறிய முடியாத ஒன்று.அதைத் தவிர, பள்ளிகளில் காலை நேரத்தில் சிறிய அளவிலான, 'டிரில்' எனப்படும் உடற்பயிற்சி அமலாவது, மிக நல்ல முடிவாகும்.

ஆனால் காலை வெயிலில் மாணவ - மாணவியர் சிலர் மயங்கி விழலாம் என்பதால், மொத்தத்தில் இதை தள்ளுபடி செய்ய முடியாது. ஆனால் வெறும், 15 நிமிட பயிற்சியில் காலை, கைகளை வீசி நிற்கும் பயிற்சி போன்ற சில எளிய பயிற்சிகள், சமூக பிரக்ஞை ஏற்படுத்த உதவும். அதற்காக பள்ளிகளில் வசதியான இடம், அதைக் கையாள வசதியாக, 'விளையாட்டு ஆசிரியர்' என்பவர் பயிற்சியுடன் கூடியவராக இருக்கிறாரா என்பதற்கான கேள்விகள் ஏராளம். அத்துடன், 'யோகா' என்ற மூச்சுப் பயிற்சி சரியா என்பதை, கல்வித் துறை அமைச்சர் மீண்டும் பரீசிலித்தால் நலம். ஏனெனில், 'ஈசினோபலிஸ்' அல்லது சளித் தொல்லை, ஊட்டச்சத்து குறைவால் பலஹீனமான சிறுவ - சிறுமியர், காய்ச்சல் உட்படசில பாதிப்புகளில் இருந்து மீண்டும் பள்ளிக்கு வரும் சிறுவ - சிறுமியர் ஆகியோருக்கு, மூச்சுப் பயிற்சி என்னும், 'யோகா' கலை எதற்கு? குறிப்பிட்ட வயதைத் தாண்டியபின் இதை, 'ஆப்ஷன்' என்னும் விருப்பமாக்கி, அதற்கு பெற்றோர் ஒப்புதல் இன்றி, அமல் செய்யலாம்.'யோகா' என்பது உலக அளவில் பரவி வரும் கலையாக மாறியதால், அதை அமல் செய்யும் முன், அதற்கான பயிற்சி பெற்றோர் இன்றி அமலாக்கம் எளிதல்ல. இவற்றை எல்லாம் பார்க்கும் போது அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் இடையே திறனறி கல்வி, வேலைவாய்ப்புக்கான கல்வி தருவதில் சரியான போட்டி வந்தால், அதிக கட்டண வசூல் என்ற புகார் கல்வித்துறையில் ஒழுங்குபடுத்தப்பட வழி வரலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement