Advertisement

மின்சார ஆட்டோவை அறிமுகப்படுத்தியதில் யாருக்கு நன்மை?

Share

எ. தீபன், பம்மல், காஞ்சி புரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: அண்டை மாநிலங்களான, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் ஆட்டோக்களில் ஏறி உட்கார்ந்தால் போதும்; மீட்டர் போட்டு தான், 'எங்கே செல்ல வேண்டும்' என, டிரைவர்கள் கேட்பர்.

ஆனால், சென்னையில் மட்டும் ஆட்டோவை நிறுத்தி, பயணியர் அதில் ஏறி உட்கார்ந்தால், மீட்டர் போடாமல், அடாவடி கட்டணத்தை கேட்பர். 1 கி.மீ.,க்கு கூட, 60 ரூபாய் கேட்கின்றனர். வேறு வழியின்றி, அதில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏழை மக்கள், எங்கே போய், குறைந்த கட்டணத்தில் வாகனத்தை பார்ப்பது. 'ஆன் லைன்' வாயிலாக, ஆட்டோக்கள் புக் செய்தால்கூட, குறைந்த துாரம் வர மறுக்கின்றனர்.

இது பற்றி எல்லாம் கவலைப்படாத அரசு, மின்சார ஆட்டோவை அறிமுகப்படுத்துவதால் யாருக்கு நன்மை? இது, மிக நல்ல செய்தி தான்! சுற்றுச்சூழலில் மாசு இல்லாமல் ஓடக்கூடிய மின்சார ஆட்டோக்கள், மேலும் மேலும் பெருகினால், மாசு குறைய வாய்ப்பு உள்ளது. மின்சார ஆட்டோக்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. ஜி.பி.எஸ்., வசதியும், ஆபத்து பொத்தானும் உள்ளன.

பொத்தானை அழுத்தினால், போக்குவரத்து போலீசாருக்கு தகவல் செல்லும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இத்தனை வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும், பயணியரின் வசதி என்பது, மீட்டர் போட்டு, கட்டணம் வசூலிப்பது தான். 'மீட்டர் போட்டு, அதன்படி கட்டணம் வசூலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம், பல ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டுள்ளது. அதை, இதுவரை அமல்படுத்த, தற்போதைய அரசு முன் வரவில்லை. முதியவர் ஒருவர், பக்கத்தில் உள்ள கோவிலுக்கு, மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால், நியாயமான கட்டணத்தை ஆட்டோ டிரைவர்கள் வசூலிப்பதில்லை.

இதுவரை எத்தனையோ பேர், மீண்டும் மீண்டும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தும், அதற்கான உத்தரவை பிறப்பித்தும் கூட, மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்ற நிலை உருவாகவில்லை. முதலில், மீட்டர் கட்டணத்தில், ஆட்டோ ஓட்டுவதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இது தான், ஏழை மக்களின் கண்ணீர் குரல்!

அக்கறையற்ற அரசு அதிகாரிகள் அதிகரிப்பு!
அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எட்டு கோடி பேரை பாதுகாக்கும் பொறுப்பு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் உட்பட எம்.எல்.ஏ.,க்களுக்கு உண்டு. மக்கள் பிரதிநிதிகளாக இருப்போர் இடும் கட்டளையை அல்லது திட்டங்களை, முறையாக மக்களுக்கு சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு, அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கும் உள்ளது.

அதற்காகவே, மக்களின் வரிப்பணத்திலிருந்து, சம்பளம் உட்பட, இதர சலுகைகள், வசதி வாய்ப்புகள், அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதிக சம்பளம் பெறும் தமிழக அரசு அலுவலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் தத்தம் துறைகளின் கடமைகளை, மக்கள் தேவை அறிந்து செய்கின்றனரா?

மழைக் காலத்திற்கு முன், சாலைகளில் ஏற்பட்டுள்ள சிறு பள்ளங்களை சீரமைக்க வேண்டும்; மழைநீர் வடிகால் வசதிகளை செய்ய வேண்டும் என, முன்கூட்டியே மக்கள் கோரிக்கை வைத்தாலும், அதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அதிகாரிகள் இருக்கின்றனர். கன மழை பெய்யும் போது, சிறு பள்ளங்களாக இருந்தவை அனைத்தும், கனரக வாகனங்களின் மிகப்பெரிய தாக்கத்தினால், பெரிய பள்ளங்களாக உருவெடுக்கின்றன.
பிரச்னையை முளையிலேயே கிள்ளி எறியாமல் விடுவதால், அரசுக்கு கூடுதல் செலவினமும், மக்களுக்கு துன்பமும் ஏற்படுகிறது. அதிகாரிகள், தங்களுக்கு இடப்பட்ட கடமையை உணர்ந்து, ஒரு மிகப்பெரிய கூட்டுக் குடும்ப தலைவரை போல செயலாற்றினால், சாலை, சுகாதாரம், மழைநீர் வடிகால், மின்சாரம், போக்குவரத்து, குடிநீர், சாக்கடை வசதிகள் உட்பட, அனைத்து அடிப்படை தேவைகள், நிச்சயம் தன்னிறைவு அடையும்!

பாலியல் குற்றத்தை தடுக்க மதுவிலக்கு அவசியம்!கு.அருண், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அன்று, டில்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி, மது குடித்த ஐந்து அரக்கர்களின் கைகளில் சிக்கி, ஓடும் பஸ்சில் சீரழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்; இது, ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சி அடையச் செய்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து, சுற்றுலா பயணியர் வர அஞ்சும் நிலை உருவானது.தற்போது, மீண்டும் ஒரு நிர்பயா சம்பவமாக, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே, ஒரு கால்நடை பெண் மருத்துவர், மது குடித்த நான்கு மிருகங்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டுள்ளார்; இது, மீண்டும் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திஉள்ளது.

பிடிபட்ட குற்றவாளிகள், 'என்கவுன்டர்' வாயிலாக, சுட்டு தள்ள வேண்டியோர்; இதில், மாற்று கருத்து கிடையாது. ஆனால், அவர்களை அப்படி செய்ய துாண்டிய மது அரக்கனுக்கு, என்ன தண்டனை கொடுப்பது? நாடு முழுவதும், மதுக் கடைகளை வீதிக்கு வீதியிலும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் திறந்து வைத்து, மது விற்கின்றனர். இதை குடித்து, பலரும் மிருகங்களாகி, அலைகின்றனர். இதனால், நாட்டில், மூன்று நிமிடத்திற்கு ஒரு பெண், பாலியல் தாக்குதலுக்கு ஆளாவதாக, அதிர்ச்சியான புள்ளி விபரம் வெளியாகி உள்ளது.

மிருக கண்களுக்கு, குழந்தைகள் முதல், வயதான பெண்கள் வரை, போகப் பொருளாக தான் தெரிகிறது; அப்போது, குற்றங்கள் நடக்க வழி வகுக்கிறது. இன்று, பெண்களுக்கு எதிராக நடக்கும், 90 சதவீத பாலியல் குற்றங்கள், மது குடித்தவர்களால் தான் நடப்பதாக சொல்லப்படுகிறது.அன்று, மஹாத்மா காந்தி, 'ஒரு முறை என்னை நாட்டை ஆள்வதற்கு ஒருமணி நேரம் அனுமதி அளித்தால், முதல் உத்தரவாக, நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகளை மூடி விடுவேன்' என்றார்.

இன்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், தமிழகத்தில் ஆட்சி செய்வதாக கூறிக் கொள்ளும், அ.தி.மு.க., அரசு, மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக, உடனடியாக, தமிழகம் முழுவதும், ஏன், பூரண மதுவிலக்கை அமல் படுத்தக்கூடாது?

பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு, துாக்கு தண்டனையை கொடுப்பதால் மட்டும், நிர்பயா போன்ற பெண்களை பாதுகாக்க முடியாது. ஒழுக்கமான சமுதாயம் உருவாக, உடனடியாக, நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு அவசியம்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • venkat Iyer - nagai,இந்தியா

    நண்பர் பெட்ரோலுக்கு அந்நிய செலவாணி அதிகமாக கொடுக்கின்றோம்.அதுபோல இராணுவத்துக்கும் அதிக செலவு ஆகிறதை நண்பர் அறியவும்.இறக்குமதி குறைந்து ஏற்றுமதியை அதிகரித்தால் மட்டுமே நாடு முன்னேறும்.

  • adithyan - chennai,இந்தியா

    அடிக்கடி ரோடு போட்டால் தான் அனைவருக்கும் மகிழ்ச்சி . நீங்கள் சொன்னமாதிரி செய்தால்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement