Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

Share

'அவர் சிறையிலிருந்து விடுதலையானால், உங்கள் கட்சியின், பொதுச் செயலர் பதவி உங்களிடம் இருக்காதே...' என, கூறத் துாண்டும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி: சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்ததும், அ.தி.மு.க.,வில் சேர வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில், அவரை, அ.தி.மு.க.,வில் அனுமதிக்க முடியாது என்பவர்களின் எண்ணமும் ஈடேறாது.

'அம்மா என்றால் அன்பு... என்ற, ஜெ., பாடிய பாடல் ஞாபகம் வந்து விட்டதா...' என, கேட்கத் துாண்டும் வகையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேச்சு: நம் சமூகத்தில், உணவு பசியை விட, அன்பு பசி தான் அதிகம். எனவே, அன்பும், அறனுமே, நாம் பெற்ற கல்வியின் பயனாக இருக்க வேண்டும். அன்பு தான் எல்லாவற்றிலும் மேலானது.

'கரைந்து வரும், காங்கிரஸ் நிலைமை தான் கவலை அளிக்கிறது என, உண்மை தொண்டர்கள் வேதனைப்படுகின்றனர். ஆனால், உங்களுக்கோ, நாட்டின் பொருளாதாரம் மீது என்னவொரு கவலை...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை: நாட்டின் பொருளாதார வளர்ச்சி கவலை அளிக்கும் வகையில் உள்ளது. ஆனால், அது பற்றி, பா.ஜ., அரசோ அல்லது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ கவலைப்பட்டதாக தெரியவில்லை.

'கொஞ்சம் தப்பா பேசி விட்டாலும், 'வேண்டுமென்றே, அந்த மலையாள நடிகன், அவ்வாறு பேசி விட்டான்' என, போர்வையாளர்கள் கொடி பிடித்து விடுவர் என்பதை, சரியாக அறிந்து வைத்துள்ளீர்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், மலையாள நடிகர் மம்மூட்டி பேச்சு: சினிமாவில், சரியாக தமிழ் பேசி நடித்து விடுவேன். ஆனால், தமிழகத்தில், மேடையில் தமிழில் பேச நடுக்கமாக உள்ளது. தவறாக பேசி விடுவேனோ என்ற பயம் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் மலையாளம் என்ற மொழியே கிடையாது; மலபார் மொழி தான் இருந்தது.

'நீங்கள் சொல்வது, 100க்கு, 100 மிகச் சரியானதே; நீங்கள் போக வேண்டிய இடம் அது தான்...' என, ஆர்வமாக கூறும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேச்சு: நாங்கள் எப்போதும், மேலேயும் போக மாட்டோம்; கீழேயும் போக மாட்டோம். நாங்கள் போகக் கூடிய ஒரே இடம், சிறை தான்; அதைத் தவிர வேறு எதுவும் கிடையாது. லஞ்சம், ஊழலுக்காக நாங்கள் சிறை போக மாட்டோம். உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக, நாங்கள் சிறைக்கு போகக் கூடியவர்கள்.

'உங்கள் கட்சியின் பலம் தெரிந்து விட்டால், நிலைமை இன்னும் சிக்கலாகி விடுமே...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி: உள்ளாட்சி தேர்தலில், ஒவ்வொரு கட்சிகளும், கூட்டணி வைக்காமல், தனித்து போட்டியிட வேண்டும். அப்போது தான், அந்த கட்சிகளின் பலம் என்ன என்பது தெரிய வரும். என்னைப் பொறுத்தவரை, பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும் என்பது தான் விருப்பம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement