Advertisement

திருச்சி மேயர் ஆகும் முயற்சியில் மந்திரி மகன்!

Share

''இரண்டு அமைச்சர்களுக்கு, முதல்வர் புது, 'அசைன்மென்ட்' குடுத்திருக்கார் ஓய்...'' என்றபடியே வந்தார், குப்பண்ணா.

''யாரு வே அவங்க...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''லோக்சபா தேர்தல்ல, கூட்டணி அமைக்குற பணியை, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியிடம் முதல்வர், இ.பி.எஸ்., ஒப்படைச்சாரோல்லியோ... அவாளும், டில்லிக்கும், சென்னைக்குமா பறந்து பறந்து, கூட்டணியையும், தொகுதி பங்கீட்டையும் பேசி முடிச்சா ஓய்...

''இதனால, சொந்த மாவட்டங்கள்ல, அவாளால கவனம் செலுத்த முடியாம போயிடுத்து... கடைசியில, அ.தி.மு.க.,வின் கோட்டைன்னு சொல்ற, கொங்கு மண்டலத்துல, அ.தி.மு.க., ஒரு எம்.பி., சீட் கூட ஜெயிக்கலை ஓய்...

''அதனால, 'உள்ளாட்சித் தேர்தல்ல, கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு பண்றதை நான் பார்த்துக்கறேன்... நீங்க, கொங்கு மண்டலத்துல முகாமிட்டு, வெற்றிக்கான வழிகளை பாருங்கோ'ன்னு, இருவரிடமும் முதல்வர் சொல்லிட்டார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''மின் வாரிய முறைகேட்டுல சிக்குனவங்க, விசாரணையில இருந்து தப்பிச்சிட்டாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு சென்றார், அன்வர்பாய்.

''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறைகேடா, மின் சப்ளை குடுத்ததா, சென்னை தாம்பரம், முடிச்சூர் மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மேல புகார்கள் வந்தது...

மின் வாரிய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், முறைகேடான மின் இணைப்புகளை கண்டுபிடிச்சு, மீட்டர்களையும் பறிமுதல் செஞ்சாங்க பா...

''கணக்கீட்டாளரா இருந்த ஒரு பெண் ஊழியரை, இது சம்பந்தமா, 'சஸ்பெண்ட்' செஞ்சாங்க... ஆனா, முறைகேட்டுல ஈடுபட்டு, அதுல சம்பாதிச்ச பணத்தை வச்சு, பதவி உயர்வுகள் வாங்கின அதிகாரிகள் யாரையும் விசாரிக்கவே இல்லையாம்... 'இது, என்ன நியாயம்'னு மின் வாரிய ஊழியர்களே புலம்புறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''மேயராகியே தீருவேன்னு களமாடிட்டு இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''எந்தக் கட்சியில, யாருங்க இப்படி கனவுல மிதக்கிறது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''உள்ளாட்சித் தேர்தல்ல, திருச்சி மேயர் பதவிக்கு, சுற்றுலா துறை அமைச்சர் நடராஜனின் மகன் ஜவஹர் விருப்ப மனு குடுத்தார்... அப்புறமா, மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் ரத்துன்னு சொல்லிட்டதால, தான் குடியிருக்கிற மலைக்கோட்டை பகுதி வார்டு கவுன்சிலர் பதவிக்கு மனு குடுத்திருக்காரு வே...

''அந்த வார்டு ஓட்டுகளை அள்ளணும்னு, முதியோர், விதவைகள்னு, 1,000த்துக்கும் மேற்பட்டோருக்கு அரசின் உதவித்தொகை குடுங்கன்னு, அதிகாரிகளுக்கு பரிந்துரை செஞ்சிருக்காரு... கட்டு கட்டா வந்த விண்ணப்பங்களை பார்த்து, அதிகாரிகள் மலைச்சு போயிட்டாவ வே...

''இதே மாதிரி, வார்டுல என்னென்ன தேவைகள் இருக்குன்னு, அமைச்சரின் மகன் பட்டியல் எடுத்துட்டு இருக்காரு... தேர்தல் முடியுறதுக்குள்ள என்னென்ன கூத்துகளை செய்யப் போறாரோன்னு, அதிகாரிகள் பயந்துட்டு இருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.கடையில் கூட்டம் அதிகரிக்க, பெரியவர்கள் இடத்தை காலி செய்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • A R J U N - sennai ,இந்தியா

    ......விசாரணையில இருந்து தப்பிச்சிட்டாங்க பா...''...இப்படியே லஞ்ச ஒழிப்பு துறை செயல் பட்டால் அர்த்தமே இல்லாமல் பொய் விடும்,மின்வாரிய ஊழல் மிக பிரசித்தம்,இன்று கூட தாம்பரம்-சேலையூர் உதவி பொறியாளர் லஞ்சம் ஏற்றதாக கைது செய்யப்பட்டார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement