Advertisement

இப்படித்தான் இருக்கும் இப்படித்தான் இருப்பார்கள்!

இப்போதெல்லாம் நிம்மதியாக வாழ்வதற்கு நான் கூறும் நல்ல அறிவுரை இது. நம்மைச் சுற்றி நடக்கிற எதுவும் நன்றாக இல்லை. பார்க்கிற பலரில் பாதிக்குமேல் நம்மைப் பாதிக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். நாளும் நம் நிம்மதி கெடுவது நமக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளாலும், நெருடுகிற மனிதர்களாலும் தான். இவர்கள் மத்தியில் எப்படிக் குப்பை கொட்டுவது என்பதற்குச் சரியான உபாயம் அலட்சியப்படுத்துவதும் அதிகமாய் எவரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதுவும்தான். 'இப்படித்தான் இருக்கும்; இப்படித்தான் இருப்பார்கள்' என்று இருந்து பாருங்கள். இதயம் இலகுவாக இருக்கும்.

ஒரு கதைஓர் அரசன் மாறுவேடத்தில் நகர்வலம் செல்கிறான். சாலையோரம் வயதான ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறார். விசாரித்துப் பார்த்ததில் சில ஆண்டுகளாகவே சாலையோர வாழ்க்கைதானாம். குளிர்காலங்களில் மட்டும் கொஞ்சம் சங்கடப்படுவதாகச் சொல்கிறார்.

அரசன் அந்தப் பெரியவரைப் பார்த்து, “அய்யா நீங்கள் கவலைப்படாதீர்கள்; நாளை காலை உமக்குப் புதிதாக ஒரு போர்வை தருகிறேன். போர்த்திக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போகிறான். போன அரசன் அதை அப்படியே மறந்து விடுகிறான்.

“நாளை முதல் குளிரின் கொடுமை கிடையாது. அரசன் தரப்போகிற போர்வையை போர்த்தி துாங்கப் போகிறோம்'' என்ற மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் அந்தக் கிழவர் இரண்டொரு நாள்களில் இறந்துபோகிறார். இதுதான் வாழ்க்கை. தாங்கிக்கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டதால் ஆரோக்கியமாக இருந்த பெரியவர், நாளைவரும், போர்வை வரும் கதகதப்பாகத் துாங்கலாம் என்று எதிர்பார்த்து ஏமாந்ததால் மனம் தளரவே மரணம் அவரை இலகுவாகத் தழுவிக்கொண்டது.

எதிர்பார்ப்புகள்உலகில் பெரும்பாலும் துயரங்களுக்கு எதிர்பார்ப்புகளே காரணம். எதையும் எதிர்பாராமல் இருந்தால், கிடைக்காமல் போகும்போது கவலையும் இல்லை, எதிர்பாராதது கிடைத்துவிட்டால் அந்த மகிழ்ச்சிக்கு எல்லையும் இல்லை. பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பதிலும் ஏமாறுவதிலும்தான் நொடிந்து போகிறார்கள். கவியரசர் கண்ணதாசன் எதிர்பார்ப்புகள் குறித்து நிறைய சிந்தித்திருக்கிறார். “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை” என்பார் அவர். தெய்வம் என்று ஒன்று இருப்பதே நாம் நினைத்தது (எதிர்பார்த்தது) நடக்காமற் போகும் போதுதான் என்று வேறு ஒரு கவிதையிலும் அவர் விவரிப்பார்.

“ஓடுகின்ற வண்டியெல்லாம் ஊர்சென்று சேர்ந்துவிட்டால் தேடுகின்ற கோவிலை நீ தேடாமல் போயிருப்பாய்” என்பார் அவர். எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோதுதான் நமக்கு எதுவும் நம் கையில் இல்லை என்ற ஞானம் பிறக்கிறது. சில நேரங்களில் எதிர்பார்ப்பு என்பது மிகப்பெரிய தவறாகவும் அந்தத் தவறுக்கு நமக்கு வழங்கப்படுகிற தண்டனை ஏமாற்றமாகவும் ஆகிவிடும்.கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது, காதலனிடம் காதலி எதிர்பார்ப்பது, பிள்ளைகளிடமிருந்து பெற்றோர் எதிர்பார்ப்பது, தொழிலாளிகளிடம் முதலாளிகள் எதிர்பார்ப்பது, ஊழியர்களிடம் உயர் அதிகாரிகள் எதிர்பார்ப்பது, தலைவர்களிடம் தொண்டர்கள் எதிர்பார்ப்பது என்று எண்ணற்ற எதிர்பார்ப்புகள் உண்டு. எதுவும் கையில் வருவதற்கு முன்பே வானளாவத் திட்டமிடுவதுகூட ஒரு எதிர்பார்ப்புதான். திட்டமிட்டபடி எதுவும் நடவாதபோது திகைத்து நின்று விடுகிறோம். ஏமாற்றங்களையும் சங்கடங்களையும் தவிர்ப்பதற்கான நல்ல வழி, எதையும் எதிர்பாராமல் இயங்கிக் கொண்டிருப்பதுதான்.

“என் கடன் பணி செய்துகிடப்பதே” என்று ஒற்றை வரியில் நமக்கு மாணிக்கவாசகர் உபதேசிக்கிறார். கூடவே கீதையும் “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” என்கிறது.சாதனையாளர்உலகப் புகழ்வாய்ந்த சாதனையாளர், உடல் ஊனமுற்றபோதும் அறிவையும் உழைப்பையும் நம்பிய ஸ்டீபன் ஹாக்கிங் கூறிய வாசகங்கள் நாமெல்லாம் மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டிய வைர வரிகள். “21 வயதிலிருந்தே எதிர்பார்ப்புகளை நான் முற்றிலுமாகக் குறைத்துக்கொண்டேன். அதற்குப் பிறகு எனக்குக் கிடைக்கும் எதுவும் எனக்கான போனஸ் போன்றது” என்கிற அவர், எதிர்பார்ப்புகளின்றி நிறைவாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்தவர். எதிர்பார்ப்புகளற்ற உழைப்புக்கு எது கிடைத்தாலும் மகிழ்ச்சிதான். இந்த மனநிலைகொண்ட மனிதர்கள்தான் நிம்மதியாக வாழ்கிறார்கள்.

இல்லறவாழ்வில் புதுமணம் பூணுகிற பெண்கள், சில ஆண்டுகள்கூட சேர்ந்திருந்து மகிழ்வதில்லை. காரணம் தம் அடுத்தப் பாதியான கணவன் குறித்த ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போவதுதான். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவேண்டும் என்று பலர் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
நிகழ்வது பலருக்கு நரகங்களில் என்றாகிவிடுகிறது. ஆனால் எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாமல் எது அமைகிறதோ அதுவே வாழ்க்கை என்று நினைப்பவர்களும், இதுதான் நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்று ஏற்றுக்கொள்கிறவர்களும் நிம்மதியாக இருப்பார்கள். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயமாகாவிட்டால் என்ன, நிச்சயமாக அதை நாம் சொர்க்கமாக்கிக் கொள்ளலாம் என்பது வெகுசிலருக்கே தெரிந்த வாழ்க்கை ரகசியம்.எதிர்பார்ப்புகள் இல்லாமல் இயல்பாக வாழக்கற்றுக்கொண்டால் நிறைவும், நிம்மதியும் நம் நெஞ்சில் குடிகொண்டுவிடும். ஸ்ரீ அன்னை, “நாம் விரும்புவது நமக்குக் கிடைப்பதில்லை; நமது தகுதிக்கே எதுவும் கிடைக்கும்” என்பார். தகுதிகளை வளர்த்துக்கொண்டால் போதும் தானாகவே எதுவும் அமையும் என்கிற நம்பிக்கை நமக்கு வேண்டும். நம்பிக்கை என்பது வேறு; எதிர்பார்ப்பு என்பது வேறு. தன்னம்பிக்கை திறமையின் அடிப்படையில் அமையும் என்றால், எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் ஆசைகளின் விளைவாகவே ஏற்படும். ஆசையால் எதையும் அடைவது சாத்தியமில்லை. ஆற்றலால் மட்டுமே சாத்தியம். ஆற்றலை வளர்த்துக்கொள்வதிலும் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொள்வதிலும்தான் ஏமாற்றங்கள் குறைகின்றன.
எதிர்பார்ப்பு என்பது பொருள் சார்ந்ததாக இருக்கலாம், பிறர்தம் நடத்தை குறித்தும் இருக்கலாம், பிறரிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளாகவும் இருக்கலாம்.நடத்தை குறித்த எதிர்பார்ப்புகள் தாம் நமக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கிற பல விஷயங்களில் அவர்கள் நம்மைக் கேட்டு நடக்கவேண்டும் என்பதும் அடங்கும்.அன்றுபோல் இன்று இல்லை, காலம் மாறுகிறது. நாம்பார்த்த ஊரும் உலகும், மண்ணும், மனிதர்களும் இன்று இல்லை. புதிய சூழலைச் சந்திப்பதற்கு நமது பழைய அறிவுரைகள் உதவாமல் போகலாம். இயல்பாக இருந்துகொண்டு அவர்களைச் சுதந்திரமாக இயங்கவிடவேண்டும். பிள்ளைகளிடம் நண்பர்களைப் போல பழகும் பெற்றோர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.வாழ்க்கை பயணம்வாழ்க்கை ஓர் அழகான அற்புதமான பயணம். இலக்குகளையும், போய்ச்சேரவேண்டிய இடத்தையும் எட்டுவது மட்டுமல்ல பயணம். பயணமே ஓர் ஆனந்தம்தான். உடன் பயணிக்கிறவர்கள், இடையில் வருகிற ஊர்கள், கடக்கிற நதிகள், கண்ணில்படுகிற காடுகள், மாறுகிற சீதோஷ்ண நிலைகள், துாக்கம், பாடல்கள், பக்கத்துப் பயணிகளுடன் உரையாடல் என்று எத்தனையோ சுவாரஸ்யங்கள் இருக்க, எதுவும் நாம் நினைப்பது போல் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவறு. எதிர்பார்ப்பு நிகழாதபோது ஏமாற்றங்கள் என்று நிம்மதியைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. எதையும் எதிர்கொள்ளுங்கள். எதிர்பார்த்து ஏமாறுவதைவிட எதிர்பாராத ஆனந்த அதிர்ச்சிகளை, அனுபவங்களைப் பெறுங்கள்.இப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட, இப்படித்தான் இருக்கும் இப்படித்தான் இருப்பார்கள் என்று எதையும், எவரையும் எதிர்கொள்ளுங்கள். இதமாக இருக்கும் உங்கள் வாழ்க்கை.-ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்எழுத்தாளர், சென்னை94441 07879

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement