Advertisement

திட்ட பெயரை இருட்டடிப்பு செய்யாதீர்!

பொன்.சம்பந்தன், திரு வள்ளூரிலிருந்து அனுப் பிய, 'இ - மெயில்' கடிதம்: இன்னும் எத்தனையோ கிராமங்களில், பாவ புண்ணியத்திற்கு பயந்த, அன்றாடம் காய்ச்சிகள் உள்ளனர்.

கூலி வேலை கிடைத்தால் மட்டுமே, அரிசி, பருப்பு, மிளகாய், புளி வாங்கி, உலை வைத்து இரவு மட்டும் சுடச்சுட சோறும், புளிக் குழம்பும் சாப்பிடுகின்றனர். இதற்காக தான், 'கிராமங்களில், வறுமை இல்லாத குடும்பங்கள் உருவாக்குவதே, சுதந்திரம் பெற்றதற்கு அர்த்தம்' என, தேச தந்தை மஹாத்மா காந்தி கூறினார். இந்த கொடுமைகள் தொடரக் கூடாது என்பதற்காக, கிராமங்களில், ஒரு குடும்பத்தில் நபர் ஒன்றிற்கு, ஆண்டிற்கு, 100 நாட்களாவது கண்டிப்பாக வேலை வழங்க வேண்டும் என்பதற்காக, மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த திட்டம், மத்திய அரசு கொண்டு வந்ததா, மாநில அரசு கொண்டு வந்ததா என, பெரும்பாலான கிராம மக்களுக்கு தெரியாது. 'மாநில அரசு தான் பணம் கொடுக்கிறது' என, பிரசாரமே செய்கின்றனர். அதனால், கூலித் தொகையில், 'கமிஷன்' எடுத்துக் கொள்ளும் போக்கு உருவாகி விட்டது. அரசு நிர்ணயித்த முழு தொகை, இத்திட்டத்தில் கூலியாக வழங்குவதில்லை. முழு தொகையை பெறும் விதமாய், தொழிலாளர்களை வேலை செய்ய விடுவதும் கிடையாது.வரைமுறைகளை கடைப்பிடிக்காமல், தங்கள் உறவினர்களுக்கு வேலை கொடுக்கின்றனர்.

நடக்கவே முடியாமல் உள்ள முதியோரை, எண்ணிக்கைக்காக கொண்டு வந்து நிறுத்துகின்றனர். இதன் காரணமாக, அந்த தொழிலாளர்கள் உடல் உழைப்பை குறைத்து, மரத்தடியில் படுத்து ஓய்வெடுக்க துவங்குகின்றனர். அரசியல் கட்சி பொதுக் கூட்டங்களுக்கு, இவர்களை அழைத்தே நிரப்புகின்றனர்; அரசு விழாக்களிலும் இதே நிலைமை தான். இந்த திட்டத்தில், 'மஹாத்மா காந்தி' என்ற பெயர் சொல்வதை குறைத்து விட்டனர். வெறுமனே, '100 நாள் வேலை' என்று தான் சொல்கின்றனர்.

திட்டமிட்டு, மஹாத்மா காந்திஜியின் பெயரை இருட்டடிப்பு செய்வதை தடுக்க வேண்டும். அதிகாரிகளும், தொழிலாளர்களும், திட்டத்தை முழுமையாக சொல்ல வேண்டும். இதற்காக, அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்!

சமுதாய பார்வை பாடலையாவது அரசுடைமையாக்கணும்!எஸ்.சபரிநாதன், புதுச்சேரியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கிரிக்கெட்டும், சினிமாவும் இல்லாத ஒரு பொழுதுபோக்கு வாழ்வை, இன்று மக்களிடையே பார்க்கவே முடியாது.தமிழர்கள், பொழுதுபோக்கு அம்சங்களில் திரைப்படம் என்ற ஊடகம், 80 ஆண்டுகளுக்கும் மேலாக, முக்கிய பங்கு ஆற்றி வருகிறது.

திரைப்பட பாடல் வெறும் செவி இன்பம் துடைப்பது மட்டுமின்றி, நல்ல செய்திகள், சிந்தனைகளை, மக்களிடையே கொண்டு சேர்த்து, நல்வழி படுத்துவதற்கான, கலங்கரை விளக்காக செயல்படுகிறது. பழைய தமிழ் திரைப்பட பாடல்களில், ஒன்றிரண்டு இடங்களில், சில குறிப்பிட்ட கட்சியின் சின்னத்தை, இங்கும் அங்கும் கூறுவதாக இருக்கிறது. ஒட்டு மொத்தமாக கேட்க முடிந்தால், கட்டாயமாக, அந்த பாடல்களில், எதாவது உயர்த்த, சமூக கோட்பாடுகளோ, கடிந்துரைப்பதோ, இடித்துரைப்பதோ இல்லாமல் இருக்காது.

இந்த பாடல்கள் ஒரு சிலவாவது, சமுதாய முன்னேற்றத்திற்கு இயற்றப்பட்டதாக அமைந்துள்ளது. முந்தைய காலங்களில், இந்த பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து மக்களை பரவசப்படுத்தியதோடு, முன்னேறவும் ஒரு காரணியாக அமைந்தது. பாடல்களை காப்புரிமை அதிகம் செய்யப் படும், இனி வரும் காலங்களில், பாடல்களை ஒலிபரப்ப முடியாமல் போகும் சூழ்நிலை ஏற்படலாம்.

இந்தியாவிலேயே, மிக அதிக, சமுதாய வானொலி உள்ள மாநிலம், தமிழகம். இதை கருதி, தமிழக அரசு, சமுதாய பார்வை கொண்ட நுாறு பாடலையாவது தேர்ந்து எடுத்து, அரசுடைமை ஆக்க வேண்டும். எளிதில் மக்கள் மனதில் பாடல்கள் சென்றடையும்; நல்ல சிந்தனைகளையும் வளர்க்கும்!

இதுவே ஜனநாயகம் தழைக்க வழி!
அ.ரா.பார்த்தசாரதி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: சமீப காலங்களில், நீதிமன்றங்களின் செயல்பாடுகள், மக்களை பெரிதும் கவர்ந்து இருக்கிறது. அவை இருப்பதால் தான், நாட்டின் ஜனநாயகம் காக்கப்படுகிறது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்வராக பதவி ஏற்றுள்ளார். 'முந்தைய, பா.ஜ., - சிவசேனா ஆட்சியாளர்களே தொடர வேண்டும்' என்பதே, மராட்டிய மக்களின் விருப்பமாக இருந்தது. அதனால் தான், பா.ஜ., - சிவசேனா கூட்டணிக்கு ஓட்டளித்தனர். இரு கட்சிகளும் சேர்ந்த கூட்டணிக்கு, பெரும்பான்மையும் கிடைத்தது. 25 ஆண்டுகளாக, நட்பு பாராட்டியோர், சிவசேனா கட்சியினர்; இந்த முறை, முதல்வர் பதவியை கேட்டனர்.

அதை தேர்தலுக்கு முன்பே, ஒப்பந்தமாகப் போட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல், வெற்றி பெற்ற பின், முதல்வர் பதவிக்கு, சிவசேனா ஆசைபட்டது. ஆனால், பா.ஜ., விட்டு கொடுக்க விரும்பவில்லை. இதனால், அந்த கூட்டணி முறிந்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும், வெவ்வேறு கோட்பாடுகளைக் கொண்டவை. ஒரு கட்சியை சேர்ந்தோருக்குள், பதவி வெறி தலைவிரித்தாடும் போது, வேறு வேறு கொள்கைகளை கொண்டோர், ஆட்சியில் ஒத்துப்போக முடியுமா, அப்படியே, ஒத்துப்போனாலும், ஐந்து ஆண்டுகள் தாக்கு பிடிக்க முடியுமா...

ஐந்து மாதங்கள் கூட நிலைத்திருக்காது. அரசியல்வாதிகள் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தாலும், மீண்டும் ஜனநாயகம் உயிர்த்தெழுகிறது என்றால், நீதிமன்றங்கள் இருப்பதால் தான்! அதற்காக, ஒவ்வொரு முறையும், நீதிமன்ற படிகளை ஏறி தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், நாட்டின் ஜனநாயக நெறிமுறைகள் என்னாவது...இல்லாவிடில், ஏதேனும் இரண்டு கட்சிகளை மட்டுமே, மக்கள் தேர்ந்தெடுத்து, ஓட்டளிக்க வேண்டும்.

இனியாவது, அரசியல் சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும். பெரும்பான்மை இருந்தால் மட்டுமே, ஆட்சி அமைக்க, கட்சிகளுக்கு, கவர்னர் அழைப்பு விட வேண்டும். இல்லையென்றால், கவர்னர் ஆட்சியை சிறிது காலத்திற்கு அமல்படுத்தி விட்டு, மீண்டும் தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும்; இதுவே, ஜனநாயகம் தழைக்க வழி. அடுத்து, மஹாராஷ்டிராவில் நடக்க இருக்கும் பரபரப்புகளை ஆவலோடு, எதிர்நோக்குவோம்!

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • adithyan - chennai,இந்தியா

    ஊழலின் உருவத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியாக அளவுக்கு பெருத்துவிட்டது. உருப்படியான வேலை செய்யாமல் வெறும் மண்ணை வாரி இடத்துக்கு இடம் கொட்டுவது உருப்படியான வேலை அல்ல. இந்த வேலைகளை வாய்க்கால்களில் உள்ள தூர்வாரால், களைச்செடிகளை அகற்றல் ஆகிவற்றை செய்திதிருந்தால் போர்க்கால அடிப்படையில் செலவுசெய்ய வேண்டி இருக்காது. அது மட்டுமல்ல கூலியை பேங்க் அக்கௌன்ட் மூலம் உரியவர்களுக்கு கொடுத்து வருவாய் துறை ஊழியர்களின் ஊழலை ஒழித்திருக்கலாம். இனியாவது அவ்வாறு செய்வார்களா.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement