Advertisement

'டவுட்' தனபாலு

பா.ஜ.,வில் இணைந்துள்ள நடிகை நமீதா: கடந்த மூன்றாண்டுகளாக, பிரதமர் மோடியின் செயல்பாடுகளை, உன்னிப்பாக கவனித்து வருகிறேன். நாட்டின் வளர்ச்சிக்காகவும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், குழந்தைகள் கல்விக்காகவும், அவர் பல உன்னத திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதனால் தான், பா.ஜ.,வில் இணைந்தேன்.

'டவுட்' தனபாலு: உங்கள் பேட்டியை பார்க்கும் போது, கடந்த மூன்றாண்டுகளாக, ஒரு படம் கூட கையில் இல்லாமல், வீட்டில் சும்மா இருந்தீர்கள் என்பது, 'டவுட்' இல்லாமல் தெரிகிறது. நல்ல, 'மார்க்கெட்' இருக்கும் போதே, பா.ஜ.,வில் இணையாமல், இப்போது இணைகிறீர்களே, மாநில தலைவர் பதவி மீது உங்களுக்கும் ஒரு கண்ணோ... 'டவுட்'டை கிளியர் பண்ணுங்க!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: அரசு சிறப்பு டாக்டர்கள் பணியிட மாற்றத்தில், ஏராளமான குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன. சிறுநீரகவியல் துறை டாக்டரை, இதய நோய் துறைக்கும், முடநீக்கியல் துறை பேராசிரியரை, குழந்தைகள் சிறப்பு பிரிவுக்கும் மாற்றியுள்ளனர். இதனால், நோயாளிகளுக்கு பயனில்லை. இட மாற்றத்தை அர்த்தமுள்ளதாக செய்ய வேண்டும்.

'டவுட்' தனபாலு: நீங்கள், டாக்டர் என்பதால், உங்களுக்கு, இந்த விவகாரம் குறித்து, நன்றாக தெரிந்துள்ளது. ஆனால், தமிழகத்தை ஆளும் முதல்வர் இ.பி.எஸ்., கவுரவ டாக்டர் பட்டம் தான் பெற்றுள்ளார் என்பதால், அவருக்கு இந்த விவகாரம் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், டாக்டர்கள் பணியிட மாற்றத்தை செய்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், உண்மையான டாக்டர் தானே; அவருக்கு எப்படி இது, தெரியாமல் போயிற்று என்பது தான், 'டவுட்' ஆக உள்ளது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தமிழக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, வெளிப்படையாக இல்லை. பல முறை கோரிக்கை வைத்தும், எந்த பதிலும் இல்லை. அதனால் தான், வேறு வழியின்றி, உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டியதாகி விட்டது.


'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கும், கோப்புகளை கொண்டு வந்து காண்பித்து, 'சரியாக செய்து விட்டோமா...' என, தேர்தல் ஆணையர், உங்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பது போல உள்ளதே. இப்படித் தான், உங்கள் ஆட்சியிலும் நடந்ததா என்பது என், 'டவுட்' ஆக உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement