Advertisement

கோவில் நிலங்கள் சர்ச்சைக்கு முடிவு பிறக்குமா?

Share

தமிழகம் சுற்றுலா கேந்திரமாக மாறும் வாய்ப்பை ஏற்படுத்த இது சரியான தருணம். இங்கு உள்ள சில மாவட்டங்கள் இயற்கை எழில் கொண்ட பகுதிகளாக இருப்பது மட்டும் தனிக் காரணமாகாது.அறநிலையத் துறையின் கீழ் உள்ள மிகப்பெரிய கோவில்கள் தமிழகத்தில் அதிக மக்களை தற்போது ஈர்க்கிறது. ஜோதிடம் அல்லது வாஸ்து நம்பிக்கை காரணமாக கோவில்களுக்கு செல்லும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால் கலாசார கேந்திரமாக கல்விக்கு ஊற்றாக தனி மனிதப் பண்பாட்டை வளர்க்கும் இடமாக கோவில்கள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையாக உள்ள கோவில்கள் தமிழகத்தில் நுாற்றுக்கணக்கானவை உள்ளன. அவற்றை சைவம் வைணவம் என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை.

காலம் காலமாக உள்ள மூதுரைப்படி 'கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்; ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பதைப் பின்பற்றி வந்திருக்கிறோம். மத வழக்கத்தை ஊக்குவிப்பதால் தனி மனிதப் பண்பாடு ஒடுங்கி விடும் என்பதற்கு உரிய வலுவான ஆதாரங்கள் கிடையாது.நம் முன்னோர் செய்து வைத்த அருமையான சிலைகளை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடம் பெறப்பட்ட தகவல்படி தேடி எடுத்து வரும்போது தான் அவற்றின் கலைநயம் புரிகிறது; அவற்றை ஏன் உருவாக்கினர் என்ற கேள்வியும் எழுகிறது.தமிழக கோவில்களில் பலநுாறு ஆண்டுகளாக இருந்த கற்சிலைகள் ஐம்பொன் சிலைகள் அமெரிக்க மற்றும் பல நாட்டு தனிநபர் அருங்காட்சியகத்தில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இவற்றை காலப்போக்கில் நாம் மறந்து விடுவோம்.

ஆனால் அந்தச் சிலைகளை உருவாக்கியதற்கான காரணம் என்ன மக்களால் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டன என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். நம் உயர்வைப் பற்றிய மேலோங்கிய எண்ணம் பெருமை போன்ற சுய ஆதிக்க உணர்வுகள் கோவில்களுக்குச் செல்லும்போது ஒடுங்கி விடும் என்பதற்காகவே வழிபாடு நடைமுறை ஏற்படுத்தப்பட்டது.இது தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களிலும் பிரதிபலித்தது வரலாறு. கொடிமரம் மற்றும் சில விசேஷ சிலைகள் இந்த நாட்டின் பண்பாட்டு தொடர்ச்சியை பிரதிபலிக்கின்றன. கோவிலை வெறுக்கும் நாத்திகர்களும் நம் குடிமக்களே.இப்போது கிடைக்கும் தகவலின் படி திருடப்பட்டு அமெரிக்கா எடுத்துச் செல்லப்பட்ட 68 சிலைகள் அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் அமெரிக்க கண்காட்சியகங்களில் இருந்து திரும்ப வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் நெல்லை
மாவட்டத்தின் சுத்தமல்லியில் இருந்து களவாடப்பட்ட சிவபெருமான் சிலை சமீபத்தில் திரும்ப கொண்டு வரப்பட்டது முதல் இந்த விஷயம் சற்று பெரிதாக ஆராயப்பட்டது.பிரிட்டிஷ் ஆதிக்கம் துவங்கும் முன் தமிழக கோவில்களுக்கு மூவேந்தர்கள் மட்டும் அல்ல; வந்த சிறிய மன்னர்களும் கோவிலைப் புதுப்பிக்கும் பணியில் அதிக அக்கறை காட்டினர்; கோவில் நிர்வாகத்தைக் கண்காணித்தனர்.அவற்றுக்குத் தரப்படும் நிலங்களை மற்றவர்கள் கையகப்படுத்தாமலும் அதில் வரும் வருமானம் கோவில் செலவுக்கு பயன்படுமாறும் கண்காணித்தனர்; பல ஏக்கர் நிலங்களை மானியமாகவும் தந்தனர். அவற்றில் இன்று எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணக்கெடுப்பது பெரிய செயல். ஏனெனில் உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற பொதுவிதி அமலான பின் கோவில் நிலங்களை குத்தகை எடுத்த பலர் அதன் சொந்தக்காரர்கள் ஆகிவிட்டனர்.

அவர்கள் நான்கு தலைமுறையாக நிலத்தை அனுபவித்து வருகின்றனர். கோவில் நிலத்துக்கான ஆவணங்களை அறநிலையத் துறை ஆராயுமா என்பது தெரியவில்லை.இன்று நீதிமன்ற வாசற்படிகளில் காத்திருக்கும் கோவில் நில விவகாரங்கள் மிகவும் குறைவே. சில கிராமங்கள் முழுவதும் கோவில்களின் சொத்து என்றிருந்த பழைய கதை இப்போது மாறி விட்டது. கோவில்களுக்கான நிலங்கள் குறைந்ததால் பெரிய கோவில்கள் இன்று சீரழிந்து அதன் தினசரி செலவுக்கு அறநிலையத் துறையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு காத்திருக்க வேண்டியிருக்கிறது.
மேலும் அறநிலையத் துறை நியமிக்கும் அரசு ஊழியர்கள் பலருக்கு தாம் பணியாற்றும் கோவிலின் சிறப்பு பழமை அல்லது அதில் உள்ள சிலைகள் அவற்றின் தொடர்புடைய மன்னர்கள் பற்றிய வரலாறு தெரிவதில்லை. பரம்பரை அர்ச்சகர்களுக்கே அவற்றின் புராண முக்கியத்துவத்தைத் தாண்டி விஷயங்களை விளக்கத் தெரியவில்லை.கடத்தலில் இருந்து மீட்கப்படும் சிலைகள் அந்தந்தக் கோவில்கள் அல்லது அருகில் உள்ள மிகப்பெரும் கோவில்களில் அதற்கான விபரங்களுடன் வைக்கப்பட்டு அவற்றுக்கான நித்திய பூஜை நடைமுறை துவங்கப்பட வேண்டும்.

அதற்கு கோவில் நிலங்கள் பழங்கால சிலைகள் ஆகியவற்றைக் கண்டறிய புதிய சட்டக் கருத்துக்களுடன் கூடிய நடைமுறை தேவை. மேலும் புதிது புதிதாக சிறிய கோவில்களை கட்டும் பலரது முயற்சி இப்பழமையை உருக்குலைத்து விடும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement