Advertisement

உள்ளாட்சித் தேர்தல் விமர்சனம் ஏராளம்!

அ.தி.மு.க., அரசு, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில், முக்கியமாக, உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதும் ஒன்று.

குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் கிடையாது என்ற அறிவிப்பு, இப்போது அதிகம் விமர்சிக்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் என்பது, எம்.எல்.ஏ., - எம்.பி., தேர்தல் போல அன்று. மக்கள் பிரநிநிதிகளாக கீழ்மட்ட நிர்வாக அமைப்புகள் செயல்படும் இந்த அமைப்பு, முற்றிலும் வேறுபட்டது.மாநிலத் தேர்தல் ஆணையம், இத்தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டில் உறுதிமொழி அளித்த நிலையில், இத்தேர்தல் தேதி வெளியாக வேண்டியது முக்கியமானதாகும்.

மேலும், தென்காசி தற்போது மாநிலத்தின் 33வது மாவட்டமாக உருவானதால், அதுவும் ஒருவகையில் நல்லதே. ஏனெனில் அதிக மாவட்டங்கள் இருந்த போதும், இனி எந்தெந்த மாவட்டங்களில், கல்வி, சுகாதாரம், சுற்றுப்புறத் துாய்மை, சாலை வசதிகள் ஆகியவை பின்தங்கி உள்ளன என்பதை எளிதாக ஆராயலாம். தவிரவும் மிகப்பெரிய அமைப்புகளான மாநகராட்சி என்றால், அதில் நுாற்றுக்கு மேற்பட்ட கவுன்சிலர்கள் என்பது சாதாரணமானது. தலைநகர் சென்னை, 200 பிரதிநிதிகள் கொண்ட அமைப்பாகும்.

சில பேரூராட்சி எல்லைப்பகுதி முழுவதையும், வெற்றி பெற்ற அதன் தலைமைப் பிரதிநிதி சுற்றிப் பார்த்து, மக்கள் குறைகளை கண்டறிவது சுலபம் அல்ல. மொபைல் மூலம், 'வாட்ஸ் - ஆப்' குறுஞ்செய்திகளில் எளிதாக குறைநிறைகளை கண்டறிவதற்கு காலம் பிடிக்குமே தவிர எளிதானதல்ல. ஒருக்கால் இந்த அமைப்புகளில் நேரடித் தேர்தல் இருந்து, அதன் தலைவர், 50 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டுகள் பெற்ற வெற்றியுடன் பயணிப்பார் என்பதை, எளிதாக எந்தக் கட்சியும் உறுதி சொல்ல முடியாது. ஏனெனில், தமிழகத்தில் அ.தி.மு.க.,மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகள், இந்த பிரமாண்ட அமைப்புகளுக்கான தேர்தலில், அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புகள் அதிகம்.

மேலும் அந்தப் பெரிய பதவியை வெற்றி பெற்று தக்க வைக்கும் நபர், அந்தப் பகுதியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் பெற்ற ஆதரவு ஓட்டு எண்ணிக்கையை விட அதிமாக பெற்றிருக்கலாம். அப்படிப் பார்க்கும் போது மேயர் அல்லது பேரூராட்சித் தலைவர் என்பவர், கட்சி வட்டத்தில் பெரிய அதிசய நபராக மாறலாம். இன்றைய நிலையில், இப்பெரிய பதவிகளில் மறைமுகத் தேர்தல் என்பது, எப்படி பிரதமர், முதல்வர் ஆகியோரது பதவிகளை, சம்பந்தப்பட்ட எம்.பி.,க்கள் அல்லது எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்ய வேண்டிய நடைமுறை போலாகும்.

இதை, முதல்வர் பழனிசாமி, தெளிவாக விளக்கியதுடன். இது குறித்த கொள்கை முடிவுகளை இந்த அரசு மட்டும் அல்ல, முந்தைய தி.மு.க., அரசும் எடுத்திருப்பதைஉணர்த்தியிருப்பது இச்சர்ச்சையைக் குறைக்கும். தவிரவும், புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தால் ஏற்படும் மாவட்ட வரையறைகளை, இத்தேர்தல் ஓட்டுப்பதிவு பாதிக்க வாயப்பு இல்லை. அத்துடன், முற்றிலும் உள்ளூர் தேர்தல் என்பதால், முகம் தெரிந்த வேட்பாளர் என்பதால், கட்சிகள் பிரசாரம், மற்றும் ஓட்டளிக்கும் மக்களுக்கும் அதிக குழப்பம் வராது.

தமிழகத்தில் மற்ற பொதுத்தேர்தல் போல, இத்தேர்தலிலும், 75 சதவீத அளவுக்கு மக்கள் இயல்பாக ஓட்டளிப்பரா என்பதை முடிவு கட்ட முடியாது. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கு, அந்தத்தொகுதியில் இருந்து பணி மற்றும் அலுவல்கள் காரணாக சென்றவர்கள், அத்தேதியில் ஓட்டளிப்பது போல அக்கறை காட்டுவதில்லை. கடந்த ஐந்தாண்டுகளில், ஆண்களை விட, பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஓட்டு போடும் முறை இத்தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்கும். தவிரவும் இத்தேர்தல் முடிவுகள், வரப்போகும் சட்டசபைத்தேர்தலுக்கு முன்னோடி என்றும் கூற முடியாது.

ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போக, அது குறித்த வழக்கு காரணமானது போல, மறைமுகத் தேர்தல் எதற்கு என்ற வழக்கின் முடிவும், நிச்சயம் எதிர்பார்க்கப்படும்.தவிரவும், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், ஆகிய கட்சிகள் தாங்கள் சார்ந்துள்ள அணியை விட்டு, தனியாக நிற்பது பயன் தராது. இவைகள் தமிழகம் முழுவதும் பரந்து பட்ட கட்சியாக இல்லை. தமிழக பா.ஜ., இத்தேர்தலில், அ.தி.மு.க.,வை ஆதரிப்பதுடன், அங்கொன்றும், இங்கொன்றுமாக வார்டு கவுன்சிலர்களை பெறுவதற்கு பெரு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி வரும்.

மேயர் போன்ற முக்கிய பதவிகளுக்கு, அரசின் முடிவால், 'குதிரைபேரம்' நடைபெறும் என்ற புகார் மற்ற தேர்தல் பிரதிநிதிகள் விஷயத்தில் இல்லை என, குறைகூறும் அரசியல் கட்சிகள் கூற முடியுமா? வாரிசு அரசியல், அல்லது வேண்டியவர்களுக்கு பதவி, கட்சிப் பணத்தைக் கையாளும் பொறுப்புகளில், தலைமைக்கு நெருங்கிய ஒரு சிலர் என்று இருக்கும்போது, தேர்தல் என்று வந்தால், அதிக அதிருப்திகளை பேசும், 'கட்சி அரசியல்' இனி அதிகம் அரங்கேறாது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement