Advertisement

எதிர்காலத்திற்காக அஸ்திவாரமிடுங்கள்!

Share

பொருந்தா கொள்கை உடைய கட்சி களோடு கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெறவில்லை. எப்போது ஆட்சி கவிழுமோ என்ற பயத்தில், 'மைனாரிட்டி' ஆட்சியும் அமையவில்லை.

பெரும்பான்மை என்பது, பலமிக்க ஆயுதம்; அதை பயன்படுத்தி நல்லது செய்யலாம்; மாறாக, சர்வதிகாரத்தையும் நிலைநாட்டலாம்.'உங்கள் உன்னதமான உயிரை பாதுகாக்க, சாலை விதியை கடைபிடியுங்கள்' என, அரசு கெஞ்சியபோது, அலட்சியம் காட்டிய மக்கள், இன்று சட்டத்தை கடுமையாக்கிய பின், அவற்றை பின்பற்றுகின்றனர்.'பொது இடங்களை துாய்மையாக இருக்க உதவுங்கள்' என, சாலையோரம், பஸ் நிலையம், பூங்கா என, முக்கிய இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பலர் கண்டுகொள்வதில்லை. கண்ட இடத்தில் குப்பையை எரிவது; எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது என, அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர்.இவர்களிடம் கெஞ்சினால், பலன் கிடைக்காது; அதிகாரத்தை காட்டினால் தான், சரியான குடிமகனாக நடந்து கொள்வர்.இந்திய துணைகண்டத்தில் மிக பெரிய பலம், மனித வளம்; அதுவே, பலவீனமும் கூட. பொருளாதார ஏற்ற, இறக்கத்திற்கும், மக்கள் தொகை பெருக்கத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது.மக்கள் தொகை பெருக்கத்தால், நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. நல்ல உணவு, துாய்மையான காற்று, சுகாதாரமான தண்ணீர் போன்றவை கிடைக்காத நிலைக்கு, மக்கள் தள்ளப்படுகின்றனர்.
பூமியின் நிலப்பரப்பில், 17 சதவீதத்தை மனிதர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதில், இந்தியர்களாகி நாம், 2.4 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளோம்!மக்கள் தொகையில், உலக நாடுகளில், இந்தியா, இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பது, அச்சப்பட வேண்டிய செய்தி.இந்தியாவில், 136.8 கோடி பேர் வசிக்கின்றனர். முதலிடத்தில் இருக்கும் சீனாவில், 143.4 கோடி பேர் உள்ளனர். மூன்றாம் இடத்தில் இருப்பது, அமெரிக்கா. அங்கு, 32.9 கோடி மக்கள் தான் வசிக்கின்றனர்.அதாவது, இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவிற்கும், மூன்றாம் இடத்தில் உள்ள அமெரிக்காவிற்கும் இடையேயுள்ள வித்தியாசம், 104 கோடி மக்கள்!மக்கள் தொகை பெருக்கத்தில், இதே வேகத்தில் இந்தியா சென்றால், அடுத்த, எட்டு ஆண்டுகளில், முதலிடத்தை பிடிக்கும் என, ஆய்வாளர்கள் அதிர்ச்சி ஊட்டுகின்றனர்.

அதனால் தான், நம் பிரதமர் மோடி, மக்கள் தொகை பெருக்கம் குறித்து, எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளார்.நம் நாட்டின், 73-வது சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி, 'மக்கள் தொகை பெருக்கம், எதிர்கால சந்ததிக்கு, பிரச்னைகளை உருவாக்கும். இது குறித்து, நாம் கவலைப்பட வேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்த, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். 'குடும்பக் கட்டுப்பாடு குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முறையாக திட்டமிடாமல், குழந்தை பெற வேண்டாம்' என, அறிவுறுத்தியுள்ளார்.தேசிய குடும்பநல ஆய்வு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, நம் நாட்டில், 0.3 சதவீத ஆண்கள்; 36 சதவீத பெண்கள் மட்டுமே, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.பெண்கள், கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்வதில், 30 சதவீதத்துடன், மணிப்பூர் மாநிலம் முதலிடத்திலும், 4.6 சதவீதத்துடன், ஆந்திரா கடைசி இடத்திலும் உள்ளது. தமிழகத்தில், 10 சதவீத பெண்கள் கருத்தடை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.

சீனாவில், 1970களில், 'ஒரு குடும்பம்; ஒரு குழந்தை' திட்டம் அமல்படுத்தப்பட்டது. இரண்டாவது குழந்தை பெற வேண்டுமானால், அரசிடம் அனுமதி பெற வேண்டும். தீவிரமான நடைமுறை பின்பற்றப்பட்டதால், மக்கள் தொகை பெருக்கம், சீனாவில் கட்டுக்குள் இருந்தது. 2013 டிசம்பரில் தான், இரு குழந்தைகளை பெற்றுக் கொள்ள, சீனா அனுமதித்தது.இந்தியாவில், 'நாம் இருவர்; நமக்கு ஒருவர், ஒன்று பெற்றால் ஒளிமயம்' என, வாகனங்களில், விழிப்புணர்வு வாசகம் எழுதுவதோடு, கடமையை முடித்து விட்டோம்.மத்திய அரசு, மக்கள் தொகை பெருக்கத்தின் மீது, தீவிர கவனம் செலுத்துவது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது.
நாட்டின் வளர்ச்சிக்கு, மனித வளம் இன்றியமையாதது. அதே நேரம், அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு. அதாவது, பலம் வேறு; வீக்கம் வேறு என்பதை, மக்கள் உணர வேண்டும்.தமிழகம், கேரளா போன்ற, படிப்பறிவில் முன்னேறிய மாநிலங்களில், மக்கள் தொகை கட்டுக்குள் இருக்கிறது. படிப்பறிவு இல்லாத, சில வட மாநிலங்களில், அளவுக்கு அதிகமான குழந்தை பேறு இருக்கிறது.வட மாநிலங்களில், போதிய வேலைவாய்ப்பு இல்லை என்பதால் தான், தமிழகம், கேரளா போன்ற இடங்களில், அதிகம், அம்மாநில தொழிலாளர்களை காண முடிகிறது.'என்னிடம் அதிக பணம் இருக்கிறது என்பதற்காக, எத்தனை கார்கள் வேண்டுமானாலும் வாங்குவேன்' என்பது சரியாகுமா? இட நெருக்கடி, சுற்றுச்சூழல் கேடு போன்ற வற்றை கவனத்தில் கொள்ள வேண்டுமல்லவா!அதுபோலத் தான், அதிக குழந்தை பேறு. அது, தனிமனித பிரச்னை அல்ல; அது சமூகத்திற்கான கேடு.இந்தியாவில், ஒரு தம்பதி, இரண்டுக்கு மேல் குழந்தைகள் பெற்று கொள்வதை, தடுக்க வேண்டும். அதற்கான திட்டமிடல் மட்டுமின்றி, உடனடியாக செயலில் இறங்க வேண்டும்.

கட்டாய கருத்தடை சட்டம், நம் நாட்டில், இப்போதைக்கு சாத்தியமில்லை. அதை, சில மத உணர்வாளர்கள் எதிர்ப்பர். இது, பிரச்னையை திசை திருப்பி விடும்.அதற்கு பதிலாக, இரண்டுக்கும் மேல் குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு, ரேஷன் பொருட்கள், இட ஒதுக்கீடு, அரசின் சிறப்பு சலுகை, மானியம் போன்றவற்றை ரத்து செய்யலாம்.பெற்றோர், அளவோடு குழந்தை பெற்றால் தான், அவர்களின் எதிர்காலத்தை, சிறப்பாக செப்பனிட்டு கொடுக்க முடியும்.எனவே, இரண்டுக்கும் மேல் குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு, ரேஷன் பொருட்கள், இட ஒதுக்கீடு, அரசின் சிறப்பு சலுகை, மானியம் போன்றவற்றை ரத்து செய்யும் மசோதாவை, நிறைவேற்ற முன்வர வேண்டும்.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள், அரசு வேலைகளுக்கு தகுதி பெற மாட்டார் என்ற உத்தரவை, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்தது.அதை நாடு முழுவதும் அமல்படுத்த, மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு, எதை செய்தாலும் எதிர்க்க வேண்டும் என, நினைப்போரை கண்டு கொள்ள வேண்டாம்.தேசத்தின் நலனுக்கு எது சரியோ... அதை அமல்படுத்த வேண்டும். எதிர்காலத்தில், இந்தியாவில் கட்டமைப்பு சரியாக இருக்க, இன்றே அஸ்திவாரத்தை, ஆழமாக அமைக்க வேண்டும். அதற்கு, சரியான, அதிரடி முடிவுகள் தான் தேவை.பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., - சர்ஜிகல் ஸ்டிரைக், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் என, பிரதமர் மோடி, செய்வதை, அழுத்தம் திருத்தமாக செய்கிறார். அதை போல, மக்கள் தொகை பெருக்கம் விவகாரத்திலும், பிரதமர் மோடி, அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement