Advertisement

சின்னச்சின்ன செயலில் நேர்மை

Share

ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒரு முறை மாஸ்கோ நகர சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு பிச்சைக்காரர், 'ஐயா எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்' என கேட்டார்.

உடனே டால்ஸ்டாய் சட்டைப்பையை தடவிப் பார்த்தார். அதில் காசு எதுவும் இல்லை. பின்னர், 'தம்பி என்னிடம் காசு இல்லை' என வருத்ததுடன் கூறினார். இதை கேட்டதும் அந்த பிச்சைக்காரர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அவரது நடவடிக்கையை டால்ஸ்டாய் வியப்புடன் பார்த்தார்.'தம்பி என்னிடம் காசு இல்லை என்று தானே சொன்னேன். இதற்காக இவ்வளவு மகிழ்ச்சி அடைகிறாயே. உன் மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?' என கேட்டார்.அதற்கு அந்த பிச்சைக்காரர், 'ஐயா எனது வாழ்க்கையில் இதுவரை என்னை மதித்து ஒரு வார்த்தை கூட யாரும் கூறியது கிடையாது. நீங்கள்தான் என்னை தம்பி என முதன் முதலில் அழைத்து இருக்கிறீர்கள்.


அதனால்தான் அச்சொல்லை கேட்ட உடனே எனக்குள் மகிழ்ச்சி பீறிட்டது. எனக்கு நீங்கள் எதுவும் தர வேண்டாம். என்னை தம்பி என அழைத்தீர்களே அந்த இனிமையான சொல் ஒன்று எனக்கு போதும். சென்று வாருங்கள்' என்றார்.கருணைப் பார்வைமட்டற்ற மகிழ்ச்சியும், மிகப் பெரிய வெற்றிகளும் பெரிய செயல்களில் மட்டும் இல்லை. சின்ன சின்ன செயல்களிலும் நிறைய புதைந்து இருக்கின்றன. கருணையான ஒரு பார்வை, ஆறுதலான ஒரு வார்த்தை, பிரச்னைகளை பொறுமையாக கேட்கும் காது, ஆதரவை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு கைபிடித்து ஒரு உதவி என எந்த பணச் செலவும் இன்றி எத்தனையோ உள்ளங்களை மகிழ்விக்கவும் முடியும்.


அதே போல் ஊக்கமிகு பேச்சினால் உற்சாகப்படுத்தி எத்தனையோ மனிதர்களின் வாழ்வினைப் பட்டத்தினைப்போல் உயர வைக்கவும் முடியும்.யாவர்க்குமாம் இறைவற்கு ஒருபச்சிலை யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறையாவர்க்குமாம் உண்ணும்போது ஒருகைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரைதானேஎன்ற திருமந்திரத்தின் வரிகள், தம்மிடம் இருப்பதில் சிறிதளவு கொடுத்தாலே வாழ்வில் சிறப்பினை அடையமுடியும் என்கிறது.

அற்புதமான மனிதன்சின்னச் சின்ன செங்கற்களை நேர்த்தியாய் அடுக்குகின்றபோது ஒரு அழகான மாளிகை உருவாதைப் போல் சின்ன சின்ன செயல்பாடுகளை நேர்த்தியாக செய்கின்ற போது ஒரு அற்புதமான மனிதன் உருவாகின்றான். சிறிய செயல்பாடுகளில் சரியாக இருப்பவர்கள் அரிய பெரிய செயல்களைச் செய்து முடித்திருக்கிறார்கள்.குறுக்கு வழியார் ஒருவர் சின்னச் சின்ன செயல்பாடுகளில் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கின்றார்களோ, அவர்கள் பெருஞ்செயல்களிலும் நேர்மையாகவே இருக்கின்றார்கள்.

மாறாக சிறுசிறு செயல்பாடுகளில் நேர்மைக்கு மாறாகவும், உண்மைக்குப்புறம்பாகவும் இருப்பவர்களால் பெருஞ் செயல்களிலும் நேர்மையாக இருக்க முடிவதில்லை. 'நேர் வழியில் அடைய முடியாததை குறுக்கு வழியில் அடைந்து விட முடியாது' என்றார் ஜெர்மன் நாட்டு மேதை கதே.தனக்காக வைத்துக்கொண்ட அலாரத்தை தள்ளி வைப்பவனின் வாழ்கையின் வெற்றியும் தள்ளிப் போடப்படுகிறது. படுக்கையின் விரிப்புகளை மடிக்காமல் கிளம்பும் மனிதனின் நேர்த்தியும் கேள்விக்குறியாகிறது. 'டிவி' பார்த்துக் கொண்டே உண்ணுகின்ற நொறுக்கு தீனிகள்தான் உடல் பருமனுக்கு உத்தரவாதமாகிறது.


எத்தகைய களைப்பினில் வீடு வந்தாலும் வரிசையாக வைக்கப்படுகின்ற காலணிகளே ஒரு குடும்பத்தின் ஒழுங்கினை எடுத்து காட்டுகிறது. இவ்வாறு சின்ன சின்னதாய் செய்கின்ற செயல் பாடுகளே ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிக்கிறது. வளமான வாழ்வுசில நேரங்களில் சில தவறான மனிதர்கள் வளமாய் வாழ்வதைக் காண்பதுன்டு. அவர்கள் வெளித் தோற்றத்திற்கு பண பலமும், பக்க பலமும் இருப்பதாக தோன்றும். ஆனால், அவர்களிடம் மன நிம்மதியை சிறிதளவும் எதிர்பார்க்க முடியாது.

அதே சமயத்தில் நேர்மையாகவும், நியாயமாகவும் வாழ்வை நடத்துபவர்கள் துன்பப்படுவது போல் தெரிவர்; அவர்களது வாழ்கையும் சாதாரணமாகவும், எளிமையாகவும் தென்படும். ஆனாலும் அவர்களது நிம்மதி ஆழ்கடலைப் போன்று அமைதியானது. அத்தகையோரது வாழ்க்கையே இவ்வுலகில் நல்லவண்ணம் வாழ்வதற்கு கலங்கரை விளக்கமாய் அமையும். அவ்வப்போதைய மகிழ்ச்சிக்காக சிறுசிறு தவறு செய்வது வளரும் காலத்தில் ஒரு குற்றவாளியைத்தான் உருவாக்கும்.


யாருக்கு தண்டனைகுற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த இளைஞனிடம், 'உனது திருட்டு குற்றத்திற்கு பத்து வருடம் கடுங்காவல் தண்டனை தருகிறேன். உனது கடைசி ஆசை என்ன?' என்ற நீதியரசரின் கேள்விக்கு, 'அத்தண்டனையின் சரிபாதியை எனது பெற்றோருக்கு கொடுங்கள்' என்றான் அந்த குற்றவாளி. ஆச்சரியமாய்ப் பார்த்தார் நீதியரசர்.ஆமாம் ஐயா நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது நண்பர்களிடம் திருடினேன். அதை எனது வீட்டிற்கு கொண்டு வந்தேன். எனது பெற்றோர் என்னைக் கண்டிப்பதற்கு பதிலாக திருட்டுப் பொருள் எனத் தெரிந்தும் அதனைப் பெற்றுக்கொண்டனர்.

அவர்களால்தான் இன்று பெரிய திருடனாகி இந்நிலைக்கு ஆளானேன். எனவே நேர்மையற்ற வழியில் நான் வாழ்ந்ததற்குத் துணையாய் இருந்தவர்கள், எனது பெற்றோரே. அதனால்தான் அவர்களுக்கும் தண்டனை வழங்குங்கள்' என்றான் இளைஞன்.எது குற்றம் சின்னச்சின்ன தீய செயல்பாடுகள் கெட்ட மனிதரை உருவாக்குகிறது. சின்னச்சின்ன நல்ல செயல்பாடுகளே ஒரு சிறந்த மனிதரை உருவாக்கி மகிழ்கிறது.'எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்று'என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப தவறுகளை இளமையில் செய்துவிட்டு தவறான வாழ்க்கையை வாழ்ந்து விட்டோமே என முதுமையில் வருத்தப் படுவதில் பயன் ஏதுமில்லை.

சின்னச்சின்ன செயல்களில் தவறு, குற்றம்.சின்னச்சின்ன செயல்களில் நேர்மை, வாழ்வின் ஏற்றம்.- ஆர். திருநாவுக்கரசுதுணை ஆணையாளர்சென்னை பெருநகர காவல்துறை thirunavukkarasuips@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement