Advertisement

நடுங்கவில்லையாம் ப.சிதம்பரம்!

Share

டாக்டர் இரா.அசோகன், சென்னையி லிருந்து எழுதுகிறார்: 'மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களில் இருந்து, ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்திற்கு, பணபரிமாற்றம் நடந்துள்ளது; அதில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம்' என, 2008ல், மத்திய நிதித்துறை புலனாய்வு அமைப்பு சந்தேகித்தது.

இதுகுறித்து, அமலாக்கத்துறை, மற்றும் சி.பி.ஐ., விசாரணை நடத்தின. சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், சிதம்பரத்தை கைது செய்து, விசாரணை கைதியாக திஹார் சிறையில் அடைத்தனர். இன்னமும், ப.சிதம்பரம், 'தான் நேர்மையானவர்' என்றும், 'பா.ஜ.,வின் அரசியல் பழி வாங்கும் படலம் தான், இது' என வாதாடுகிறார்.அவருக்கு எழுப்பும் சில கேள்விகள்...

* 'ஒருவர், தன் மகனோடு கட்சியை விட்டு வெளியேறினால், காங்கிரஸ் உருப்படும்' என, ௨௦௧௫ல், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்து இருந்தார்; இது, சிதம்பரத்தை தான் குறிக்கிறது. அப்போது, குற்றவுணர்வு அந்த நேரத்தில் சிதம்பரத்திற்கு ஏற்படவில்லையா...

* கடந்த, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், 'முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்ட பிச்சையால், சிதம்பரம் ஒரு மோசடி எம்.பி.,யானார்' என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறிய போது, சிதம்பரம் கூனிக் குறுகாதது ஏன்?

* சில மாதங்களுக்கு முன், 'இந்திய நாட்டிற்கே, சிதம்பரம் பாரமாக உள்ளார்' என, முதல்வர் இ.பி.எஸ்.,கூறிய போது, சிதம்பரம் உடலில் ஏதேனும் உணர்வு வரவில்லையா?

* 'எம்.பி., என்பதற்காக சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க முடியாது. எல்லா முறை கேட்டிலும், சிதம்பரம் தான், 'கிங் பின்'னாக இருக்கிறார். ஆகவே முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்கிறேன்' என, தீர்ப்பளித்தார், டில்லி உயர்நீதிமன்ற நீதியாசர் சுனில் கவுர். அந்த தீர்ப்பு வந்த போது, சிதம்பரத்திற்கு உடல் நடுங்கவில்லையா...

எண்ணற்ற குற்ற உணர்வுகளை, தன் முதுகில் சுமந்து, எந்த குற்றவுணர்வும் ஏற்படாதது போல், நல்லகுடி நாயணம் போல், வேஷத்தோடு நாடகமாடுகிறார் சிதம்பரம். 'யோக்கியன் வருகிறான்; செம்பை எடுத்து உள்ளே வை' என, கிராமங்களில் ஒரு சொலவடை கூறுவர். ஒருவரை ஒரு நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும், எல்லா நாளும் ஏமாற்ற முடியாது என்பதை, சிதம்பரம் உணர வேண்டும்!


***

மதிய உணவில் ஒரே வகையான மாற்றம் வேண்டாம்!வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: பள்ளிகளில், மதிய வேளையில் வழங்கப்படும் உணவு வகைகளில் மாற்றம் ஏற்படுத்த, தமிழக அரசு விரும்புகிறது. எவ்வகையான மாற்றம் தேவை என்பதை மாணவர்களிடம் கருத்து கேட்பும் ஆரம்பமாகியுள்ளது; தனித்தனியே கருத்து கேட்பதும், வரவேற்கத்தக்கது.

தமிழக அரசின் சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பல்வேறு வகை கலவை சாதங்கள், சாப்பாடு, தினமும் முட்டை, கொண்டைக் கடலை, பாசிப்பயறு என வகை வகையாக வழங்கப்படுகின்றன. விதவிதமான ருசிகளில் உணவு வழங்கப்பட்ட போதிலும், நகர், கிராமப் பகுதி பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை, பெரும்பாலனோர் விரும்புவதில்லை. கிராமப் பகுதி, நகர்பகுதி மாணவர்களிடம், உணவு ரசனையில் மாற்றம் இருக்கிறது. அதே போல, பள்ளிக்கு பள்ளி, மாணவர்களின் வாழிடம், சூழல் ஆகியவற்றுக்கு தக்கபடியும் விருப்பங்கள் இருக்கின்றன.

ஒட்டு மொத்தமாக, மாநிலம் முழுவதும், ஒரே மாதிரியான உணவு வகைகளை, வழங்கும் முறை உள்ளது; இதை மாற்ற வேண்டும். மாவட்டம், ஒன்றியம், சம்பந்தப்பட்ட பள்ளி என்ற அளவில் மாற்றங்கள், விருப்பங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். விரும்பாத உணவு வகைகளை மாணவர்களிடம் திணிக்கக் கூடாது. சத்துணவு திட்டத்திற்கு, ஒவ்வொரு மாணவனுக்கும் வழங்கப்படும் சமையல் பொருட்களுக்கான கட்டணத்தை கூட்டி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டாக கிடப்பில் உள்ளது. சத்துணவு பணியாளர்களும், சலிக்காமல், ஆண்டுக்கு அதிக அளவில் போராட்டங்களை நடத்தி வருவதையும் பார்க்க முடிகிறது.

ஒன்றியத்தில், சில இடங்களில் மட்டும் சமையலறை அமைத்து, தரமான முறையில், சத்தாக சரியான அளவில், சுகாதாரமாக வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகக்குறைவாக மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு, உணவு பரிமாற ஒருவர் மட்டும் போதும். மற்றவர்களுக்கு, வட்டார அளவிலான உணவு தயாரிப்புக் கூடங்கள் வினியோகம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாநிலம் முழுவதும், மதிய உணவில், ஒரே வகையான மாற்றம் வேண்டாம்!


****

சபரிமலையில் இனி சர்ச்சை வேண்டாம்!ந.தேவதாஸ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயல்பட வேண்டியது, ஒரு மாநில அரசின் தலையாய கடமை. அதே நேரத்தில், தனக்கு ஓட்டளித்து மாநில முதல்வராக்கிய மக்களுக்கு, முதல் மரியாதை அளிக்க வேண்டிய பொறுப்பு, ஒரு மாநில முதல்வரின், முதல் கடமை என்பதையும் மறக்கக் கூடாது.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, தற்போது, முள்ளில் விழுந்த சேலையை, கவனமாக எடுக்க வேண்டிய கால கட்டம், இது. 'சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம்' என, கடந்தாண்டில், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பால், கடந்த ஆண்டு, சபரிமலையே போர்க்களமானது; காலங்காலமாக பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள், பல இன்னல்களுக்கு ஆளாகினர். ரெஹனா பாத்திமா, கவிதா போன்ற பெண்களால், சபரிமலையில் கலவரம் ஏற்பட்டது. நடப்பாண்டில், அதுபோன்று, எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல், பக்தர்களின் சுவாமி தரிசனத்திற்கு, கேரள அரசு வழி வகுக்க வேண்டும்.

'சபரிமலை விவகாரம், அடிப்படை உரிமை சார்ந்தது. சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து நிறைவேற்ற வேண்டியது, மாநில அரசின் கடமை. ஆனால், அதை எதிர்த்து, கேரள அரசு சட்டம் இயற்ற முடியாது' என, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். நம் நாட்டிலுள்ள, ஒவ்வொரு கோவில்களும், சில குறிப்பிட்ட ஆகம விதிகள், தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இதில், அரசோ, நீதிமன்றமோ தலையிட்டால், பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும். இரண்டும் தலையிடாமல் இருப்பதே சிறந்த வழி முறை. இதற்கு எதிராக செயல்பட்டால், கேரளாவில், அடுத்து நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், மக்கள் தீர்ப்பு, மகேசன் தீர்ப்பாகி விடும்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement