Advertisement

'டவுட்' தனபாலு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: உள்ளாட்சி தேர்தல் இன்னமும் முறைப்படி அறிவிக்கப்படவில்லை. எனினும், கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரை அறிய, விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட உள்ளன. 14 முதல், 20 வரை, அந்தந்த மாவட்ட தலைநகரங்களில், விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

'டவுட்' தனபாலு: விருப்ப மனுக்கள், இலவசமாக வழங்கப்படுவது போல கூறியுள்ளீர்கள். ஒவ்வொரு மனுவும், பதவியைப் பொருத்து, 2,000 முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என, இப்போதே கட்சியினர் பேசிக் கொள்கின்றனர்... அப்படிப் பார்த்தால், சில கோடிகளை இதன் மூலம் திரட்ட, நீங்கள் திட்டமிட்டுள்ளது தெரிகிறது. கடந்த முறை, உள்ளாட்சி தேர்தல் ரத்தானதால், விருப்ப மனு அளித்தோர், வேட்பாளர்களாக விண்ணப்பித்தோர், செலுத்திய கட்டணங்களை திருப்பிக் கொடுத்து விட்டீர்களா என்ற, 'டவுட்' இப்போது ஏற்படுகிறது.

***


இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவருக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனக் கூறியது, நடிகர் ரஜினி தானே... அவர் எந்த கட்சியின் தலைவர்? அவர் ஒரு நடிகர். அரசியல் தலைவர்கள் யாராவது, இது போல கூறியுள்ளனரா? அரசியலுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கூறுவதை பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

'டவுட்' தனபாலு: நீங்க சொல்வதைப் பார்த்தால், அரசியல் தலைவர்கள் கருத்துக்கு மட்டும் தான் பதில் சொல்வீர்கள் போல இருக்கிறது. எனினும், ரஜினிக்கு இன்னும், 'செமை'யா பதில் அளித்திருக்கலாம் என்பது என் கருத்து. 'அந்த வெற்றிடத்தை நிரப்பும் தகுதி, அவருக்கு இல்லை' என, நீங்கள் சொல்லி இருந்தால், அடுத்த முறை, வெற்றிடப் பேச்சை அவர் பேச மாட்டார்; வெற்றிடம் இல்லை என்பது, 'டவுட்' இல்லாமல் அவருக்கு புரிந்திருக்கும்.


***

பத்திரிகை செய்தி: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு, 'சர்வதேச வளரும் நட்சத்திரம்' என்ற விருது, சிகாகோ நகரில், பல இன கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்டது.

'டவுட்' தனபாலு: விருது வழங்கிய பல இன கூட்டமைப்புக்கு, பன்னீர் செல்வம், பல மாதங்கள் தனியாக, 'தர்மயுத்தம்' நடத்தியவர் என்பது தெரியாதோ... அவரைப் போய், வளரும் நட்சத்திரம் என, குழந்தை நட்சத்திர விருது வழங்குவது போல கொடுத்துள்ளனர். அந்த குழுவில், தமிழக அரசியல் தலைவர்கள் இருந்திருந்தால், 'தமிழகத்தின் தலைமகன்; தர்மயுத்தம் நடத்திய தலைவன்; தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்' என, விருது வழங்க சிபாரிசு செய்திருப்பரோ என்ற, 'டவுட்' சரி தானா?

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • S.V.SRINIVASAN - Chennai,இந்தியா

    இவர் தமிழ் நாட்டிற்கு தொழில் முதலீடு பெற்று வர சென்றாரா அல்லது இவருக்கு விருதுகள் வாங்கி வர சென்றாரா? விருதுகளை தபால் மூலம் அனுப்ப சொல்லி பெற்றிருக்கலாமே. செலாவவுது மிஞ்சியிருக்கும். மக்கள் வரி பணத்தை வாரி இறைக்கிறோம் என்ற எண்ணமே இல்லை.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    தர்ம யுத்த நாயகன் சிகாகோவில் விருது வாங்குகிறாராம் கட்சிக்கு எதிராக வாக்களித்துவிட்டு , பிறகு ஒட்டிக்கொண்டு, முக்கியத்துவத்தை இழந்து, கொள்கையேதுமின்றி, மோடியை சுற்றிவந்து மகனை எம் பி ஆக்கி, இன்றும் அமைச்சராக்க குழையடிக்கிறவருக்கு எந்த நட்சத்திர விருது கொடுக்கலாம்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement