Advertisement

தமிழக அரசின் முழு கவனம் அவசியம் தேவை!

Share

பா.சக்திவேல், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், எதிர்கால மனித வளத்தையே, ஆட்சியாளர்கள் கேள்விக்குறி ஆக்கியுள்ளனர். தெருவுக்கு தெரு, 'டாஸ்மாக்' மதுக்கடைகள் இயங்குகின்றன. மது விற்பனை ஊக்குவிப்பால், நிறைய வாலிபர்களும், சிறார்களும், பொதுமக்களும், மது அருந்துவதால் சீரழிகின்றனர்;

இது பற்றி, அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை. 'இடைத் தேர்தல் வெற்றி, அ.தி.மு.க., அரசின் பொற்கால ஆட்சிக்கு கிடைத்த வெற்றி' என, முதல்வர் இ.பி.எஸ்.,சும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சும் வெற்றிக் களிப்பில், வீர முழக்கம் இட்டு வருகின்றனர். ஆனால், தமிழகத்தின் நிலை உண்மையாகவே அப்படி இருந்தால் மகிழ்ச்சி; ஆனால், நிலைமை...

தமிழகம் முழுவதும், போதைப் பொருட்கள் பெருக்கத்தால், தங்கு தடையின்றி, அவை கிடைப்பதை, ஊடகத்தில் வரும் பல செய்திகளும், சம்பவங்களும் உறுதிப் படுத்துகின்றன. மது, கஞ்சா பழக்கத்தால் போதைக்கு அடிமையாகி, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பாதை மாறி செல்கின்றனர். போதை தலைக்கேறியதால், கஞ்சா ஆசாமிகளால், பலர் அவ்வப்போது தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். நிறைய கொலைச் சம்பவங்களும் நிகழ்ந்தேறி வருவது, பொதுமக்களிடம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களான, இளைய சமூகம் தறிகெட்டு சிக்கிச் சீரழிந்து விட்டால், நாட்டின் எதிர்காலமும், வாழ்வியல் அடிப்படையும், கேள்விக் குறியாகி விடும்; இந்த அக்கறை, அரசுக்கு இருக்க வேண்டாமா...

பெற்றோரின் வழிகாட்டல்களையும் மீறி, ஒரு பிள்ளையை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல நிறைய காரணிகள், இன்று உருவாகி விட்டன. இதையெல்லாம், கவனத்தில் எடுத்து, போதைப் பொருள்களின் நடமாட்டத்தை, அரசின் இரும்புக்கரத்தை பயன்படுத்தி ஒடுக்க வேண்டும். வருங்காலச் சந்ததியினர், ஒழுக்கத்தோடு வளர, உகந்த சூழ்நிலைகளை உருவாக்க அரசின் ஒத்துழைப்பு, இத்தருணத்தில் அவசியம் தேவைப்படுகிறது!

பொறுப்புணர்ந்து தண்ணீரை சேமியுங்கள்!
அ.ம.அருண்ராஜ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: மழை நீர் சேமிப்பு திட்டத்தை, 2001 - 2002ல், சிறப்பாக செயல்படுத்திய மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவை, உலக நாடுகள், உலக வங்கி மற்றும் ஐ.நா.,சபை பாராட்டியது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய், 'இந்த திட்டத்தை, எல்லா மாநிலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். அப்போது, தன் பங்கிற்கு, 'மழை நீரை சேமிக்கவில்லை என்றால், வருங்காலங்களில் ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, வீட்டிற்கு வீடு என, தண்ணீருக்காக போராட நேரிடும்' என, எச்சரித்தார், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம்.

தற்போது, பிரதமர் மோடி முதல், அவரது அமைச்சர் சகாக்களும், ஒரு பைசா கூட ஊழலில் ஈடுபடாமல், இந்தியர்கள் வளர்ச்சி உயர, எல்லாரும் மிகவும் கடினமாக உழைக்கின்றனர். அந்த முனைப்புடன், தண்ணீரை சேமிப்பதற்கான, தங்கள் பொறுப்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், சென்னை, பெங்களூரு ஆகிய பெரு நகரங்கள், தென்ஆப்ரிக்காவின் கேப் டவுன் நகரம் போல, கடுமையாக வறட்சியால் பாதிக்கும். தண்ணீரை சேமிக்க வேண்டியது, மக்களின் பொறுப்பு. தொழில் துறையினருக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது. இயற்கை வளங்களின் பாதுகாவலர்களாக மக்கள் மாறினால், எல்லாம் சரியாகி விடும்.

எப்போதுமே, தமிழர்கள் நலன் காக்கும் காவலராக திகழும், 'தினமலர்' நாளிதழ் விளங்குகிறது. தக்க நேரத்தில் தமிழர்களை தட்டி எழுப்பும் வண்ணம், 'களமிறங்குவோம், நமக்கு நாமே' என்ற ஊக்கத்தின் வாயிலாக களம் இறங்கியது. தன்னார்வ இயக்கங்கள், ஆர்வலர்களால், எண்ணற்ற ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களை துார் வாரி, தமிழர்களின் வயிற்றில் பால் வார்த்தது. 'தினமலர்' நாளிதழ் பணியை பார்த்து, பொதுப்பணி துறையும், போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

தமிழர்கள், எப்போதும் எள் என்றால், எண்ணெயாக இருப்பர். பொறுப்புகளை நன்கு உணர்ந்து, இப்போதே தண்ணீரை சேமிக்க, எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டால், வருங்கால சந்ததியினர் வாழ்வாங்கு வாழ்வர்!

சிவசேனாவிற்கு ஒரே வழி, பா.ஜ.,வே!
வி.எம்.சந்தோஷம், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: மஹாராஷ்டிரா மாநிலத்தில், ஆட்சி அமைக்க, பா.ஜ.,விற்கு அழைப்பு விடுத்தார், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி. அதை, பா.ஜ., ஏற்க மறுத்தது. அடுத்தகட்டமாக, சிவசேனாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார், கவர்னர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, 146 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. இதில், பா.ஜ., தனிப் பெரும் கட்சியாக, 105 இடங்களை வென்றுள்ளது. முதல்வர் பதவிக்காக முரண்டு பிடிக்கும், சிவசேனா கட்சிக்கு வெறும், 56 இடங்களே கிடைத்துள்ளன. தார்மீக அடிப்படையில், சிவசேனாவுக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், தேர்தல் ஒப்பந்தத்தில் இரு கட்சிகளும் வெற்றி பெற்றால், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை வகிக்கலாம் என, போட்டதால், இப்போது சிக்கல் எழுகிறது. ஆட்சியில், அமைச்சர் பதவிகளில், 50 சதவீதம் கேட்பதை கூட ஏற்கலாம். ஆனால், இரண்டரை ஆண்டு கால சுழற்சி முறையில், முதல்வர் பதவி கோருவதில், எந்த நியாயமும் இல்லை.

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இன்றி, பதவி பிடிக்கும் ஆசையிலேயே காலம் ஓடி விடும். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன், சிவசேனா ஆட்சி அமைக்க முயல்வதாக, மஹாராஷ்டிராவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இவர்களை நம்பி, சிவசேனா ஆட்சி அமைத்தால், இவர்கள் ஆட்சியின் நோக்கம் எக்காலத்திலும் நிறைவேறாது.

எந்த திட்டத்திலும் எதிர்ப்பை கிளப்புவார், சரத்பவார்; நடுவழியில், குழியை பறிக்கும் காங்கிரஸ்! கடைசியில், கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சிக்கு ஏற்பட்ட கதி தான் சிவசேனாவுக்கும் ஏற்படும். அது தெரிந்தும், அவர்களுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப் போவது, சிவசேனாவின் பதவி வெறி மட்டுமே காரணம்.

அதை விட சண்டைக்காரனான, பா.ஜ., வுடன் கூட்டணி அமைத்து, துணை முதல்வர் மற்றும் சில அமைச்சர்கள் பதவியை பெறுவது மட்டுமே, சிவசேனாவின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும், அரசியல் யுக்தி. தேசியவாத காங்கிரஸ் தயவால், சிவசேனா ஆட்சி அமைக்க முடியாது என்பதற்கு, காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டுள்ளது. 'ஒருபோதும், சிவசேனாவிற்கு ஆதரவு தர மாட்டோம்' என, மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வேறு வழியின்றி, சிவசேனா, பாஜ.,விடம் சரணாகதி அடைவது தான் ஒரே வழி!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    மது விற்பனையைக் குறைப்பதா? சான்ஸே இல்லை தீபாவளிக்கு 355 கோடி டார்கெட் வைத்து, 450 எட்டிய ‘சாதனை’ அரசிடம் இதை எதிர்பார்க்கலாமா ? இனி பீடிங் பாட்டிலில் கைக்குழந்தைகளுக்கு ‘ஊற்றி’ கொடுக்கச் சொல்ல வேண்டியதுதான் பாக்கி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement