Advertisement

திருநாவுக்கரசரால் அ.தி.மு.க.,வில் புகைச்சல்!

Share

''ரஜினி முடிவால, ரசிகர்கள் ஏமாந்துட்டாளாம் ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.

''இது வழக்கம் தானே... இருந்தாலும், மேல சொல்லும் வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும், உள்ளாட்சி தேர்தல்ல போட்டியிட விரும்புறா... சென்னையில குடிநீர் பஞ்சம் தீர்க்க, மன்ற நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்தா... அவாளுக்கு, மக்கள் மத்தியில் ஆதரவு கிடைச்சது ஓய்...

''அங்க மட்டுமில்ல, மாநிலம் முழுவதுமே, ரஜினி ரசிகர்களுக்கு, மக்கள்கிட்ட வரவேற்பு இருக்கு... அதனால, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடணும்ன்னு, நிறைய பேர் ஆசைப்பட்டா ஓய்...

''இந்த நேரத்துல, 'உள்ளாட்சி தேர்தல்ல போட்டியிடற எண்ணம் இல்லை'ன்னு, ரஜினி அறிவிச்சிட்டார்... அதனால, தேர்தலில் போட்டியிட நினைச்ச, மன்ற நிர்வாகிகள் பலரும் ஏமாந்து போயிட்டா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''அதிகாரிகள், ஒத்துழையாமை இயக்கம் நடத்துறாங்கன்னு, ஆளுங்கட்சி மேலிடம் கடுப்புல இருக்குதாம் பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''உள்ளாட்சித் தேர்தல்ல, 60 சதவீதம் வெற்றியை, ஆளுங்கட்சி, 'டார்கெட்' பண்ணியிருக்காம்... சென்னை மாநகராட்சியை, தி.மு.க., கைப்பற்றக் கூடாதுன்னு, பல்வேறு வியூகம் வகுத்துட்டு இருக்காங்களாம் பா...

''அதுல, உள்ளாட்சித் துறை சார்புல, 'எம் வீதி, உன் கழிப்பறை அல்ல' என்ற கோஷத்தை மையப்படுத்தி, சென்னை மாநகராட்சியை சுத்தம் செய்றதுக்கு, விழிப்புணர்வு ஏற்பாடு செஞ்சுட்டு இருக்காங்க பா...

''ஆனா, எதிர்க்கட்சிக்கு ஆதரவா இருக்குற சுகாதார ஆய்வாளர்கள், இத்திட்டத்தை முடக்குற எண்ணத்துல, ஒத்துழைக்காம இருக்காங்களாம்... அதனால அவங்க மேல, ஆளுங்கட்சி கடுப்புல இருக்காம் பா...'' என, விளக்கினார் அன்வர்பாய்.

''திருச்சி லோக்சபா தேர்தல்ல, எதிர்க்கட்சிக்கு ஆதரவு கொடுத்து, கூட்டணி கட்சி வேட்பாளரை, உள்ளூர் அமைச்சர் தோற்கடிச்ச விஷயம் வெளிச்சத்துக்கு வந்துருக்குன்னு பேசிக்கிறாங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.

''திருச்சியில, அ.தி.மு.க., கூட்டணி சார்பில், தே.மு.தி.க., வைச் சேர்ந்த இளங்கோவனும், தி.மு.க., கூட்டணியில, காங்கிரஸ் வேட்பாளரா, திருநாவுக்கரசரும் போட்டியிட்டாங்க... திருநாவுக்கரசு ஜெயிச்சவுடனே, அ.தி.மு.க.,வினருக்கும் நன்றி சொன்னாருங்க...

''திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் இருக்குற, திருநாவுக்கரசரின் சிபாரிசுல, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, மாவட்ட நிர்வாகிகள் ரெண்டு பேருக்கு, விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவி கொடுத்துருக்காங்க...

''திருநாவுக்கரசர் ஜெயிக்கறதுக்கு, உள்ளூர் அமைச்சர் தரப்பு, மறைமுகமாக வேலை பார்த்ததுக்கு பரிசு தான், அந்த பதவிகள்ன்னு, அ.தி.மு.க., வட்டாரத்துல பேசிக்கிறாங்க... இந்த விஷயம் வெளியே கசிஞ்சு, ஆளுங்கட்சி கூட்டணிக்குள்ள புகைச்சல ஏற்படுத்தியிருக்குங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்...'' என, 'கமென்ட்' அடித்தபடியே இடத்தை காலி செய்தார், அண்ணாச்சி. மற்றவர்களும் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கட்சியும், அமைச்சர்களும் எவ்வளவு தூரம் தலைமைக்கு கட்டுப்பட்டு, விசுவாசமாக இருக்கிறார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது இன்னும் உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை உள்குத்து, காலை வாருதல் எல்லாம் நடக்குமோ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement