Advertisement

நவ., 9 ஒரு நன்னாள்!

Share

அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடமாக நீண்ட கால போராட்டத்திற்கு காரணமாக இருந்த, 'ராம ஜென்ம பூமி' என்ற புனித நிலம், அவரது கோவிலாக உருவாக வழிவகுத்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, வரலாற்றில், நவ.,9, 2019, சனிக்கிழமையை, நன்னாளாக மாற்றி விட்டது.

அதே நாளில், பாக்., - இந்திய எல்லையில் அமைந்த, சீக்கிய மகான் குருநானக் குருத்துவாரா வழித்தடம், குர்தார்பூரில் துவக்கப்பட்டதும், நம் பெருமைக்கு அடையாளமாகும்.அயோத்தி ராமஜென்ம பூமியில், பாபர் மசூதி இருந்ததும், அது சில ஆண்டுகளுக்கு முன் தகர்க்கப்பட்டதும் பழைய சம்பவம். இவற்றில் பாபர் மசூதி என்பதற்கு, ஆவணங்கள் மற்றும் நில உடைமைக்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், ராமர் பிறந்த இடம் என்பது நம்பிக்கையின் உருவில் வந்தது என்ற கருத்தையும் வைத்து அரசியல் ஆதாயம் காணும் விஷயத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

அதிலும், 'ராம் லல்லா' எனப்படும் 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று பகுதிகளாகக் கருதி, முன்பு அலகாபாத் ஐகோர்ட் அளித்த 2010ம் ஆண்டு அளித்த தீர்ப்பை ரத்து செய்த, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து உறுப்பினர் பெஞ்ச், ராமஜென்ம பூமி இடத்தில் கோவில் கட்ட டிரஸ்ட் அமைக்க உத்தரவிட்டிருக்கிறது.இந்த வழக்கு, 70 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தாலும், தற்போது, தொடர் விசாரணையை முடித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் அளித்த விளக்கத் தீர்ப்பு, எதிர்காலத்தில் மத சம்பந்தப்பட்ட இடங்களில் ஏற்படும் சர்ச்சைகளுக்கு, வழிகாட்டியாக அமையும். இது, ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வில், அடுத்த தலைமை நீதிபதியாகப் போகும் பாப்டேயும் சேர்ந்து அளித்த ஒருமித்த கருத்தாகும். தனிநபர் சொத்து விஷயத்தில் சொந்தக்காரர் சம்பந்தமின்றி உள்ள ஒரு சொத்தை மற்றொருவர் தொடர்ந்து வைத்திருந்து அனுபவித்தார் என்றால், அந்த சொந்தக்காரர் உரிமையை இழக்கிறார் என்பதுடன், இந்தக் கருத்தை இணைப்பது சரியல்ல.

ஏனெனில், காலியாக இருந்த இடத்தில் மசூதி எழவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.'வரலாற்றில் நிகழ்ந்த தவறுகளுக்கு, போராட்டம் மூலம், சட்டத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை' என்ற கருத்து நிச்சயம் இந்திய இறையாண்மையை போற்றும் உணர்வாகக் கருதலாம்.மற்றொரு அம்சமாக, ஹிந்துக்கள் அமைப்பு சார்பில் வாதிட்ட தமிழகத்தின் மூத்த சட்ட நிபுணர் பராசரன், 90 வயதைத் தாண்டிய போதும், அவர் ராமபிரான் பெருமையைப் போற்றும் விதத்தில், வழக்கு முடியும் வரை, நின்று கொண்டே வாதாடியிருப்பதாக, செய்திகள் கூறுகின்றன.அவருடன் இணைந்து வாதாடிய மற்றொரு வழக்கறிஞர், காலணி இன்றி வாதாடினார் என்பது, இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கானோர், ராமபிரானை, 'புருஷோத்தமன்' என்று போற்றிடும் அடிப்படை நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

மக்களின் ஆதாரமான அந்த நம்பிக்கையை, இத்தீர்ப்பு விளக்கிய விதம் சிறப்பானது.அதே சமயம் இந்த இடத்திற்கு வெளியே, அயோத்தி நகரில் மசூதி ஒன்று உருவாக, 5 ஏக்கர் நிலத்தை, முஸ்லிம்களுக்கு மத்திய அல்லது மாநில அரசு தர வேண்டும் என்று கூறியிருப்பது, இந்த நாட்டின் நல்லிணக்க அடிப்படை உணர்வின் அடையாளம். சரயூ என்ற புண்ணிய நதி பாயும் இங்கே இனி, பெரிய மசூதி உருவாவதில், ஐதராபாத் எம்.பி., ஒவைசிக்கு பிடிக்காமல் இருப்பது புதிதல்ல.நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் பாக்., மேற்கொண்ட மதவழி அரசால் பாதிக்கப்பட மக்களில் பலர், இன்று உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அந்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறையில் வாழும் முஸ்லிம்கள், இந்தியாவில் உள்ள அடிப்படை ஜனநாயகம் , மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை கண்டு, இத்தீர்ப்பை ஏற்றிருப்பது, இந்த மண்ணின் கலாசார சிறப்பு.ஆகவே இன்றைய இந்தியாவில் அச்சம் அல்லது மனக்கசப்பு அல்லது எதிர்மறையான எண்ணங்கள் எதற்கு என்ற பிரதமர் மோடியின் கருத்து, சட்டத்தை மதிப்பைக் காட்டும் கருத்தாகும்.

காங்கிரஸ் கட்சி அயோத்தி தீர்ப்பை ஆதரித்தது, அக்கட்சி காந்தியடிகள் கூறிய, 'ரகுபதி ராகவ ராஜாராம்... ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்று பாடிய உணர்வைக் காட்டும்.மத்தியில் பிரதமர் மோடி அரசுக்கும், உ.பி., முதல்வர் ஆதித்யநாத் அரசுக்கும், மக்கள் அளித்த அமோக ஆதரவுக்கு எடுத்துக்காட்டாக, தற்போது அமைதி காப்பதிலும், அரசியல் ஆதாயம் தேடாமல் நடந்து கொள்வதும், வரவேற்கத் தக்கது.மத்திய அரசு விரைவில் அமைக்க உள்ள, ராம ஜென்ம பூமி டிரஸ்டில், இது காறும் இந்த விவகாரத்தை நாட்டில் உள்ள மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவே களமிறங்கிய விஸ்வ இந்து பரிஷத், ஏற்கனவே ராமர் பெயர் பொறித்த செங்கல்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களுடன் பணியை நிறைவேற்றக் காத்திருக்கிறது.ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங் பரிவார் அமைப்புகள், இத்தீர்ப்பு வருவதை ஆவலுடன் எதிர்பார்த்து மவுனம் காத்தது, மோடி அரசின் ஆளுமைக்கான அடையாளமாகும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement