Advertisement

தி.மு.க.,வில் மாற்றத்தை ஏற்படுத்தணும்!

Share

எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கடந்த முறை, தி.மு.க., ஆட்சியில், அடாவடித்தனம், நில ஆக்கிரமிப்பு, தலைமைக்கு கட்டுப்படாத அமைச்சர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், தங்கள் பகுதியில் தங்களுக்கென தனி சாம்ராஜ்யம் நடத்தினர்.

தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, பல்வேறு வழிகளில் மக்களுக்கு தொல்லைகள் கொடுத்தனர். தி.மு.க.,வில், ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் உள்ளோர் மட்டுமே, காலம் காலமாக அமைச்சர்களாக, பொறுப்பாளர்களாக வர முடியும்; தொண்டர்கள் எவ்வித பதவியையும், கட்சியில் பெற முடியாது. கட்சிக்காக, எவ்விதத்திலும் உழைக்காத ரத்த சம்பந்தமுள்ள உதயநிதி போன்றோர் மட்டுமே, பதவியை பெற முடியும். ஆனால், அ.தி.மு.க.,வில் உழைப்போர், எவர் வேண்டுமானாலும் பதவியை பெற முடியும்.

அடிமட்ட தொண்டன் முதற்கொண்டு, முன்னேற்றம் பெற வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென, அ.தி.மு.க., தலைமை கழகத்திலிருந்து வாய்மொழி உத்தரவு பிறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றது. இதை வைத்து, 'சட்டசபை பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி விடலாம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கனவு கண்டு வருகிறார்; இது, வெறும் பகல் கனவு!

பா.ஜ.,விற்கு எதிராக தமிழக மக்கள் ஓட்டளித்ததால், லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற முடிந்தது. ஆனால், தமிழகத்தை, தி.மு.க., ஆள, மக்கள் விரும்பவில்லை. அதனால் தான், விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதியிலும், தி.மு.க., கூட்டணி படுதோல்வி அடைந்தது. ஜெயலலிதா மறைந்த இந்த நேரத்தில், அ.தி.மு.க., மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வரவுள்ள உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தல்களிலும், அ.தி.மு.க., மிகப் பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. இன்று, அ.தி.மு.க., அமைச்சர்களை எளிதில் அணுகி, தங்கள் குறைகளை மக்கள் கூறலாம். இன்று நடக்கும் ஆட்சி, மக்களின் ஆட்சியாக உள்ளது. தி.மு.க.,வில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால், மாபெரும் வெற்றி பெற முடியாது; அது, வெறும் கனவாகி விடும்!

தமிழகத்தில் நடப்பது நல்ல தமாஷ்!
என்.சாணக்கியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாவட்ட நீதிபதி பதவிக்கு வைக்கப்பட்ட தேர்வில், வழக்கறிஞர்கள் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வில், சொற்ப நபர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதற்காக, இதற்கான தகுதி தேர்வுகளை நடத்தாமல், ஏழை ஆசிரியர்களையும், வழக்கறிஞர்களையும், அவர்கள் ஆசைப்படும் பணியில் நியமித்து விட முடியுமா... ஏழை மாணவர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., ஆக ஆசைப்படுகின்றனர் என்பதற்காக, அவர்களது ஆசையை பூர்த்தி செய்ய, குறைந்த மதிப்பெண் எடுத்தாலும், தேர்ச்சி பெற வைக்க முடியுமா... உயர் வகுப்பில், பிறந்த பாவப்பட்ட ஜென்மங்கள் நல்ல மதிப்பெண் எடுத்தாலும், சமூக நீதி என்ற பெயரால், இட ஒதுக்கீடு கொள்கையை காரணம் காட்டி, இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை;

இந்த கொடுமை தொடர்ந்து நடந்தபடியே உள்ளது. தமிழகத்தில், சமூக நீதி என்ற பெயரில், அநீதி நடக்கிறது. இந்தக் கொடுமையை தடுத்து நிறுத்த நீதிமன்றம் முன் வருமா... இட ஒதுக்கீடு என்ற பெயரில், வாழைப்பழச் சோம்பேறிகளுக்கு தான், சகல வசதி வாய்ப்புகள், வாரி வாரி வழங்கும் அவலம் தொடர்கிறது.

இந்த லட்சணத்தில், தகுதியில்லாதவர்களை எல்லாம் டாக்டர்களாக உருவாக்கி, அவர்களை, 'மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனைகளில் நியமித்து, எப்படி நாட்டை திறம்பட செயல்பட வைக்க முடியும்? 'நீட்' தேர்வில், கணிசமான மதிப்பெண் எடுத்தும், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர பணம் இல்லாமல் தவிக்கும் ஏழைகளின் நிலை தான் உண்மையிலேயே பரிதாபமானது. இவர்களுக்கு, அரசு ஆதரவு தர வேண்டும் என, நீதிபதி அறிவுரை கூறியிருந்தால், இருகரம் கூப்பி வரவேற்று இருக்க முடியும். 'ஏழை மாணவர்கள், 'நீட்' தேர்வில் வெற்றி பெற, 'கோச்சிங்' சென்டர்களில் சேர்ந்து படிக்க வழி இல்லை.

எனவே, 'நீட்' தேர்வை, மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற நீதிபதி ஆலோசனை வழங்கி இருக்கிறார்; இவரது ஆலோசனையை உச்ச நீதிமன்றம் ஏற்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் தான், ஏழை மாணவர்கள், 'நீட்' தேர்வால் பாதிக்கப் பட்டிருப்பது போலவும், மற்ற மாநிலங்களில், ஏழை மாணவர்கள், 'நீட்' தேர்வால் பாதிக்கப்படாமல் எளிதில் தேர்ச்சி செய்து, டாக்டராகி விடுவது போலவும் நினைப்பது, நல்ல தமாஷ்!


கீழடி வரலாறு அறிய அமைச்சர் உதவுவாரா?
சோ.ஆதங்கன், திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: கீழடி அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள், மதுரையில் உள்ள உலகத் தமிழ் சங்கத்தின், முதல் மாடியில், காண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

கீழடி அகழாய்வு, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. கீழடி மற்றும் மதுரைக்குச் சென்று பார்வையிடும் வாய்ப்பு, பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கிடைத்திருக்காது. மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியும் தற்காலிகமானது. மதுரையில், 6,000க்கும் மேற்பட்ட பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அகழாய்வுப்பணி நடைபெற்ற போதே, ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், கட்சி பிரமுகர்கள் பார்த்து வந்தனர். கீழடியில் தொல்லியல் துறை சார்பில், ஐந்து கட்ட அகழாய்வுப் பணி முடிந்து உள்ளது.

2,600 ஆண்டுகளுக்கு முன், கீழடியில் நகர நாகரிகத்துடன் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இத்தருணத்தில், 'சிவகங்கை மாவட்டம், கீழடியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த சிவகங்கை, கொந்தகை கிராமத்தில், 12 கோடி ரூபாய் செலவில், புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்' என, தமிழக அரசின் அறிவிப்பு, வரவேற்பை பெற்றுள்ளது. கீழடி குறித்து விரிவாக மாணவர்கள் தெரிந்துகொள்ள, பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, 'சிடி' வழங்க, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பாண்டியராஜன், ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயச்சந்திரன் ஆகியோர் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். தமிழர்களின் பெருமையை, புதிய வரலாற்றை, அகழாய்வின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிய வேண்டும். இது சார்ந்த ஆய்வில் மாணவர்கள் ஈடுபட துாண்டுதலாக அமையும்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    துரை முருகன் பொன்முடி பாரதி போன்ற பழம் தின்னு கோட்டைபோட்டவங்க இருக்கும்போது திமுகவில் அடிமட்ட தொண்டன் பதவிக்கெல்லாம் ஆசைப்பட முடியாது கூடவும் கூடாது

  • Charles - Burnaby,கனடா

    திமுகவின் பண பலம் தான்அதன் பலவீனம். பணத்தால் மக்களை வெல்ல முடியாது. திருச்சியில் ஒரு பஸ்சில் அதிகாரிகள் திமுகவின் 5 5 கோடி பறிமுதல் செய்தார். மக்கள் குருடர்களா, எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்க.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement