Advertisement

'டவுட்' தனபாலு

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: தமிழக நலனுக்கான, எதிர்காலத்தையும் கருதி, தொலைநோக்குடன் பல திட்டங்களை, எங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், தி.மு.க.,வைச் சேர்ந்த, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், இந்த அரசு எதுவுமே செய்யவில்லை; ஆட்சி நடக்கிறதா, இல்லையா என, கேட்கிறார்.

'டவுட்' தனபாலு: ஆட்சி நடக்கிறதா, இல்லையா என கேள்வி கேட்பவர்களுக்கு, ஜெ., போல அதிரடி, 'பதில்' கொடுக்க, உங்களுக்குத் தெரியவில்லையோ என்ற, 'டவுட்' எனக்கு உள்ளது. எதிர்க்கட்சிகளின் கண்ணில் விரலை விட்டு, ஜெ., ஆட்டியது போல, உங்களுக்கு தைரியம் இல்லை என்பதை அவர்கள், 'டவுட்'டே இல்லாமல் தெரிந்து வைத்துள்ளதால் தான், ஆட்சி நடக்கிறதா என கேள்வி கேட்கின்றனரோ என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

தமிழக செய்தித்துறை அமைச்சர் ராஜு: மறைந்த முன்னாள் முதல்வர், ஜெ., ஆட்சி காலத்தில் தான், தமிழகத்தின் ஆன்றோர், சான்றோருக்கு, 69 மணி மண்டபங்கள், நான்கு நினைவுச் சின்னங்கள், நினைவுத்துாண் எழுப்பப்பட்டன. அவர் வழியில், முதல்வர், இ.பி.எஸ்.,சும், ஜெ.,க்கு நினைவிடம், ராமசாமி படையாச்சிக்கு, மணி மண்டபம் கட்டி வருகிறார்.

'டவுட்' தனபாலு: காமராஜர் முதல்வராக இருந்த போது கட்டிய அணைகள் தான், தமிழகத்தின் நீர் பாசனத்திற்கு இப்போதும் ஆதாரமாக உள்ளன. அதுபோல, சாதனைகளை படைத்துள்ளார் என சொல்ல முடியாமல், சிலைகள் திறந்தார்; மணி மண்டபம் கட்டினார் என்பது சரியா... ஜெ., போல தான், இப்போதைய முதல்வர் இ.பி.எஸ்.,சும் என சொல்கிறீர்களோ என்பதே என், 'டவுட்!'

அ.ம.மு.க., முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி: சசிகலாவின் அக்காள் மகன் தினகரனை நம்பி, அரசியலில் நான் ஏமாந்தது தான் அதிகம். அந்த கட்சியில் இருப்போருக்கு, உறுப்பினர் அட்டை கூட கிடையாது. தோல்விகள் தான் பரிசாக கிடைக்கும். அதனால், அவரின் கட்சியில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. வேறு வழியின்றி, அவரை எதிர்த்து அரசியல் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

'டவுட்' தனபாலு: உறுப்பினர் அட்டை கூட கட்சியினருக்கு வழங்கப்படவில்லை என்றால், தினகரன் நடத்தி வருவது, 'லெட்டர் பேடு' கட்சியா... இந்த உண்மை தெரியாமல், அ.தி.மு.க.,வில் பலர், அந்த கட்சிக்கு சென்று விட்டனரே... சரி, உறுப்பினர் அட்டை கூட கிடையாது என்பது, இரண்டு ஆண்டுகள் கழித்து தான், உங்களுக்கு தெரிய வந்ததா... 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அளவற்ற கருணையுடன் வருண பகவான் மழைக்கொடை அளித்தும், கர்நாடகாவில் உபரி நீர் வரத்தையும் நமக்கு அளித்தும் கிடைக்கும் விலைமதிப்பற்ற பரிசை, முக்கால் பாகம் கடலுக்கு அனுப்பியும், அணைகள் கட்டாமலும், ஏரி குளங்களை வகையாகத் தூர்வாராமலும் அலட்சியம் செய்துவிட்டு, சிலை, மணி மண்டபம் என்று அமைத்ததால் பொது மக்களுக்கும் விவசாயத்துக்கும் என்ன செய்தார்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement