Advertisement

பிரசாரத்துக்கு வாகனம் கேட்டு அடம் பிடிக்கும் வாரிசு

''அயோத்தி தீர்ப்பு வந்ததும், அனைத்து தரப்பு மக்களும், அமைதியா இருந்து, இந்தியராகி நாம், ஜனநாயகத்தை காப்பவர்கள்ன்னு நிரூபிச்சிட்டாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அன்வர் பாய்.

''சரியா சொன்னீங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''பிரசாரத்துக்கு, புது காரு வாங்கி தரச் சொல்லி, அடம் பிடிக்கறார் ஓய்...'' என, முதல் தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.

''யாரு வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தேர்தல் பிரசாரம் செய்யறதுக்கு, ரெண்டு வாகனங்களை வாங்கி வச்சிருக்கார்... அதுல ஒண்ண, அவரோட மனைவி பிரேமலதா, தன்னோட பிரசாரத்துக்கு எடுத்துண்டுட்டாங்க...

''இப்போ, அவரோட மூத்த மகன் விஜயபிரபாகரனும், அரசியல்ல குதிச்சிருக்கார்... விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாததால, அவரோட வாகனத்தை தான் பயன்படுத்திண்டிருந்தார் ஓய்...

''விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல்ல, விஜயகாந்த் பிரசாரம் செஞ்சார்... அதனால, வரப் போற உள்ளாட்சி தேர்தலுக்கும், அவர் பிரசாரம் செய்வார்ன்னு பேசிக்கறா ஓய்...

''அதனால, 'சேட்டிலைட் டிவி, பெட், டைனிங் டேபிள்' என, சகல வசதியோட, கட்சி நிதியில இருந்து, தனக்கு, புது பிரசார வாகனம் வேணும்ன்னு, விஜயபிரபாகரன் அடம்பிடிக்கறார் ஓய்...'' எனக் கூறி முடித்தார், குப்பண்ணா.

''பல்லாவரம் நகராட்சியில, யாரு கமிஷனருன்னு தெரியலையாம் பா...'' என, அடுத்த தகவலுக்கு சென்றார், அன்வர் பாய்.

''என்னன்னு, விவரமா சொல்லும் ஓய்...'' என, விசாரித்தார், குப்பண்ணா.

''சென்னையை ஒட்டியுள்ள, பல்லாவரம் நகராட்சியில தான், இந்த கூத்து நடக்குது... அங்க, கமிஷனரா இருக்கறவரை விட, அவருக்கு உதவியாளராக இருக்கறவர் தான், எல்லா வேலையும் பார்க்குறார் பா...

''உதவியாளர் சொல்றது தான், நகராட்சியில நடக்குமாம்... அவரு காட்டுற இடத்துல கையெழுத்து போடுறது மட்டும் தான், கமிஷனரோட வேலையாம்... கமிஷன் மட்டும், 'கன்' மாதிரி வர்றதால, அவரும் கண்டுக்கறது இல்லையாம் பா...

''அதனால கான்ட்ராக்டர்களும், நகராட்சி ஊழியர்களும், 'யார் கமிஷனர்னு தெரியலையே'ன்னு புலம்புறாங்க பா...'' என முடித்தார், அன்வர் பாய்.

''தலைவர்கள் போனதும், நாய்களை அவுத்து விட்டுட்டாவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''புரியற மாதிரி சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்துல பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்திச்சு பேசினாவ... அர்ச்சுனன் தபசுகிட்ட, அவங்க பேசிகிட்டு இருந்தப்ப, கறுப்பு நிற நாய் ஒண்ணு, குறுக்கே ஓடி, பாதுகாப்பு அதிகாரிகளோட, ரத்த வேகத்தை எகிற வைச்சது வே...

''இப்படியெல்லாம் நடக்குமுன்னு தெரிஞ்சு தான், 'ப்ளூ கிராஸ்' அமைப்பைச் சேர்ந்தவங்க, 'பிஸ்கட்' கொடுத்து, 43 நாய்களை பிடிச்சு வைச்சிருந்தாவ வே...''மோடியும், ஜின்பிங்கும் போன மறுநாளே, அந்த நாய்களை அவுத்து விட்டுட்டாவ வே... இப்போது அங்கே வர்ற, சுற்றுலா பயணியரை, நாய்கள் மிரட்டுது... நடவடிக்கை எடுக்கணுமுன்னு சொல்லுதாவ...'' என்றபடியே இடத்தை காலி செய்தார், அண்ணாச்சி.

நண்பர்களும் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • amicos - Bali,இந்தோனேசியா

    சீனா காரங்கே நாய் கறி சாப்பிட்றவன்கே அதேன் நாய் பாதுகாப்பா இருக்கட்டுமேன்னு

  • S.V.SRINIVASAN - Chennai,இந்தியா

    இன்னொரு வாரிசு அரசியல் உருவாகி விட்டது. எல்லாம் தமிழ் நாட்டின் தலையெழுத்து.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    விருந்தாளிகள் போனவுடனே பழைய குப்பைகளைப்போல நாலு மடங்கு குவியவில்லையா? அதே கதைதான் இதுவும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement