dinamalar telegram
Advertisement

'வுட்டாய் தரேன்; அம்மா இருக்கேன்; அழாதே சாமி!'

Share

திருச்சி மாவட்டம், மணப்பாறை, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், நவம்பர் 25 பகல், ௨:30க்கு, அண்ணன் புனித் ரோஷன் உடன், வீட்டருகே இருந்த சோளக் கொல்லைக்கு, விளையாடச் சென்றான், ௨ வயது சிறுவன் சுஜித்.
விவசாயத்திற்காக, தண்ணீர் தேடி, 600 அடிக்கு தோண்டப்பட்டிருந்த, 4 அங்குல ஆழ்துளை குழாய் வழியே உள்ளே விழுந்து விட்டான்.அவன் கூக்குரல் கேட்டு, ஓடி வந்து பார்த்தவர்கள், ௧௬ அடியில் சிக்கிக் கிடந்ததை கண்டனர். தகவல் அறிந்ததும், அந்த ஆழ்துளை கிணற்றை சுற்றி, ஊரே திரண்டு விட்டது. மூன்று அமைச்சர்கள், கலெக்டர் முதலான வருவாய் துறை அதிகாரிகள், திருச்சி மாவட்ட காவல் துறை தலைவர் முதலான போலீஸ் அதிகாரிகள் என, அனைவரும் ஆஜர்.கிணற்றுக்குள் இருந்து அவன் கதறல், கூடி நின்றவர்கள் நெஞ்சை பிளந்தது. குழந்தையை மீட்டு விட வேண்டும் என, பலர், பல தரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டனர். எதிர்பார்ப்புஉள்ளே கிடந்த அவன் கையில் கயிற்றால், சுருக்கு போட்டு, மேலே இழுத்து விடலாம் என்ற முயற்சி பயனளிக்கவில்லை. ஒரு கையில், சிறிது நேரமாவது சுருக்கு நின்றது. மற்றொரு கையில், சுருக்கு போடுவதற்கான சாத்தியமே இல்லை; தோல்வி அடைந்தன, பல குழுக்கள்.அங்கிருந்த, 14 வயது சிறுவன் மாதேஷை, தலைகீழாக உள்ளே இறக்கி விட்டால், குழந்தையை அவன், அப்படியே துாக்கி வந்து விடுவான் என, அவன் தந்தை சொல்லி இருக்கிறார்.
'பிளம்பிங்' பணியின் போது, கிணற்றுக்குள் விழும் கருவிகளை, மாதேஷை தலைகீழாக கிணற்றுக்குள் இறக்கித் தான் அவர், இதற்கு முன் பல முறை எடுத்து இருக்கிறார்.இது போன்ற ஆழ்துளை குழிகளுக்குள், அவ்வப்போது விழும் கோழி, நாய்க்குட்டி, ஆட்டுக்குட்டி போன்றவற்றை, மாதேஷை தலை கீழாக கிணற்றுக்குள் இறக்கி விட்டு, எடுத்துக் கொடுத்ததை அவர் விவரித்து இருக்கிறார்.
அதிகாரிகள், அமைச்சர்களிடம், தன்னால் மட்டும், அனுமதி கேட்டிருக்கிறார். மாதேஷ் தந்தை பேச்சுக்கு, யாரும் காது கொடுக்கவில்லை. தலையில் அடித்து அழுதபடி, அவர் அங்கு இருந்து வெளியேறி விட்டார்.இந்த சில மணி நேரங்களில் குழந்தை, 26 அடி வரை நழுவி விட்டது. ரிக், ஜே.சி.பி., என, இயந்திரங்கள் பள்ளம் தோண்டும் முயற்சியில் ஏற்பட்டதால் ஏற்பட்ட நில அதிர்வால், குழந்தை நழுவி, 40 அடி, 60 அடி என, 88 அடி வரை போய் விட்டது.
குழந்தை தைரியமாக இருக்க வேண்டும் என்று, குழிக்குள் வெளிச்சத்துக்கும் ஏற்பாடு செய்தனர்; 'கேமரா'வையும் உள்ளே இறக்கி, குழந்தையின் நிலையை கண்காணித்தனர்; குழந்தையின் அசைவுகள், மூச்சு விடும் தன்மை அவதானிக்கப்பட்டன.எனினும், எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு மாநில அரசு, தேசிய பேரிடர் மீட்புக்குழு போன்றோரின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்பது தான் சோகம்.எது நடந்தாலும், 'அமெரிக்காவை பார்; சீனாவை பார்' என புலம்புவது, நம் அடிமைத்தனத்தின் உச்சம் என்பர். மறுப்பதற்கு இல்லை.
எனினும், அமெரிக்க உதாரணத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை.கடந்த, 1987ல், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின், மிட்லேண்ட் பகுதியில், 1.6 வயது குழந்தை, ஜெசிக்கா மெலிக்யூர், இது போன்ற ஆழ்துளை கிணற்றில் விழுந்து, 22 அடிக்கு சென்று விட்டாள். 58 மணி நேர போராட்டத்திற்கு பின், குழந்தை மீட்கப்பட்டது. இப்போது, இரண்டு குழந்தைகளின் தாயாக, 33 வயது பெண்ணாக வாழ்கிறார் ஜெசிக்கா.அமெரிக்க நிர்வாகம், போர்க்கால நடவடிக்கையில் இறங்கியது; நிலம் அதிராமல், சுற்றிலும் உள்ள மண்ணை அகற்றி, கிணற்றின் உறைகளை அகற்றி, ஜெசிகாவை நெருங்கினர். மருத்துவ மாணவர் ஒருவர், உள்ளே போய் குழந்தையை, பூ போல தன் கைகளில் ஏந்தி வெளியே வந்தார்.புள்ளி விபரம்'நல்ல மாட்டுக்கு ஒரு சூடு' என்பது போல, அமெரிக்க நாடு செயல்பட்டது. எங்கெல்லாம், ஆழ்துளை கிணறுகள் திறந்து கிடந்தனவோ, அனைத்தையும் இரும்பு மூடியால் இறுக மூடியது. அதனால், 1987க்கு பின், அமெரிக்காவில் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் சிக்கி, மரணம் அடைவது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது.இந்த காட்சிகள், ஏ.பி.சி., செய்தி நிறுவனத்தால், 'அனைவரின் குழந்தை' என்ற பெயரில், தொலைக்காட்சி படமாகி, உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.இந்தியாவில், ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகள் இறப்பு விகிதம், 8.08 என, 'யுனிசெப்' எனப்படும், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல அமைப்பின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டில் மட்டும், எட்டு லட்சத்து, 80 ஆயிரம் குழந்தைகள், பல விதமான காரணங்களால் இறந்து உள்ளனர்.இந்த விஷயத்தை பொறுத்த வரை, இந்தியாவுக்கு முதல் இடம். இந்தியாவில், தமிழகத்துக்கு தான் முதல் இடம். எவ்வளவு அவமானம்...ஆழ்துளை கிணற்றில் விழுந்து, சுஜித் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த போது, லட்சக்கணக்கானோர், அவன் மீள வேண்டும் என, பிரார்த்தித்தனர். ஏராளமான பிரபலங்களும், பிரதமரும் கூட வேண்டினர். 'இத்தகைய விபத்துகளில், குழந்தைகளை மீட்பதில், ஓரளவு வெற்றி கொண்டுள்ள சீனாவிடம், தொழில்நுட்ப உதவியை, பிரதமர் ஏன் கேட்டு இருக்கக் கூடாது' என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.'குழந்தையை மீட்கத் தெரிந்த தொழில் நுட்பத்தை கண்டறிய முனையாத, நம் விஞ்ஞானிகளுக்கு, சந்திரயானும், விக்ரம் லேண்டரும் ஒரு கேடா...' என, பலர் கேட்டனர்.
தாமாகவே முன்வந்து, 2013 ல், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், ஆழ்துளை கிணறு விபத்துகளை, தடுக்க உத்தரவு வழங்கி உள்ளனர்; நடைமுறைகளையும் கூறி உள்ளனர். அவற்றை யாருமே, காதில் போட்டுக் கொள்ளவில்லை. நடைமுறைகளை பின்பற்றாதோர் மீது, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.இந்தியா முழுவதும் பஞ்சாபில், ஹரியானாவில், குஜராத்தில், தமிழகத்தில், குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளில் சிக்கி மரணம் அடைவது தொடர்கிறது. சுஜித் உயிரை பலி கொடுத்து, நான்கே நாட்களில், ஹரியானாவில் ஒரு பெண் குழந்தை, ஆழ்துளை கிணற்றில் விழுந்து, இறந்துள்ளது.பஞ்சாபில், 92 மணி நேர போராட்டத்திற்கு பின், 150 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய, 2 வயது குழந்தை பலியானான், ஹரியானாவின் ஹிஸ்ஸார் மாவட்டத்தில், ௧௮ மாத குழந்தை, கடும் போராட்டத்திற்கு பின் காப்பாற்றப்பட்டான்.அது போன்ற நீண்ட போராட்டத்திற்கு பிறகு, 2009 ல், 5 வயது சிறுவன் பிரின்ஸ், குருஷேத்திராவில் மீட்கப்பட்டான்.தமிழகத்தை பொறுத்தவரை, அறிஞர்களைக் காட்டிலும், திரையுலக பிரபலங்களின் பேச்சை, மக்கள் உடனே செயல்படுத்துவர். எனவே, முன்னணி கதாநாயகர்களும், கதாநாயகிகளும், தத்தம் ரசிகர் மன்றத்தினர்களுக்கு, திறந்து இருக்கும் ஆழ்துளை கிணறுகளை, இரும்பு மூடிகளால் மூடச் சொல்லலாம்.வருவாய் துறையில் உள்ள, குக்கிராம மட்டத்து அதிகாரிகள் முதல், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் ஆகிய அனைவருக்கும், ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி போல, தெளிவான உத்தரவுகள் இட வேண்டும். அவற்றை அலட்சியப்படுத்துபவர்களுக்கு, தண்டனை வழங்க வேண்டும்.
பஞ்சாப் மாநில காங்., அரசு, ஒரு அறிவிப்பை, சமீபத்தில் வெளியிட்டது. 'ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பதை காண்போர், அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால், அந்த தகவலை தெரிவிப்போருக்கு, 5, 000 ரூபாய் வெகுமதி தரப்படும்' என, அறிவித்து உள்ளது. தமிழக அரசும் இதுபற்றி யோசிக்கலாம்.
விசாரணை
கிணறுகளை மூடுவது என்றால், என்ன என்பதையும் தெளிவாக சொல்ல வேண்டி இருக்கிறது. அருகே உள்ள மண்ணை இழுத்துப்போட்டு, பிளாஸ்டிக் மூடியால் மூடுவது தவறு. 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடுவோருக்கு பயிற்சி தந்து, அவர்களை வைத்து, விபத்து ஏற்படாத வண்ணம் மூடலாம்.தமிழகத்தில், இத்தகைய விபத்துகளுக்கு ஆளாகி, உயிர் துறந்த கடைசி குழந்தை சுஜித் தான் என, இருக்க வேண்டும். 'வுட்டாய் தரேன்; அம்மா இருக்கேன்; அழாதே சாமி' என்பது போன்ற அவலக் குரல், இன்னொரு முறை, வேறொரு வடிவில் கேட்கக் கூடாது.இத்தகைய முனைப்புடன் ஒவ்வொருவரும் செயல்பட்டால், நிச்சயமாக ஆழ்துளை கிணறு விபத்துகளை தடுக்கலாம். விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, ஒரு ஆழ்துளை கிணறு தோண்ட, 1 லட்சம் ரூபாய் கடனும், 50 ஆயிரம் ரூபாய் மானியமும் தரப்படும் என, அரசு அறிவித்து உள்ளது.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், 'நீர் ஆதாரத்தை பெருக்க, நிமிர்ந்து பார்க்க வேண்டும்; பூமியை தோண்டிக் கொண்டே போவது, நாளா வட்டத்தில், சிக்கல்களையே பெருக்கும்' என்று சொன்னதை, எண்ணி பார்க்க வேண்டும்.இப்போதும், சுஜித் மரணத்தை தொடர்ந்து, சில, 'ரிட்' மனுக்கள், கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அதில் ஒன்றில், நடந்த விபத்திற்கு, அரசிடம் வெள்ளை அறிக்கை கோரப்பட்டுள்ளது. இன்னொன்று, ஒரு நபர் விசாரணை கமிஷனை கோருகிறது.கோடிக்கணக்கானோர், 'அன்னை' என, போற்றியவரின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷனே, இழு இழு என, இழுத்துக் கொண்டு இருக்கிறது என்பதை, அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.சுஜித் விவகாரத்தை பார்த்தால், எந்த மீட்புப் பணியிலும், அப்பணிகளில் ஈடுபடுவோர் மட்டுமே, அந்த இடத்தில் இருக்க வேண்டும்.
வேடிக்கை பார்ப்போர், சிக்கலில் இருப்போரின் உறவினர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர், பாதிப்பு உள்ளான இடத்தில் இருக்கவே கூடாது.ஆனால், சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றை சுற்றி, திருவிழா போல கூட்டம் கூடி நின்றது. கூட்டம் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது, இதில் பால பாடம். ஆனால், அதைக் கூட யாரும் கருத்தில் கொள்ளவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் கூட, 1 கி.மீ., தள்ளி இருந்து, ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து இருக்கலாம்.மீட்புப் பணிகளுக்கு வந்த வாகனங்களில் ஏற்பட்ட பழுதுகள், மீட்புப் பணியை கணக்கம் அடைய செய்தன. 'ரிக்' பழுது பட்டது; பற்சக்கரங்கள் உடைந்தன. ஒரு முறை, மீட்புக் கருவி தொடர்ந்து பயன்பட்டதில், வெப்பம் அதிகரித்ததால், பல மணி நேரங்கள் செயல்படாமல், நிறுத்த வேண்டி வந்தது.அரக்கோணத்தில் இருந்து மணப்பாறை வர, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், 15 மணி நேரம் ஆனதாக, சிலர் சொல்கின்றனர்.
விமானங்களும், ஹெலிகாப்டர்களும் எதற்கு இருக்கின்றன?ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் போது, அவற்றை காக்க செய்யப்பட்ட கருவிகளில் எவையேனும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரிடம் இருந்ததா; அதை கையாள்வதற்கான பயிற்சிகளை அவர்கள் பெற்று இருந்தனரா; அவற்றை முறையே, மாநில பேரிடர் மீட்புக் குழுவினருக்கு கற்பித்து இருந்தனரா?நிறைய கேள்விகள் எழுகின்றன. இனிமேலாவது விழித்துக் கொள்ள வேண்டும்!
தொடர்புக்கு:thilakavathiips@gmail.comதிலகவதி ஐ.பி.எஸ்.,தி

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement