Advertisement

ஜெ., இருந்திருந்தால் அமைச்சர் இப்படி பேசியிருக்க மாட்டார்!

Share

டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நடிகர் ரஜினிகாந்திற்கு, 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்குவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு, 'நான் ரஜினி ரசிகனாக இருந்து, பெருமை கொள்கிறேன்' என, கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த, அ.தி.மு.க.,வின், மாவட்ட செயலராகவும், எம்.எல்.ஏ.,வாகவும். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வசிக்கும் ராஜு, இப்படி பேசியிருப்பது, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு பெரிய வருத்தம் அளிக்கிறது. ஒருவேளை, 'வருங்காலத்தில், ரஜினிகாந்த் முதல்வரானால், இப்போதுள்ள கூட்டுறவு துறை அமைச்சர் பதவியை, அப்படியே பெற்றுக் கொள்ளலாம் என, ராஜு அச்சாரம் போட்டுள்ளாரோ?' என, தோன்றுகிறது.


எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சியில் தான் இருக்கிறோம்; அடிமட்ட தொண்டனாக இருந்த நம்மை, இந்தளவுக்கு உயர்த்திய, ஜெயலலிதாவை, பெரும்பாலான அமைச்சர்கள் மறந்து விட்டனர்; அதில், கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு முன்னிலை வகிக்கிறார். கடந்த, 1972ல், தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்ட போது, அவருக்கு உற்ற துணையாக இருந்து, அ.தி.மு.க., கட்சியை ஆரம்பிக்க, உயிர் கொடுத்தவர்கள் எம்.ஜி.ஆர்., ரசிகர் மன்றத்தினர் தான்; இதை அமைச்சர் ராஜு தெரிந்து கொள்ள வேண்டும்.


எம்.ஜி.ஆருக்கு ரசிகனாக இருந்தோர் தான், அ.தி.மு.க., தொண்டர்கள் என்பதை அனைவருமே அறிவர். திரைப்படத்தில், தனக்கு அப்பாவாக நடித்த, திருச்சி சவுந்தர்ராஜனை, தன் தீவிர ரசிகன் என்பதாலேயே, தன் அமைச்சரவையில், சமூகநலத்துறை அமைச்சர் ஆக்கினார், எம்.ஜி.ஆர்., தன் தீவிர ரசிகர், ஐசரி வேலனை துணை அமைச்சராகவும் ஆக்கினார். தை எல்லாம் அமைச்சர் ராஜுவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை; அதை மறந்தது ஏன்?

அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடந்த, பாட்ஷா திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்த், 'தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி விட்டது' என்றார். அந்த மேடையில் இருந்த, ஆர்.எம்.வீரப்பன் பதில் சொல்லாமல் மவுனம் காத்தார்; இது, அன்று முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவியும், கட்சி பதவியும் பறிக்கப்பட்டது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், 'நான் ரஜினியின் ரசிகன்' என, அமைச்சர் ராஜு, இப்படி சொல்லியிருக்க மாட்டார்!

டில்லி பாணியை மற்ற மாநிலங்களும் விரைவில் பின்பற்றும்!
வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: ஏற்கனவே, டில்லி அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சமூக நலத் திட்டங்களுக்கான நிதியை கூட, மத்திய அரசிடம் இருந்து, எதிர்பார்க்கும் நிலை, டில்லி அரசுக்கு இருக்கிறது. இத்தருணத்தில், 'அக்., ௧௦ முதல், டில்லியில், பெண்கள் அனைவரும் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் உத்தரவு' அமலாகி இருக்கிறது; டில்லி முதல்வர் கெஜ்ரிவால், சுதந்திர தின உரையில், இந்த அறிவிப்பை செய்துள்ளார். இது, எப்பேற்பட்ட சீர்திருத்தம்... இந்த சீர்திருத்தத்தை, அனைத்து குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்.

முதல்வர் கெஜ்ரிவாலுக்கு... இளைஞர்கள் மட்டும் என்ன பாவம் செய்து விட்டனர். அவர்களுக்கும், பேருந்தில் இலவச பயணம் செய்யும் திட்டத்தை அனுமதித்து விடலாமே! இது, யார் வீட்டுப் பணம்... கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு கெஜ்ரிவால் உடைக்கிறார். எல்லாரும், பஸ்சில் இலவச பயணம் செய்யலாம். வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டுகள் அனைத்தும், ஆம் ஆத்மி கட்சிக்கே கிடைக்கும். அப்புறம் என்ன... கெஜ்ரிவால் தான், டில்லியின் நிரந்தர முதல்வர்! டில்லி, இந்தியாவுக்கே வழி காட்டி விட்டது.

வரும் சட்டசபை தேர்தல்களில், எல்லா மாநிலங்களும், டில்லி பாணியை பின்பற்றும். குறிப்பாக, தமிழகம், இலவச பேருந்து பயண திட்டத்தை கட்டாயம் செயல்படுத்தும். இலவச பஸ் பயணம் செய்யும் நாள், ௨௦௨௧, மே மாதத்தில் துவங்கும் என்ற அறிவிப்பு கூட வரலாம்!

வள்ளுவருக்கும் எதிரிகள் இருக்கின்றனர்! என்.வைகைசெல்வன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சாராயம் குடிக்காதே; மட்டன், சிக்கன் பிரியாணி சாப்பிடாதே; அடுத்தவன் மனைவியை அடைய நினைக்காதே; கடவுளை வணங்க மறுக்காதே; கொலை, கொள்ளை, திருட்டு போன்ற தொழில்கள் செய்து, பணம் சேர்க்காதே' என, அறிவுரை சொன்ன திருவள்ளுவரை, ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை.

'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கொள்கையில், கண்ணதாசன், கருணாநிதி, அண்ணாதுரை போன்ற மகானுபாவர்களுக்கு உடன்பாடு இல்லை. 'தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது' என்றார், நபிகள் நாயகம். 'உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே; பெற்ற தாயின் வயிற்று பசியை போக்க, கொள்ளை, திருட்டுத் தொழில் செய்யாதே' என்றார், வள்ளுவர்; இதை ஏற்போரும், மறுப்போரும் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழக அரசியல் தலைவர்கள் மிகவும் விவரமானவர்கள்... மாங்கா மடையர்களாக இருக்கும் மக்கள், இதை எல்லாம் நிச்சயம் ஏற்க மாட்டார்கள் என்பது, அவர்களுக்கு தெரியும்.

சாராய கடையிலும், மட்டன் கடையிலும், 'குடிக்காதே, மாமிசம் சாப்பிடாதே' என்று சொன்ன, மஹாத்மா காந்தி, வள்ளுவர் படத்தை மாட்டி வைத்தால், குடிமகன்களுக்கு கோபம் வர தானே செய்யும். 'என்னை குடிக்காதே என்று சொல்ல நீ யாருய்யா? புலி, சிங்கம் எல்லாம் மட்டன் சாப்பிடும்போது, மனுஷன் சாப்பிடக்கூடாதா...' என, வள்ளுவரிடம் நியாயம் கேட்போர், இன்றும் இருக்கின்றனர். ராமபிரானுக்கு, அன்று செருப்படி கிடைத்தது; இன்று, வள்ளுவருக்கு சாணி அபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூருக்கு அருகில் பிள்ளையார்பட்டியில், திருவள்ளுவர் சிலைக்கு சாணி அபிஷேகம், கரித்தூள் அபிஷேகம் எல்லாம் செய்து மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர், சில இழிபிறவிகள்.

இதற்கு வழக்கம்போல, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உட்பட, அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருவள்ளுவர், ஜாதி, மதம், மொழி, இனம் என, அத்தனைக்கும் அப்பாற்பட்டவர். அவரை பிடிக்காதவர்களே, இங்கு இருக்க முடியாது என்று சொன்னது, எல்லாம் வெறும், 'கப்சா!' அவருக்கும், எதிரிகள் இங்கு உண்டு என்பதை, இந்தச் சம்பவம் நிரூபித்து விட்டது!

மொழியை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்!
சுப்ர அனந்தராமன், சின்ன காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'சமஸ்கிருதம், ஒரு வழக்கொழிந்த மொழி; அது, ஹிந்து மத சடங்குகளின் மந்திரங்கள் உச்சரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதை, உலகாயத விஷயங்களுக்காகவும், அன்றாடம் பயன்பாட்டு விஷயங்களுக்காவும், பயன்படுத்தவே முடியாது' என்ற தவறான அபிப்பிராயம், தமிழ் மக்களிடையே பரவியிருக்கிறது; இது, உண்மை அல்ல!

நாடு முழுவதிலும், எளிய சமஸ்கிருத சொற்களையும், எளிய வாக்கியங்களையும் பயன்படுத்தி, அனைத்து தரப்பு மக்களிடையே, சமஸ்கிருத உரையாடல் வகுப்புகளை, சமஸ்கிருத பாரதி இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதிலும், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களை, சமஸ்கிருத மொழியில் உரையாட பயிற்சி அளித்துள்ளனர். 'சம்பாஷன சந்தேச' என்ற சமஸ்கிருத பத்திரிகையை, சமஸ்கிருத பாரதியினர், பல ஆண்டுகளாக, பெங்களூரில் நடத்தி வருகின்றனர். இந்த இதழில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற, பிராந்திய மொழி பத்திரிகையில் வெளிவரும் சிறுகதைகள், தொடர் கதைகள், செய்தி துணுக்குகள், சமையல் குறிப்புகள் போன்ற அனைத்து விஷயங்களும், எளிய சமஸ்கிருத சொற்கள், வாக்கியங்களை பயன்படுத்தி வெளியிடப்படுகின்றன.

சமஸ்கிருதத்தை எளிமையாக்க கையாண்டு, அம்மொழியில், சம்பாஷண சந்தேச என்ற சமஸ்கிருத மொழி மாத இதழ், 24 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஓரளவு சமஸ்கிருத மொழியில், பரிச்சயமும், மிகக்குறைவான தேர்ச்சியும் பெற்றுள்ளவர்கள், தாழ்வு மனப்பான்மையை விட்டு விடுங்கள், இன்றே, சம்பாஷண சந்தேச வாசகர் ஆகுங்கள். அதற்கான, தொலைபேசி எண்கள்: 080 26722576, 080 26721052; ஆண்டு சந்தா, 200 ரூபாய் மட்டுமே. சமஸ்கிருதத்தை எளிய முறையில், கற்று தேர்ச்சி பெற, சம்பாஷண சந்தேசவில் வரும் கதை, கட்டுரைகளை படித்து, இலவசமாக விளக்கமளிக்க தயாராக இருக்கிறேன். தொடர்புக்கு: 8099107855.

ஸ்டாலினை யாரும் நம்ப போவதில்லை!
என்.மதியழகன், பெண்ணாடம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: துாத்துக்குடியில், நடிகர் தனுஷ் நடித்த, அசுரன் படத்தை பார்த்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'அசுரன் படமல்ல; பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை, மையமாக வைத்து, ஜாதிய சமூகத்தைச் சாடும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஜாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன், அசுரன்' என, பாராட்டு தெரிவித்து இருந்தார்.

உடனே, 'அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, ஸ்டாலின், 'முரசொலி' அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட, பஞ்சமி நிலங்களை, உரியவர்களிடம் ஒப்படைப்பார் என, நம்புவோம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நெருப்பை அள்ளி கொளுத்திப் போட்டுள்ளார். 'முரசொலி' இடம் தொடர்பான விவகாரத்தில், மூலப் பத்திரம் உள்பட அனைத்து ஆவணங்களையும், ஸ்டாலின் வெளியிட வேண்டும்' என, ராமதாசுக்கு ஏற்பட்ட பற்றாக்குறைக்கு, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி அதிகமாக கேட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து, தமிழக தலைமை செயலாளருக்கு, தேசிய எஸ்.சி., - எஸ்.டி., கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தன் பங்கிற்காக, முதல்வர் இ.பி.எஸ்., 'பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு குறித்து, உண்மை தன்மை ஆராயப்படும். அது, பஞ்சமி நிலமாக இருந்தால், அரசு நடவடிக்கை எடுக்கும்' என கூறியுள்ளார். பா.ஜ., மாநில பொதுச் செயலர் ஸ்ரீநிவாசன், 'முரசொலி அலுவலகத்திற்கு மண்ணை எங்கிருந்து வாங்கினர் என்பதை, ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும்' என, கோரியுள்ளார். இந்த விவகாரம் தீயாய் எரிந்து கொண்டிருக்கும் நிலையில், விக்கிரவாண்டி இடைதேர்தல் பிரசாரத்தின் போது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான, ௨௦ சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும்' என வன்னியர்களின் ஓட்டை குறி வைத்து பேசியுள்ளார், ஸ்டாலின்.


அந்த தொகுதியில், வன்னியர்கள் அல்லாத, இதர ஜாதியினர் விழித்துக் கொண்டனர். தி.மு.க., கைப்பற்றிய, அத்தொகுதியை சேர்த்து, நாங்குநேரியையும், அ.தி.மு.க., வசப்படுத்தியுள்ளது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவிழ்த்து விடுவதை எல்லாம், இனி, தமிழக வாக்காளர்கள் நம்ப போவதில்லை!

காங்கிரஸ் செயல்கள் செல்லுப்படி ஆகாது!
எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடி தலைமையில், ஆட்சி பொறுப்பேற்று இருக்கும், ஐந்தரை ஆண்டுகளில், அவர் மீதோ, அவரது அமைச்சரவை சகாக்கள் மீதோ, எந்த விதமான ஊழல் புகார்களையோ, குற்றச்சாட்டுக்களையோ சுமத்த முடியவில்லை.

தேர்தல் நேரத்தில், 'ரபேல் ரபேல்' என, காங்கிரசார் கூவிப் பார்த்தனர்; ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. 'பிரதமர் மோடியை, 'திருடன்' எனக் கூட, காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்து, உச்ச நீதிமன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டார். குற்றம் சாட்ட, எந்த விஷயமும் கிடைக்காத சூழ்நிலையில், பண மதிப்பிழப்பு விஷயத்தை, காங்கிரசார் கையில் எடுத்து பார்த்தனர்; அது, போணி ஆகவில்லை என்றதும், மோடியின் விமான பயணங்களை தாக்கி பேச துவங்கினர்.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கும், ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீலும், விமானப் பயணத்தை, தங்கள் சொந்தக் கைக்காசை போட்ட பயணித்தனர்... எதிர்க்கட்சிகளை, சட்டை செய்யாமல், நாட்டை முன்னேற்ற என்னென்ன செய்ய வேண்டுமோ, அவைகளை ஒவ்வொன்றாகச் செய்து கொண்டிருக்கிறார், பிரதமர் மோடி. எதுவுமே கிடைக்காத போது, பிரதமர் மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையால், பொருளாதார மந்த நிலை, வேலையின்மை அதிகரிப்பு, விவசாயிகள் பிரச்னை ஆகியவை ஏற்பட்டுள்ளதாக, பூச்சாண்டி காட்ட, காங்கிரசார் துவங்கி உள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சியில் தான், பொருளாதாரம் பொங்கி, கஜானா நிரம்பி வழிந்து கொண்டிருந்தது! அப்போது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங், ஏன் நாடு நாடாகச் சென்று, உலக வங்கியிடம் கடன் வாங்கிக் கொண்டிருந்தார்? காங்கிரசின் குற்றச்சாட்டுப் படி, 'நாட்டில் பொருளாதாரம் சீரழிந்து கிடக்கிறது; கஜானா காலியாகி விட்டது' என்கிறது. அப்படி இருந்தும், பிரதமர் மோடி, எந்த நாட்டுக்காவது சென்று, கடன் கேட்டு வாங்கி வந்திருக்கிறாரா... உலக வங்கியிடம் கடன் கேட்டு கோரிக்கை வைத்திருக்கிறாரா... சொல்லுங்களேன்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement