Advertisement

'டவுட்' தனபாலு

Share

தமிழக காங்., தலைவர் அழகிரி: 'நீட் தேர்வை ரத்து செய்ய, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கை குறித்து, சி.பி.ஐ., வாயிலாக விசாரிக்க வேண்டிய நிலை ஏற்படும்' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். அதற்குப் பிறகும், மத்திய, மாநில அரசுகள், நீட் தேர்வை ரத்து செய்யவில்லை.

'டவுட்' தனபாலு: 'பிற கட்சித் தலைவர்களை அவதுாறாக பேசக் கூடாது; ஊரெல்லாம், 'நோட்டீஸ்' ஒட்டி நாறடிக்கக் கூடாது' என்பன போல, உங்களைப் போன்ற அரசியல் தலைவர்களுக்கு, நீதிமன்றங்கள் அவ்வப்போது, 'குட்டு' கொடுக்கிறது. அதை ஏன் பின்பற்றவில்லை என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

நடிகர் ரஜினிகாந்த்: தமிழகத்தில், சரியான ஆளுமை மிக்க தலைமைக்கு, இன்னும் வெற்றிடம் உள்ளது. நான் அரசியல் கட்சி தொடங்கினாலும், தொடர்ந்து நடிப்பேன். எம்.ஜி.ஆர்., கூட கட்சி துவக்கி, முதல்வராகும் வரை தொடர்ந்து நடித்தார்.

'டவுட்' தனபாலு: முதல்வர் ஆகும் வரை, நீங்கள் நடிப்பீர்கள் என்பது சரி; உங்கள் படங்களை பார்க்க ரசிகர்கள் வர வேண்டாமா... தனியாக கட்சி துவக்குவேன் என அறிவித்து, அடுத்த மாதத்துடன் இரண்டாண்டுகள் ஆகப் போகின்றன. ஆனால், நான்கைந்து படங்களில் நடித்து முடித்து விட்டீர்கள். இன்னமும், 'நான் அரசியல் கட்சி துவக்குவேன்' என கூறி, நடித்துக் கொண்டிருக்கிறீர்களோ என்பதே என், 'டவுட்!'

நடிகர் கமல் ஹாசன்: எங்கள் ரசிகர்கள், ஒருவருக்கொருவர் சண்டைப் போட்டுக் கொள்வர். நானும், ரஜினியும், தனியாக என்ன பேசிக் கொள்கிறோம் என, கேட்டால் வியந்து போவர். நாங்களும், ரசிகர்களை அப்படியே, சண்டையிட விட்டு வைத்துள்ளோம். இரண்டு, 'கோல் போஸ்ட்' இருந்தால் தானே, போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்!

'டவுட்' தனபாலு: அதனால் தான், உங்கள் இருவரையும், 'சூப்பர்' நடிகர்கள் என, தமிழகம் கொண்டாடுகிறதோ... மொத்தத்தில், தமிழ் சினிமா ரசிகர்களை, பைத்தியக்காரர்களாக ஆக்கி வைத்துள்ளோம் என்பதை, மறைமுகமாக சொல்கிறீர்கள் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தி.மு.க., பொருளாளர் துரைமுருகன்: தனக்கு காவிச்சாயம் பூச முயற்சிக்கின்றனர் என, நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. தமிழகத்தில், ஆளுமை மிக்கவர்கள் இல்லாததால் வெற்றிடம் நிலவுகிறது என, அவர் சொல்லியுள்ளார். பல படங்களில் தொடர்ந்து நடிப்பதால், தமிழக அரசியல் களத்தை, அவர் சரியாக பார்க்க தவறி விட்டார். 'வெற்றிடத்தை காற்று நிரப்பி விடும்' என்பது விஞ்ஞானம். தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை, ஸ்டாலின் என்ற காற்று நிரப்பி, வெகு நாட்களாகி விட்டன.

'டவுட்' தனபாலு: தி.மு.க.,வில் கருணாநிதி இல்லாத வெற்றிடத்தை, ஸ்டாலின் நிரப்பி விட்டார் என்பது தான் சரியான பதிலாக இருக்க முடியும். நீங்கள் சொல்வதை பார்த்தால், தமிழகத்தின் வெற்றிடத்தை, தினமும் போராட்டங்கள் நடத்தும், காங்., அழகிரி, ம.தி.மு.க.,வின் வைகோ, சிறுத்தைகள் திருமாவளவன், தி.க., வீரமணி போன்றோர் நிரப்பவில்லையோ என்ற, 'டவுட்'டை கிளப்புகிறது!

தமிழக, பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன்: 'மிசா'வில் கைதானதை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பெருமையாக பேசிக் கொள்கிறார்; ஆனால், அக்கட்சியின் பொன்முடி, சந்தேகம் தெரிவிக்கிறார்; 'மிசாவில் ஸ்டாலின் கைதானது பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என்கிறார். அதைத் தான் நான் சொன்னேன். அதற்காக, என் மீது தாக்குதலை தொடுக்கின்றனர், தி.மு.க.,வினர்!

'டவுட்' தனபாலு: கட்சித் தலைவராக, சிறை சென்றிருக்க வேண்டும் என, தி.மு.க.,வில் விதி இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. அக்கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதியும், தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து, சிறை சென்றதை பெருமையாக பல முறை கூறியுள்ளார். ஆனால், 'ரயிலே வராத தண்டவாளத்தில் அவர் தலை வைத்து படுத்தார்' என, அ.தி.மு.க.,வினர் கிண்டல் செய்ததை, கருணாநிதி அறிந்திருப்பார் என்பதில், 'டவுட்'டே இல்லை.

தமிழக, பா.ஜ., பொறுப்பாளர் முரளிதர ராவ்: திருவள்ளுவர் சிலை விவகாரத்தில், தி.மு.க.,வின் கொள்கைக்கும், திருக்குறளுக்கும் இடையே தான் மோதல் ஏற்பட்டுள்ளது. திருவள்ளுவரை, விபூதியுடன் பார்க்க மக்கள் விரும்பினால், அவர்களை கைது செய்ய முடியுமா? திருவள்ளுவர், தி.மு.க.,வுக்கு சொந்தமானவர் இல்லை.

'டவுட்' தனபாலு: இத்தனை நாளும் இல்லாமல், இப்போது, தமிழக அரசியல் கட்சிகளுக்கு, திருவள்ளுவர் மீது திடீர் பாசம் ஏன் என்ற, 'டவுட்'டுக்கு பதில் இல்லை. தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான, தி.மு.க.,வை எதிர்ப்பதால், பா.ஜ.,வுக்கு விளம்பரம் கிடைக்கும்; கட்சி வளரும் என எண்ணுகிறீர்களோ என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • S.V.SRINIVASAN - Chennai,இந்தியா

    நடிகர் ரஜினி காந்த் கட்சி ஆரம்பிக்காமல் இருப்பதே தமிழ் நாட்டிற்கு நல்லது, அவருடைய உயிர் நண்பர் என்ன பேசுகிறார் என்று அவருக்கும் புரியாது நமக்கு புரியாது. அவர்கள் இருவருடைய ரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்படுத்தி இவர்கள் இருவரும் குளிர் காய்கிறார்கள் போலிருக்கிறது. இருவருடைய ரசிகர்களுக்கிடையில் மோதல் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த விரும்பிகிறான் போலிருக்கிறது. தமிழ் நாட்டை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.

  • karutthu - nainital,இந்தியா

    அக்கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதியும், தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து, சிறை சென்றதை பெருமையாக பல முறை கூறியுள்ளார். ஆனால், 'ரயிலே வராத தண்டவாளத்தில் அவர் தலை வைத்து படுத்தார்' என, அ.தி.மு.க.,வினர் கிண்டல் செய்ததை, கருணாநிதி அறிந்திருப்பார். ஆனால் இதை மறுக்க முடியவில்லை ஏனென்றால் இதை கவியரசர் கண்ணதாசன் தன் வனவாசம் புத்தகத்தில் எழுதி இருக்கிறார்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கமலும் ரஜினியும் ஒற்றுமையாக இருப்பதாக அறிக்கை விடுவதன் மூலம் ரசிகர்களும் சமரசமாகி ஒன்று சேர்ந்து தேர்தல் காலங்களில் உழைக்கலாமல்லவா? இதனால் யாருக்கு என்ன கெடுதல் வந்துவிடப்போகிறது ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement