Advertisement

அதிகாரிகளுக்கு, 'ஐஸ்' வைத்த அமைச்சர்!

Share

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், விழிப்புணர்வு முகாம், மதுரையில் நடந்தது. முன்னதாக, மதுரையில் முகாமிட்டு, வருவாய் நிர்வாக கமிஷனர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன், டி.ஆர்.ஒ., செல்வராஜ் ஆகியோருடன் இணைந்து, ஒரே நாளில் ஏற்பாடுகளை செய்தார்; மீட்பு கருவிகள் வரவழைக்கப்பட்டு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

முகாமில், டி.ஜி.பி., சைலேந்திரபாபு, வேளாண் முதன்மை செயலர் ககன்சிங் பேடி, கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்லால், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் என, அதிகாரிகள் பட்டாளமே பங்கேற்றனர். இதில் பங்கேற்ற, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் உதயகுமார், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு, பாராட்டி, 'ஐஸ்' வைத்து பேசினார்; அதிகாரிகள் மேடையில் நெளியத் துவங்கினர். மூத்த நிருபர் ஒருவர், 'தீயா வேலை செய்யுணும் குமார் படத்துல கதாநாயகனா நடிக்க வேண்டியவர், அமைச்சராகிட்டாரு' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் சிரித்தனர்.


'அரசரிடம், 'ஐடியா' கேட்டாரா வாசன்?'

புதுக்கோட்டை பகுதிகளில், திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, நிருபர்களிடம் அவர், ' 1976ல் 'எமர்ஜென்சி' காலகட்டம் நடந்தது. அது முடிந்து, 45 ஆண்டுகள் கழித்து, தற்போது அதை வைத்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, அமைச்சர் பாண்டியராஜன் விமர்சனம் செய்வது, அநாகரிகமான செயல். அப்போதைய காலகட்டத்தில் பாண்டியராஜன் எங்கிருந்தார் என்பது, யாருக்குமே தெரியாது. ஒருவரை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்வதால், அவரது தரம் குறைந்து விடாது; தரம் தாழ்த்தி, விமர்சனம் செய்வோரின், தரம் தான் குறையும்.

'பா.ஜ., கட்சி மதவாதம் உடைய கட்சி என்று கூறி, அப்போதே மூப்பனார், பா.ஜ., ஆட்சிக்கு ஆதரவு அளிக்க மறுத்து விட்டார். அவரது மகன் வாசன், பா.ஜ.,வுக்கு செல்ல மாட்டார் என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'நீங்க சொல்றதைப் பார்த்தா, பா.ஜ.,வுல உறுப்பினரா இருந்த உங்களிடம், வாசன், 'ஐடியா' கேட்டிருப்பாரோன்னு தோணுது...' எனக் கூற, மற்றவர்கள் சிரித்தனர்.

போணி ஆகாத கட்சிக்கு, 'பில்ட் அப்?'
காஞ்சிபுரம் மாவட்டம், பூந்தமல்லி நகர, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், உள்ளாட்சி தேர்தல் குறித்த செயல் வீரர்கள் கூட்டம், நடந்தது. இதில் பேசிய, நகர செயலர் பூவை கந்தன், 'நமக்கு எதிர்க் கட்சியாக, தி.மு.க., இருந்தாலும், எதிரிக் கட்சி அ.தி.மு.க., தான். அவர்கள், மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வைத்திருக்கின்றனர்.

உள்ளாட்சி தேர்தலில், அந்த கட்சி சார்பில், கவுன்சிலர் சீட் கேட்டு போட்டியிடுவோர், 15 முதல், 20 லட்சம் ரூபாய் வரை, செலவு செய்வர். 'நகராட்சி தலைவருக்கு, 1 முதல், 3 கோடி ரூபாய் வரை, செலவு செய்யத் தயாராக இருக்கின்றனர். அதனால், அ.ம.மு.க., சார்பில், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர், 20 லட்சம் ரூபாயுடன் வாருங்கள். நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளோர், 2 கோடி ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள்' என்றார். அ.ம.மு.க., தொண்டர்கள் சிலர், 'போணி ஆகாத கட்சிக்கு, இவ்வளவு 'பில்டப்'பா? இதெல்லாம் எங்க போய் முடியுமோ...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தோர் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement