Advertisement

உள்ளாட்சியில் 20 சதவீதம் பங்கு கேட்கும் பா.ம.க.,

Share

நண்பர்கள் ஜமாவில் அன்று, கோவை கோவாலும் ஆஜராகியிருந்தார். டீயை உறிஞ்சியபடியே, ''பணி நியமனத்துக்கு பணம் வசூல் பண்றாங்ணா...'' என, அரட்டையை ஆரம்பித்தார்.

''எந்தத் துறையில ஓய்...'' என, விசாரித்தார் குப்பண்ணா.

''டாஸ்மாக் நிறுவனத்துல, 500 இளநிலை உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப, ஆக., 18ல தமிழகம் முழுக்க, ஒன்பது மையங்கள்ல தேர்வு நடத்துனாப்புல... இதுல, 8,401 பேர் தேர்வு எழுதுனாங்ணா...

''செப்., 3ல, தேர்வு முடிவு வெளியாகிடுச்சு... அக்., 11ல இருந்து, 14 வரைக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துச்சுங்ணா... ஆனா, இன்னும் பணி நியமனம் போடலை...

''விசாரிச்சா, 'நிர்வாக காரணங்கள்'னு சொல்றாப்புல... ஆனா, ஒரு பணியிடத்துக்கு, இவ்வளவுன்னு, 'ரேட்' நிர்ணயம் பண்ணி, வசூல் பண்றாங்களாமா...

'வசூல் முடிஞ்சதும் தான், பணி நியமனம் போடுவாங்க'ன்னு, வேலைக்கு காத்துட்டு இருந்தவங்க, வெசனத்துல இருக்காங்ணா...'' என, முடித்தார் கோவாலு.

''எல்லாருமே எங்களை புறக்கணிக்கிறாங்கன்னு, மூக்கால அழுவுதாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார், அண்ணாச்சி.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''மதுரை மத்திய தொகுதியில, தியாகராஜன், வடக்குல மூர்த்தி, திருப்பரங்குன்றத்துல சரவணன்னு, மதுரை மாவட்டத்துல, தி.மு.க.,வுக்கு, மூணு எம்.எல்.ஏ.,க்கள் இருக்காங்கல்லா... அதே நேரம், மாவட்டத்துல, உதயகுமார், ராஜுன்னு ரெண்டு அமைச்சர்கள், ராஜன் செல்லப்பா உட்பட, அ.தி.மு.க.,வுக்கு அஞ்சு எம்.எல்.ஏ.,க்கள் இருக்காவ வே...

''மேற்கண்ட மூணு தொகுதிகள்ல நடக்கிற விழாக்களுக்கு, ஆளுங்கட்சியினர் நெருக்கடியால, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, அதிகாரிகள் அழைப்பே தர மாட்டேங்காவ...

''இதனால, நொந்து போன அவங்க, வேற வழியில்லாம, தங்களது தொகுதி நிதியில நடக்கிற திட்டப் பணிகளை, தாங்களாகவே திறந்து வைக்காவ... ஆனா, அதுக்கும் கூட தொகுதியில இருக்கிற அதிகாரிகள், எட்டிக் கூட பார்க்க மாட்டேங்கிறாங்கன்னு புலம்புதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''சேலத்தை எங்களுக்கு தந்துடுங்கோன்னு கேட்டுட்டு போயிருக்கா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு சென்றார், குப்பண்ணா.

''உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி விவகாரமா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''ஆமாம்... முதல்வர், இ.பி.எஸ்.,சை, சமீபத்துல, அன்புமணியும், அவரது தோப்பனார் ராமதாசும் சந்திச்சு பேசினா... அரை மணி நேரமா மூணு பேரும் பேசியிருக்கா ஓய்...

''அப்ப, உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பத்தி தான் விவாதிச்சாளாம்... பா.ம.க.,வுக்கு, 20 சதவீத இடங்களை ஒதுக்கணும்னும், சேலம் மாநகராட்சி மேயர் சீட்டை கண்டிப்பா தரணும்னும், ரெண்டு பேரும் கேட்டுருக்கா... நிர்வாகிகளிடம் கலந்து பேசிட்டு சொல்றதா, அவாளை, முதல்வர் அனுப்பி வச்சிருக்கார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

அரட்டை முடியவும், நண்பர்கள் கலைந்தனர்.

கட்சியின் எதிர்காலம் பற்றி விஜயகாந்த் கவலை!
நாயர் கொடுத்த சூடான மெது வடையை, சட்னியில் புரட்டி வாயில் போட்டபடியே, ''மாநகராட்சி நிர்வாகம், மந்தமா செயல்படுது பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார், அன்வர்பாய்.

''எந்த ஊருலங்க...'' என, விசாரித்தார் அந்தோணிசாமி.

''மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வராங்க... மாநகராட்சி சார்புல, சித்திரை வீதியில, பல லட்சம் ரூபாய் செலவுல, போன வருஷம், 'பேவர் பிளாக்' கற்களை பதிச்சாங்க பா...

''சமீபத்துல, குடிநீர் குழாய் பதிக்கிறதுக்காக, 'பேவர் பிளாக்' கற்களை பெயர்த்து எடுத்துட்டாங்க... பல மாசமாகியும், குழாய் பதிக்கிற பணிகள், ஆமை வேகத்துல நடக்குது... இதனால, சித்திரை வீதியே குண்டும், குழியுமா கிடக்குது பா...

''பக்தர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணியரும் கோவிலுக்குள்ள போக முடியாம, ரொம்பவே சிரமப்படுறாங்க... 'சீக்கிரமே பணிகளை முடிங்க'ன்னு கோவில் நிர்வாகம் கேட்டும், மாநகராட்சி தரப்பு கண்டுக்கவே இல்லை பா...'' என்றார், அன்வர்பாய்.

''கறுப்பு ஆடுகளை களை எடுத்தா தான், போலீஸ் துறை உருப்படுமுங்க...'' என, அடுத்த தகவலுக்கு சென்றார், அந்தோணிசாமி.

''எங்கே வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''சென்னை, ஆயிரம் விளக்கு பகுதி, தி.மு.க., புள்ளியும், தி.நகர் பகுதி, அ.தி.மு.க., புள்ளியின் ஆதரவாளர்களும், வடபழநியில ரெண்டு சூதாட்ட கிளப்களை நடத்துறாங்க... இந்த ரெண்டு கிளப்கள்லயும், சமீபத்துல போலீசார், 'ரெய்டு' நடத்தியிருக்காங்க...

''ஆனா, அதுக்கு முன்னாடியே, போலீஸ்ல இருக்கிற சில கறுப்பு ஆடுகள் மூலமா, கிளப்களுக்கு தகவல் போயிடுச்சுங்க... இதனால, கிளப்களை நடத்தினவங்க நழுவிட்டாங்க... அங்க வேலை பார்த்த ஊழியர்களையும், சீட்டாட வந்தவங்களையும் மட்டும், போலீசார் அள்ளிட்டு போனாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''இந்த முறை, எப்படியாவது ஜெயிச்சு காட்டணும்னு, உருக்கமா சொல்லியிருக்கார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.

''எந்தக் கட்சியில, யாருங்க இப்படி சொன்னது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னை, கோயம்பேடு, தே.மு.தி.க., அலுவலகத்துல, சமீபத்துல, அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடந்துச்சோல்லியோ... இதுல, ரெண்டு நிமிஷம் மட்டும் பேசிட்டு, தன் அறைக்குள்ள விஜயகாந்த் போயிட்டார் ஓய்...

''கூட்டம் முடிஞ்சதும், ஒவ்வொரு மாவட்டச் செயலரையும் தன் அறைக்கு, விஜயகாந்த் கூப்பிட்டு, சில நிமிஷங்கள் பேசியிருக்கார்... அப்ப, 'நான் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி... எப்படியாவது பாடுபட்டு, உள்ளாட்சி தேர்தல்ல ஜெயிச்சிடுங்க... அப்ப தான் கட்சிக்கு எதிர்காலம் இருக்கும்'னு உருக்கமா சொல்லி அனுப்பியிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

பேசியபடியே, மெது வடைகளை நண்பர்கள் காலி செய்திருக்க, அடுத்து வந்த ஏலக்காய் டீயை குடித்து முடித்து, அனைவரும் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • S.V.SRINIVASAN - Chennai,இந்தியா

    ஊர்ல இருக்கிறவன்லாம் குடிச்சே அவனவன் குடியை கெடுத்திகிட்டுருக்கிற நிறுவனத்து பனி நியமனத்தில் எதுக்குயா லஞ்சம் வாங்கிறீங்க அதுலதான் நிறைய வருமானம் வருதே அதுல பங்கு போட்டுக்க வேண்டியதுதானே. ஏதோ இருக்கிற நாலு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குது அதுலயும் லஞ்சமா ? இவங்கள கேட்க ஆளே இல்லையா ?

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கஷ்டப்பட்டுக் கட்சியை வளர்த்தவர், லட்டு போல வந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் ‘கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத்து’விட்டு இப்போது உடல் தளர்ந்து உள்ளாட்சிக்கே தொண்டர்களிடம் கெஞ்சும் நிலை வந்துவிட்டதே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement